மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-44 (வரலாறு-பாகம்-2)

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-44 (வரலாறு-பாகம்-2)


ஹேவாஹெற்றை அறிமுகம் - 44
சிங்கள மன்னர்களது காலமுதல் நன்கு அறியப்பட்ட நிருவாக அலகுகளில் ஒன்றாக விளங்கிய ஹேவாஹெற்றை மத்திய பிரதேசத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்ட நிர்வாகப் பகுதிகளுள் ஒன்றாகும். 1959ம் ஆண்டு நியமிக்கப்பட்ட  வடுகொடபிட்டிய தேர்தல் தொகுதி ஆணைக்குழுவின் சிபார்சுகளுக்கமைய ஹேவாஹெற்றை தனி அரசியல் தொகுதியாக அறிமுகஞ செய்யப்பட்டிருக்கின்றது. அக்காலை கண்டி இராச்சியத்தில் காணப்பட்ட தும்பறை. யட்டிநுவரை, ஹேவாஹெற்றை, ஹாரிஸ்பத்துவை, உடுநுவரை ஆகிய ஐந்து நிர்வாகப் பிரிவுகளிலும் 39769 முஸ்லிம்கள் வாழ்ந்ததாகப் புள்ளிவிபரங்கள் உறுதி செய்கின்றன. அவர்களுள்  1371 முஸ்லிம்கள் ஹேவாஹெற்றை நிர்வாகப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

விசாலமான ஹேவாஹெற்றைத் தேர்தல் தொகுதி இன்று பாத்தஹேவாஹெற்றை, தெல்தொட்டை என இரு பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்டிருக்கின்றது. 112 கிராம அதிகாரிப் பிரிவுகளையும் 282 கிராமங்களையும் உள்ளடக்கிய ஹேவாஹெற்றை 123 சதுரக் கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட தேர்தல் தெகுதியாகும்.  ஹேவாஹெற்றையின் இரு செயலகப் பிரிவுகளிலும் சுமார் ஒரு இலட்சம் பேர் வாழ்ந்ததாக 2005ம் ஆண்டைய உத்தேச மதிப்பீடுகளிலிருந்து அறிய முடிகின்றது.  அவர்களுள் பாத்த ஹேவாஹெற்றைச் செயலகப் பிரிவில் 56046 பேரும்  தெல்தொட்டை செயலகப் பிரிவில் 36138 பேரும் அடங்குவர்.

தெல்தொட்டைச் செயலகப் பிரிவு இருபத்தொன்பது  கிராம அதிகாரிப் பிரிவுகளையும், எழுபத்திரண்டு  கிராமங்களையும்  கொண்டதாகும்.   கண்டி நகரிலிருந்து சுமார் முப்பது கிலோ மீற்றர் தூரத்தில், தெல்தொட்டை கடல் மட்டத்திலிருந்து   சுமார் 4200 அடி உயரத்தில் அமைந்திருக்கின்றது.

தெல்தொட்டைப் பிரதேசத்தில்  முஸ்லிம்கள் செறிவாக வாழும் குடியிருப்புக்களாக கலஹா, பத்தாம் பள்ளி, ரெலிமங்கொட, மெதகெகில, வனஹபுவ, வட்டகேபொத்த, பள்ளேகம விளங்குகின்றன. தெல்தொட்டையின் எல்லையில் அமைந்திருக்கும் உடுதெனிய கிராமம்  தலாத்துஓயா பிரதேச செயலகப் பிரிவோடு இணைக்கப் பட்டிருக்கின்றது. மூவினத்தவர்களும் கனிசமான எண்ணிக்கையினராக வாழும்  தெல்தொட்டைப் பிரதேசத்தில் சுமார் இருபதுநாயிரம் முஸ்லிம்கள்  வாழ்ந்து வருகின்றனர். ஒன்பது ஜாமிஆ மஸ்ஜிதுகளையும்  ஐந்து தக்கியாக்களையும், ஐந்து முஸ்லிம் பாடசாலைகளையும் கொண்ட தெல்தொட்டை செயலகப் பிரிவில் கனிசமான பெருந்தோட்டத் தொழிலாளர்களும்  வாழ்கின்றனர். பிரதேசத்தில் வாழும் தமிழ்க்குடிகளில்  தமிழ்த்தோட்டத் தொழிலாளர்களும் ஒரு பகுதியினராவர். தமிழ்க்குடிகளை  தமிழ்த்தோட்டத் தொழிலாளர், பூர்வீகத் தமிழர், இந்திய வர்த்தக சமூகத்தவர் என  மூன்று பகுதியினராக  நோக்க முடியும். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தெல்தொட்டை செயலகப் பிரிவில் 2009ம் ஆண்டைய உத்தேச மதிப்பீட்டிலிருந்து  33494 பேர் வாழ்ந்ததாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

மக்கள் தொகை :
சிங்களவர்                    13,676 பேர்      41%
தமிழர்                            11,668 பேர்      34%
முஸ்லிம்கள்                  7,922 பேர்      24%
வேறும்                            228 பேர்          1%

குடும்பங்களது எண்ணிக்கை:
சிங்களக் குடும்பங்கள்  3928
தமிழ்க் குடும்பங்கள்;     1732
முஸ்லிம் குடும்பங்கள்   1190
வேறும்                                 7

தமிழர்கள் எண்ணிக்கையில் தோட்டத்தொழிலாளர் கணிசமான தொகையினராவர். அவர்கள் பிரதேசத்தைச் சுற்றியுள்ள பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
2009ம் ஆண்டைய உத்தேசக் கணக்கெடுப்பில்

பிரதான தோட்டங்களில் வாழ்ந்த மக்கற்றொகை:

தெல்தொட்ட வத்தை      3092
லூல்கந்தர வத்தை          3746
கிரேட்வெளி வத்தை       1938
கலஹா வத்தை                 1652
போப்பிட்டிய வத்தை       1091

தெல்தொட்டை செயலகப் பிரிவு 57.9 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டிருக்கின்றது.  அதன் பிரதான எல்லைகளாக வடக்கே பாத்த ஹேவாஹெற்றை செயலகப் பிரிவும், கங்கவட்டக் கோரள செயலகப் பிரிவும், மேற்கே தொளுவ செயலப் பிரிவும், கிழக்கு - தெற்காக - நுவரெலிய மாவட்டத்தின் ஹந்குரங்கெத்த செயலகப் பிரிவும் காணப்படுகின்றன.

பிரதேசத்தின் பிரதான பணப்பயிர்களாக தேயிலையும், தென்னையும் விளங்குவதுடன்,  முதன் முதலாக தேயிலை அறிமுகஞ் செய்யப்பட்ட லூல்கந்தர தோட்டமும் தெல்தொட்டைச் செயலகப் பிரிவுக்குட் பட்டிருப்பது  சிறப்பானதாகும்.  பிரதேசத்தில் சுமார்  308.20 ஹெக்டையார் நிலப்பரப்பில் தேயிலை நடப்பட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
(தொடரும்)

Post a Comment

Previous Post Next Post