
கைகேயிகருத்து
மயில்குலத்தில் மூத்ததற்கே கொண்டையுடன் தோகை
விரிக்கும் உரிமைதான் உண்டு.
மனுக்குலத்தில் மூத்தவன் தானே இராமன்!
மனமினிக்கும் செய்திதான் போ.
கூனிகாட்டியவழி
இதைக்கேட்டும் கூனி அசரவில்லை! அங்கே
கடைவிரித்தாள் மாசைக் குழைத்து.
கைகேயி நெஞ்சிலே வக்கிரக் காற்று
பகைமூளத் தூண்டியது பார்.
போரிலே சம்பரனை வீழ்த்தினாய் சாரதியாய்!
வீரத்தைப் போற்றி இருவரம்
பாரறிய மன்னன் தசரதன் தந்தானே!
பாமகளே! இப்பொழுதே கேள்!
கைகேயி தூண்டிலிலே சிக்கிவிட்டாள்! தூண்டலுக்குக்
கைப்பாவை ஆனாள் சிரித்து.
தசரதன் ஓடிவந்தான்! கைகேயி கோலம்
பதைபதக்க வைத்ததே அங்கு.
துவண்டிருந்த தன்னவளைத் தூக்க விரைந்தான்!
அவன்கரத்தைத் தட்டிவிட்டாள் மாது.
காரணத்தைக் கேட்டான்! வரங்களைத்தா வென்றாள்!
ஆரணங்கே கேளென்றான் பார்த்து.
பரதனுக்கு நாடும் இராமனுக்குக் காடும்
இருவரத்தால் பாய்ச்சினாள் அம்பு.
தசரதன்வரம்தருதல்
துடித்தான் துவண்டான் மனைவியின் தாளில்
நெடுஞ்சாண் கிடையாய் வீழ்ந்து.
நிலைமாற வில்லை! வரமில்லை என்றால்
உயிர்விடுவேன் என்றாள் சினந்து.
சூழ்நிலையின் கைதியாகி மன்னன் இருவரத்தைக்
கொள்கவெனத் தந்தான் துவண்டு.
கைகேயிராமனுக்குஇட்டகட்டளை
என்பரதன் நாடாள்வான்! காடேக வேண்டும்நீ!
மன்னராணை என்றாள் கனன்று.
இராமன்விடைபெறுதல்
மன்னரே சொல்லாமல் தாய்நீங்கள் சொன்னாலும்
மண்ணில் மறுப்பேனோ நான்?
தம்பிக் கரசுரிமை !வாழ்த்துகின்றேன்! காடுசெல்ல
உங்களாசி் வேண்டுகிறேன் நான்.
கோசலையின்அறிவுரை
உன்தம்பி நாடாள ஒற்றுமையாய் வாழுங்கள்
என்றுசொன்னாள் கோசலை தான்.
தந்தையின்மற்றொருகட்டளை
அம்மாநான் கானகம் செல்லுமாறு கட்டளையைத்
தந்தை எனக்கிட்டார் கேள்.
கோசலையின்நிலை
கேட்டதும் தாயோ துடித்தே மயங்கினாள்
காற்றில் சருகானாள் காண்.
வசிட்டன்வருதல்
கோசலை ஓலத்தைக் கேட்டான் வசிட்டன்தான்!
கூடதிர நின்றான் மலைத்து.
தசரதன் மாளிகைக்குச் சென்றான்! அரசன்
அசைவற்று வீழ்ந்திருந்தான் அங்கு.
(தொடரும்)
0 Comments