Ticker

6/recent/ticker-posts

பெண்ணியமும்,பெண்ணியத்திற்கு சவாலாகியுள்ள இந்திய நீதிபதியின் தீர்ப்பும்!


பெண்ணியம் என்பது, Feminism என்ற ஆங்கிலச்  சொல்லின் தமிழாக்கமாகும். இது Femina என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்தது.பெண்ணின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் வழி வகுக்கும் செயல்பாடுகள் அனைத்தையும் இச்சொல் தாங்கி நிற்கின்றது.

1894ல் வெளிவந்த 'ஒக்ஸ்போர்ட்' ஆங்கில அகராதி ‘பெமினிசம்’ என்ற சொல்லுக்கு, 'பெண்ணின் தேவையை நிறைவேற்ற அவர்கள் சார்பாக வாதாடுவது, போராடுவது' என்று பொருள் கூறுகின்றது. 1890க்கு முன்பு ‘Womanism’ என்றிருந்த இது பின்னர் ‘Feminism’ எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

பெண்ணின் தாழ்வுபட்ட நிலையை மாற்ற முயலும் அனைத்து போராட்ட முறைகளையும் உள்ளடக்கி, மனித சமூகத்தில் பெண்ணுக்கு மதிப்புக் கிடைக்கப் பாடுபடுவதும்,பெண் என்பதால் ஒருவர் எதிர்கொள்ள நேரும் துயரத்தைக் களையப் பாடுபடுவதும், வாழ்வின் எல்லாத் தளங்களிலும் ஆண், பெண் இருபாலரும் சமமானவர்களே என்ற சமத்துவக் கருத்தை உருவாக்கப் போராடுவதும் பெண்ணியத்தின் கோட்பாடாகும்.

பெண்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராக பெண்களே குரல் எழுப்ப வேண்டும் என்பது இன்றைய பெண்ணிய இயக்கங்களின் அடிப்படை அம்சமாகும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் பொருளாதாரத் தன்னிறைவை அடையும் நிலை  பெண் விடுதலையாகும். தற்காலப் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை சமூக, கலாசார, மத, இன எல்லைகளைக் கடந்ததோர் அடிப்படை அமைப்பாகக் கருதுகின்றனர்.

19-20 நூற்றாண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவிலும், ஐக்கிய இராச்சியத்திலும் பெண்களின் வாக்குரிமை உட்பட சட்ட உரிமைகள் அனைத்யையும் வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் 'முதல் அலைப் பெண்ணியம்' என்று கருதப்படுகிறது. அந்தவகையில், பாலினத் தற்காப்புக்காக பேனாவை கையிலெடுத்த முதல் பெண் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலியப் பிரெஞ்சு எழுத்தாளர் கிறித்தைன் தெ பிசான் (1364-1430) ஆவார்.
பெண்களுக்கான சிக்கல்கள், சமூகச் சிக்கல்களாக உணரப்படுவதால் அவற்றிற்குத் தீர்வு காணவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

சாதி, இனம், அதிகாரம், வறுமை, ஒழுக்கம், வரதட்சணை, பொருந்தா மணம், காதல், கற்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெண்களுக்குச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பெண்கள் சுயக்கட்டுப்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பின் மூலம் சிக்கல்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு வாழவேண்டும் என்பது அவ்வப்போது வலிபுறுத்தப்பட்டுவரும் சுலோகமாகும்.

பெண்கள் கல்வி கற்கத் தொடங்கியதனால் 'பெண்ணியம்' தோன்றியது; பெண்ணியம் தோன்றியதனால் பெண்கள் கல்வி கற்கலாயினர். மொத்தத்தில் பெண் விடுதலைக்கு அடித்தளம் பெண்கல்வியே!

பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு சமூகத்தையே வாழ வைப்பதற்கு சமம்; பெண் கல்வி கற்பதன் மூலமாக புதுமைமிக்க சிந்தனைகளைப் பெறுகிறாள். உலக அறிவை வளர்த்துக் கொள்வதோடு, எதையும் தாங்கிக்கொள்ள கூடிய ஒரு மனோபாவம், எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் துணிவு என்பன அவர்களுக்குக் கல்வியின் மூலமாகவே வந்தடைகின்றது.  அதனால், இன்றைய காலகட்டத்தில் பெண்ணிய சிந்தனை மிகவும் உச்ச நிலையில் காணப்படுவதற்கு முதன்மையான காரணம் கல்வி எனலாம்! இன்று பெண்ணுரிமை, பெண்ணியம், பெண்களுக்கு பாதுகாப்பு என பல தலைப்புகள்  விவாதப் பொருளாகி வருவதற்கு அடிப்படையான பெண்கல்வியேயாகும். 

ஒரு பெண் பொதுவாழ்வில் ஈடுபட வேண்டுமென்றாலும், சமூகத்தில் முக்கிய அங்கம் வகிக்க வேண்டுமென்றாலும் அவளுக்குக் கல்வி அத்தியாவசியமான ஒன்றாகும். அதனால்,கல்வி பெண்களுக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்குகின்றது என்பதனை எவரும் மறுக்க முடியாது! 

பெண்களின் நிலை உயர்ந்தாலும், அவர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றன. அதே நேரத்தில் தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தைரியமாக பொது வெளியில் கூறி, சட்ட ரீதியாக குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருகின்றனர்.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்தொன்று இன்று பெண்ணியத்திற்கு ஒரு சவாலாகி, தற்போது அது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

உத்தரப்பிரதேசத்திலுள்ள கஸ்கஞ் என்ற இடத்தில் பாதையில் நடந்து சென்ற  சிறுமிக்குத் தொல்லை கொடுத்த இரண்டு பேர், அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதியப்பட்டிருந்தது. 
இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டபோது, வழக்கு விசாரணையில் பேசியுள்ள நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபடுவதற்கு தயாராவதும், பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது என்றும், மார்பகத்தை பிடிப்பதோ அல்லது பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பதோ பாலியல் வன்கொடுமை முயற்சியாகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள விடயம் இன்று இந்தியாவில் மட்டுமன்றி முழு உலகிலும்  சர்ச்சைக்குரிய பேசு பொருளாகியுள்ளது.

இவ்வாறான சட்டத் தீர்ப்புகளும் எதிராக, பெண்ணியம் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் நிலையில் பெண்கள் இருந்தனர். இன்று தைரியமாக எதனையும் எதிர்த்து போராடும் நிலைக்கு பெண்கள் வந்துள்ளனர். இதற்கு அடிப்படைக் காரணம் பெண்கல்வி என்றால் மிகையாகாது.

கல்வியறிவின்மை, பொருளாதார நிலை, சமூக கட்டுப்பாடுகள் ஆகிவையே பெண் சுதந்திரத்திற்கு தடை கற்களாகப் பார்க்கப்படுகிறது. இதில் கல்வியறிவு பெற்று விட்டாலே மற்ற இரண்டு தடைகளும் தானாக ஒதுங்கிவிடும்!

செம்மைத்துளியான்

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments