Ticker

6/recent/ticker-posts

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-6


முனிவன் கைகேயியிடம் வேண்டுதல்
ராமனுக்கு ஆட்சியை, மன்னனுக் கின்னுயிரை
கோமகளே தந்துபழி தீர்.

கைகேயிமறுமொழி
முனிவரே வாக்கு தவறினால் சாவேன்!
எனக்கூறி நின்றாள் வெகுண்டு.

இராமன்காடேகும்செய்தி
மக்கள்கருத்து
பரதன் இசையமாட்டான் என்றே உருகி
ஒருசிலர் பேசினார் அங்கு.

ராமனோ கானகம் சென்றுவிட்டு மீண்டுவரும்
ஈனத்திற் கொப்பமாட்டான் பார்.

மணிமகுடம் தூமகேது கோளாகி ராமன் 
வனம்செல்ல வைத்ததென்றார் அங்கு.

இத்தகைய தீங்கினைக் கேட்டபின்பும் கண்டபின்பும்
எப்படி வாழ்கின்றோம்? சொல்.

கோசலைபுலம்புதல்
கானகத்தில் மைந்தனாம்!  வானகத்தில் என்னவராம்!
நானிங்காம்!  நீதியா? சொல்

கணவனைத் துச்சமென எண்ணிய கைகேயி
எப்படி மன்றாடிக் கேட்டான் தசரதன்!
அப்பப்பா! கைகேயி கல்.

காரிகை வஞ்சகத்தின் வக்கிரம் தாங்காமல்
பாரில் துயிலிழந்தான் நொந்து.

இராமன் இலக்குவன் மரவுரிக் கோலத்தில்
வசிட்டன்மனநிலை.
ஊனக்கண் ஞானக்கண் கொண்டே அவர்முகத்தை
தேனகத்தைப் பார்த்தான் அளந்து.

சுமத்திரையிடம்விடைபெறுதல்
தாய்ப்பசுவை சேய்க்கன் றிரண்டும் பிரிதல்போல்
பார்த்திருந்தாள் அங்கே அழுது.

இராமனுக்குஇலக்குவன்மறுமொழி
நீரிருந்தால் மீன்களுண்டு பூக்களுண்டு! எங்களுடன்
யாரிருந்தால் வாழ்வோம்?பகர்.

தாய்நிகர் சீதையும், நானுமிங்கே நிம்மதியாய்
வாழ்வதற்கு யார்வேண்டும்? சொல்.

மக்களின்துயரம்
அரசுரிமை ஏற்று மணிமகுடம் ஏந்தும்
உயர்நிலையைக் காணவில்லை யே!

கானகம் செல்லும் அவலத்தைப் பார்க்கவா
ஊன்கண்ணைத் தாங்குகிறோம் இங்கு?

சீதைஅதிர்ச்சி
அரசகோலம்  காண்பதற்குக் காத்திருந்தாள் சீதை!
மரவுரியில் பார்த்தாள்  அதிர்ந்து.

மாமியர் கண்ணீரைப் பார்த்தாள் கலக்கமுடன்!
தேவியின் தேம்பலைப் பார்.

ராமன்கூறுதல்
நாடாள்வான் என்தம்பி!  காடேகி நான்வருவேன்!
மாடத்தில் வாழ்ந்திரு நீ.

சீதைவருந்துதல்
கானகம் என்பதற்கோ மன்னனில்லை என்பதற்கோ
சீதை அழவில்லை அங்கு.

கானகம் நான்செல்வேன் தேனகத்தில் நீயிருப்பாய்
வேலெனக் குத்தியது சொல்.

கூடறுக்கும் சொற்கேட்டே அங்கே துடித்தழுதாள்!
ஈடற்ற சீதை தவித்து.

ராமன்சீதையைத்தேற்றுதல்
காட்டில் நடந்தால் பஞ்சுமலர் உன்பாதம்
நோகும் உறுத்தும்  உணர்.

சீதைமறுமொழி
பெண்ணென்றோ உன்மனைவி என்றோ இரங்காமல்
எண்ணிப் பிரிவதேன் சொல்?

கானகத்தில்  நீவாழும் அப்பிரிவைக் காட்டிலும்
வேனலாமோ?  அக்காடு? சொல்.

இராமனின்மனநிலை
சீதை நிலையுணர்ந்து தத்தளித்தான் ராமனங்கே!
யாதுசெய்வேன்? என்றான் உழன்று.

சீதைவருந்தாதுநடத்தல்
சீதை முணங்காமல்  ராமனைப் பின்தொடர்ந்தாள்!
தோகை பதிபக்தி பார்.

ராமன்வருகிறானா?தசரதன்.
தேரோசை கேட்டதும் மன்னன் முனிவனிடம்
ராமனா? கேட்டான் துடித்து.

தசரதன்உயிர்பிரிதல்
ஞானமுகம் வாடும் குறிப்பறிந்து மன்னனோ
ஊனுடல் சாய்த்தான் தளர்ந்து.

மூவரும் காடுசென்றார்! சொன்னான் சுமந்திரன்!
ஆவியை நீத்தான் அதிர்ந்து

(தொடரும்)

Post a Comment

0 Comments