டெஸ்ட் தொடரை வென்றது ஆஸ்திரேலியா

டெஸ்ட் தொடரை வென்றது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் சென்று 3 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ராவல்பிண்டி, கராச்சி நகரில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தது. 

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய  ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கவாஜா 91, கிரீன்79, அலெக்ஸ் கேரி 67, ஸ்மித் 59 ரன்கள் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா தலா 4 விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அப்துல்லா ஷபிக் 81 ரன், அசார் அலி 78 ரன், கேப்டன் பாபர் அசாம் 67 ரன்கள் எடுத்தனர். 

ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட், மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட் வீழ்த்தினர். 

123 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா, 2வது இன்னிங்சில் 60 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. கவாஜா பொறுப்புடன் ஆடி சதமடித்து 104 ரன்னில் வெளியேறினார். டேவிட் வார்னர் 51 ரன்னில் அவுட்டானார்.

இதனால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 351 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. நான்காம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன் எடுத்தது.

இந்நிலையில், கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பாகிஸ்தான் வெற்றி பெற 278 ரன்கள் தேவைப்பட்டது. ஆரம்பம் முதல் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் அரை சதமடித்தனர்.

இதனால், பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 115 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோற்றுப் போனது  இமாம் உல் ஹக் 70 ரன்னும், பாபர் அசாம் 55 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லின் 5 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர் .

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0  என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி அசத்தியது. 

ஆட்டநாயகன் விருது பாட் கம்மின்சுக்கும், தொடர் நாயகன் விருது உஸ்மான் கவாஜாவுக்கும் வழங்கப்பட்டது.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post