உக்ரைன் போர் மூண்டதற்கான முக்கியமான மூணு காரணிகள்.

உக்ரைன் போர் மூண்டதற்கான முக்கியமான மூணு காரணிகள்.

உக்ரைன் போர் பற்றி ஏதாவது பதிவு போடுங்களேன் என்றார் நண்பர் பிரேம்குமார்  அதனால் இந்தப் பதிவு (ஓகோ! யாராவது கேட்டுக்கொண்டால் மட்டும்தான் நீங்க முகநூல்ல பதிவு போடுவீங்க? அப்படித்தானே?)

உக்ரைன் போர் எதனால ஏற்பட்டுச்சுன்னு ரொம்ப சிம்பிளா விளக்கிற முடியும். கருங்கடல், காஸ்பியன் கடல், இரண்டுக்கும் நடுவே இருக்கிற காகசஸ் மலைப்பகுதி. இந்த மூணும்தான் உக்ரைன் போர் மூண்டதற்கான முக்கியமான மூணு காரணிகள்.

சோவியத் ரஷியா மகோன்னதமாக வாழ்ந்த காலத்தில் சதுரங்கப் பலகையிலே ராஜா, ராணி, பிஷப், நைட், ரூக் பின்வரிசை மாதிரி சோவியத் ரஷியா இருந்தது. அதுக்கு பாதுகாப்பா இருக்கிற 8 முன்வரிசை பான் காய்கள் மாதிரி கிழக்கு ஜெர்மனி, போலந்து, செக்கோஸ் லோவேகியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா, யூகோஸ்லாவியா, அல்பேனியா மாதிரியான 8 பொதுவுடைமை நாடுகள் இருந்தன. 

(இதில், யூகோஸ்லாவியாவும், அல்பேனியாவும் சோவியத் ரஷியா கூட கொஞ்சம் முரண்டு பிடிச்சுக்கிட்டே இருந்தது தனிக்கதை)

சோவியத் ரஷியா 15 நாடுகளாக சிதறினபோது, இந்த முன்வரிசை களப்பணியாளர்களை எல்லாம் அமெரிக்கா தன் செல்வாக்கால் கைக்கொண்டது. கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனியோட இணைந்து அமெரிக்க ஆதரவு ஒரே ஜெர்மனியாக மாறியது.

செக்கோஸ்லோவேகியா செக் குடியரசு, ஸ்லோவேகியான்னு இரண்டாக உடைந்தது.

யூகோஸ்லாவியா உள்நாட்டுப் போரால் சின்னாபின்னமாகி பல நாடுகளாக சிதறியது.

போலந்து, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா எல்லாம் அமெரிக்காவால் நேட்டோ என்கிற ’வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள்’ ராணுவக் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டன. 

(அட்லாண்டிக் கடலுக்கும் போலந்து, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா மாதிரியான நாடுகளுக்கும் என்ன சம்பந்தம்னு யாரும் கேட்கக்கூடாது)

இப்படி ரஷியாவோட முன்வரிசை பாதுகாப்பு அரண்களைத் தகர்த்து தன் வசமாக்கிக் கொண்டது அமெரிக்கா. 
அடுத்ததா சோவியத் ரஷியாவோட ஒருகாலத்தில் இணைஞ்சிருந்த பால்டிக் நாடுகள்னு சொல்லப்படுற எஸ்தோனியா, லாத்வியா, லிதுவேனியா நாடுகளை அமெரிக்கா அள்ளி அரவணைச்சிக்கிச்சு. இந்த நாடுகள் எல்லாம் மேற்கத்திய நாடுகளின் நேட்டோ கூட்டணியில் இப்போது அங்கம் வகிக்கின்றன.

அதேப்போல அடுத்தகட்டமா சோவியத் ஒன்றியத்திலே ஒருகாலத்திலே அங்கமா இருந்த ஜார்ஜியா, உக்ரைன் மாதிரியான நாடுகளை நேட்டோ கூட்டணியில் சேர்க்கிற வேலையிலே அமெரிக்கா இறங்கிச்சு.

அதுக்குக் காரணம் முதல்ல சொன்ன க.கா.கா. அதாவது கருங்கடல், காஸ்பியன் கடல், காகசஸ் மலைப்பகுதிதான்.
காசகஸ் பகுதி இருப்பிட முதன்மைத்தன்மை வாய்ந்த இடம். நாளைக்கு ஈரான் கூடவோ, ரஷியா கூடவோ அமெரிக்காவுக்கு போர் நடந்தால், காகசஸ் பகுதியிலே இருக்கிற ஜார்ஜியா அமெரிக்காவுக்கு சிறந்த தளமா இருக்கும். அதனால ஜார்ஜியாவை எப்படியாவது நேட்டோ கூட்டணியில் சேர்க்கணும்ங்கிறது அமெரிக்காவோட எண்ணம்.

அடுத்ததா கருங்கடல், காஸ்பியன் கடல் இரண்டுமே எண்ணெய் வளம், இயற்கை எரிவாயு வளம் நிறைந்த பகுதிகள். 

‘இந்த இடத்தில் ரஷியாவோட செல்வாக்கை எப்படியாவது இல்லாம ஆக்கணும். ரஷியாவை இந்த ஏரியாவை விட்டே காலி பண்ணனும்’ என்கிறது அமெரிக்காவோட நீண்டகால திட்டம். அதுக்கு ஒரே வழி, ரஷியாவுக்கும் இந்தப் பகுதியில் இருக்கிற முன்னாள் சோவியத் குடியரசு களுக்கும் இடையே சண்டையை மூட்டி விடுறதுதான்.
இதைத்தான் அமெரிக்கா டைம்டேபிள் போட்டு ரொம்ப கவனமாச் செய்து வருது.

ரஷியாவின் காகசஸ் பகுதியிலே இருக்கிற செசன்யா பகுதி ஏன் திடீர்னு தனிநாடு கேட்டுப் போராடிச்சு? செசன்யா போர் ஏன் நடந்துச்சுன்னு உங்களுக்கு இப்ப புரிஞ்சிருக்கும்.

சோவியத் ரஷியாவிலே இருந்து பிரிஞ்சுபோன பல நாடுகள்ல எத்தனையோ நாடுகள் ரஷியாவுக்கு எதிரான போனாலும் அதைப்பத்தி ரஷியா கவலைப்படல்லே.

ஆனா சோவியத்தில் இருந்து பிரிஞ்ச பெலாரூஸ், உக்ரைன் இந்த இரண்டு நாடுகளும் ரஷியாவுக்கு ரொம்ப வேண்டப்பட்ட பங்காளி நாடுகள். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மொழி பேசுற நாடுகள் இவை.

இந்த உக்ரனை, ரஷியாவுக்கு எதிரா திருப்பிவிட அமெரிக்கா எடுத்த முயற்சிதான் உச்சகட்ட எரிச்சலை ரஷியாவுக்கு ஏற்படுத்திருச்சு.

உக்ரைன் நாட்டை உசுப்பிவிட்டு நேட்டோ கூட்டணியில் இணைத்துக் கொண்டால், கருங் கடலுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான தொடர்பு கட்டாகிவிடும். இதனாலும்கூட உக்ரைனை தன்பக்கம் இழுப்பதில் அமெரிக்கா ரொம்ப ஆர்வமாக இருக்குது.

இது தெரிந்துதான் கருங்கடலில் உள்ள உக்ரைனுக்குச் சொந்தமான கிரிமியா பகுதியை ரஷியா அவசர அவசரமாக்க் கைப்பற்றி தனதாக்கிக் கொண்டது.

(கிரிமியா தீபகற்பத்தில் செவஸ்டபோல் கடற்படைத்தளத்துக்குப் போட்டியாக ருமேனியாவின் மேற்கே கருங்கடல் கரையில் அமெரிக்கா ஒரு கடற்படைத்தளம் வைத்திருப்பது இன்னொரு தனிக்கதை)

இப்படி, ரஷியாவை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அமெரிக்கா வெறுப்பேற்றி வந்த நிலையில்தான் பொறுத்தது போதும் என்று உக்ரைனுக்கு எதிராக  பொங்கியெழுந்து போர் தொடுத்திருக்கிறார் ரஷிய அதிபர் புதின்.

உக்ரைன், ஜார்ஜியா போன்ற நாடுகளை நேட்டோவில் சேர்ப்பது என்பது ரஷியாவின் அடி மடியில் கைவைக்கிற மாதிரி. அதெல்லாம் நடந்தால் அதன்பிறகு ரஷியாவுக்கு பாதுகாப்பு என்பது துளிகூட இல்லாமல் போகும். பத்து பைசாவுக்குகூட ரஷியா தேறாது. இதனால்தான் போர் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் புதின்.

அதிலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அடிவாங்கி ஓய்ந்திருக்கும் இந்தநேரத்தில், உக்ரைன் போருக்கு இதுதான் உகந்த நேரம் என்று துணிந்து களத்தில் கால்வைத்திருக்கிறார் புதின்.

சரி. அது இருக்கட்டும். உக்ரைன், அமெரிக்க ராணுவக் கூட்டணியான நேட்டோவில் சேரக்கூடாதா? அப்படி சேர்ந்தால் ரஷியாவுக்கு என்ன என்பீர்கள்?

1962ஆம் ஆண்டு, அமெரிக்காவுக்குப் பக்கத்திலே இருக்கிற கியூபாவில் சோவியத் ரஷியா ஏவுகணைகளை நிலைநாட்டியபோது அமெரிக்கா என்ன குதிகுதித்தது? ‘என் பாதுகாப்பே போச்சு’ன்னு அமெரிக்கா கதறவில்லையா?

அதைப்போலத்தான் உக்ரைன் நேட்டோவில் சேரப் போகிறது என்றதும் ரஷியா அதை எதிர்க்கிறது. 

ஒருவகையில் பார்த்தால், உக்ரைன் போர் விஷயத்தில் உண்மையான வில்லன் அமெரிக்காதான். 

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷியர்கள் அதிகம் வாழும் லுகான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகள் உக்ரைன் அரசுக்கு எதிராக கிளர்ந்தபோது அமெரிக்கா வாயெல்லாம் பல்லாக அதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. காரணம் இந்த கிளர்ச்சியை சாக்காக வைத்து உக்ரைனை நேட்டோவில் இணைத்து உக்ரைனுக்குள் புகுந்து விடலாம் என்ற எண்ணம்தான் அது.

சரி. உக்ரைன் போர் உக்கிரமாகிவிட்டநிலையில் அடுத்த கட்டம் என்ன?

இந்தப் போரை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து உக்ரைனில் தனக்கு ஆதரவான ஒரு ஆட்சியை ரஷியா நிறுவுவதுதான் ரஷியாவுக்கு நல்லது.

மாறாக உக்ரைன் போர் நீண்டால்,,உக்ரைனுக்கு நவீன ஆயுதங்களை, கூலிப்படைகளை அனுப்பி ரஷியாவை தோல்வியடைய வைக்க அமெரிக்கா முயற்சிக்கும். ஏற்கெனவே ரஷியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா இதே தந்திரத்தைக் கடைபிடித்திருக்கிறது. எனவே உக்ரைன் போர் நீள்வதைத்தான் அமெரிக்கா விரும்புகிறது. அதை டக்கென்று முடித்துக் கொள்ள ரஷியா விரும்புகிறது.

சரி. உக்ரைன் போரில் அமெரிக்கா தலையிட வாய்ப்பு உண்டா? இல்லை குறைவுதான். காரணம்

கிழக்கு ஐரோப்பா பகுதி முழுவதும் ஸ்லாவ் இன மக்கள் வாழுகிற பகுதி. ரஷியா, பெலாரூஸ், உக்ரைன், ‘ஸ்லோ’வேக்கியா, யூகோ’ஸ்லாவியா’ எல்லாம் ஸ்லாவ் இனத்தவர்கள் வாழும் பகுதிகள்தான். யூகோஸ்லாவியா என்றால் தென்பகுதியில் வாழுகிற ஸ்லாவ் மக்களின் நாடு என்று அர்த்தம்.

உக்ரைனில் சண்டையிடும் இரண்டு தரப்புமே ஸ்லாவ் இனமக்களின் தரப்புதான். இந்த இரண்டு தரப்பும் சண்டையிட்டால் அமெரிக்காவுக்கு அது கொண்டாட்டமாகவே இருக்கும். ஆகவே ரஷியா, உக்ரைன் போர், அமெரிக்காவைப் பொறுத்தவரை ரசிக்கத்தக்க போர்.

இதுவே உக்ரைன் நாடு, நார்டிக் இன மக்கள் வாழ்கிற நாடு என்றால் அமெரிக்கா இந்நேரம் கொதிநிலைக்குப் போய் உக்ரைன் போரில் குதித்திருக்கும். அமெரிக்காவின் நாடி நரம்பெல்லாம் துடித்திருக்கும்.

மற்றபடி இப்போது நடப்பது இரண்டு ஸ்லாவிய இன மக்கள் வாழுகிற நாடுகளுக்குள் நடக்கிற போர் என்பதால், சண்டையிடுகிற இரண்டு தரப்பில் யார் செத்தால் என்ன என்று அமெரிக்கா அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.
உக்ரைனில் இப்போது நடக்கும் போர்ப்பாதிப்புக்கு காரணம் ரஷியா அல்ல. உக்ரைன் இந்த அளவுக்கு அடி, உதை வாங்க அமெரிக்காதான் உண்மையான காரணம் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருந்தால் உங்களுக்கு எல்லா நன்மையும் வந்து வாய்க்கும். 

 

மோகன ரூபன் முகநூல் பதிவு 27.02.2022


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post