பாரியன்பன் நாகராஜன் துளிப்பாக்கள்

பாரியன்பன் நாகராஜன் துளிப்பாக்கள்


நீரோடும் ஆற்றில் 
ஆயிரம் கரங்களை விரித்தபடி
ஆதவன்.

காற்றின் 
திசையைத் தீர்மானிக்கிறது
பிரபஞ்ச வெளி.

ஒரு பாதிக் கதவை 
தள்ள வழிவிடுகிறது 
இரு கதவுகளைக் கொண்ட வீடு.

இருட்டும் முன்பு இல்லம் வந்தன
விடியலில் தேடலைத் தொடங்கிய 
பறவைகள்.

யாருமற்ற வீட்டின் முன்பு யாசகன் 
அவனை எட்டிப்பார்த்துச் செல்கிறது 
வெறுமை. 

அதிகாலை வேளை 
புற்களின் தலையில் மாமகுடம் 
உருண்டுத் திரண்ட பனித்துளி. 

களமறிந்து இறக்கு
விலைமதிப்பற்றது
கண்ணீர்த்துளிகள்.

அவள் எதிர்படும் தருணங்களில் 
இனிதே முடிகிறது
எனது பயணங்கள்.

ஏறும்போது உயரம் குறையவும்
இறங்கும்போது உயரம் கூடவும் 
செய்கிறது சிகரங்கள்.
                         
எனக்குள் நிரம்பி விட்டாய்
இனி மகிழ்ச்சியில் குதிக்கும்
என் இதயகுளம்.

புயல் சாய்த்த 
மரத்தின் உயிர்க் கலந்தது 
காற்றோடு காற்றாய்.

அமாவாசை இரவு
எண்ணற்ற நட்சத்திரங்கள்
சிரிக்கும் மத்தாப்பு.

பூவுக்குள் தேன்
கனிக்குள் வண்டு
விழிக்குள் கனவு.

எனது தொலைதல்
உனது தேடல் என்றானபோது
எதற்கும் சம்மதிக்கிறேன்.

வெட்டவெளியில் போக்குவரத்து
நெரிசலின்றி வந்து போகிறது
காற்று.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post