திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-29

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-29

குறள் 32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

மாப்ள... ஒருத்தரோட வாழ்க்கைக்கு ஆக்கமும் ஊக்கவும் தரக்கூடியது அறம் மட்டுந் தான். வேறு எதுனாலயும் எந்த  நன்மையுங் கெடையாது. அதுனால இந்த அறத்தை ஒருக்கயும் மறந்திறக் கூடாது. மறக்கிறது போல கெடுதலானது ஒலகத்துல வேற ஒண்ணும் இல்லை மாப்ள. 

குறள் 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

மாப்ள.. எதாவது நல்லது செய்யணும்னு நெனச்சா, அதை அப்பமே செஞ்சுறணும். அதைத் தள்ளிப் போடக்கூடாது. ஏமுன்னா நாம செய்யுத நல்லது, நம்ம காலத்துக்குப் பொறவும், நமக்குத் துணையா இருந்து நம்ம பேரைச் சொல்லிக்கிட்டே இருக்கும் மாப்ள. 

குறள் 38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

ஒவ்வொரு நாளும் நாம சமூகத்துக்கு தொடர்ந்து  எதாவது நல்லது செஞ்சுட்டே இருக்கணும் மாப்ள. இப்படிச் செஞ்சோமுன்னா, நம்மோட வாழ்க்கைப் பயணத்தை வசதியாக்கித் தரும் படிக்கல்லாக அந்த நல்ல செயல்கள் அமையும். 

குறள் 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

மாப்ள.. நம்ம குடும்பத்து பெரியவங்க மண்டைய போட்ட பொறவு, தெக்குப் பக்கம் வாழ்ந்து கொண்டுதான் இருப்பாவொ. 

அவொளையும், கும்புடுத சாமியையும், வீட்டுக்கு விருந்துக்கு வார ஆளுங்களையும், சுத்தி இருக்க சனங்களையும், கூடவே நம்மளையும் நல்லபடி மதிச்சு நடக்கணும். அது ரொம்ப முக்கியம் மாப்ள.

குறள் 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

மாப்ள.. செலவங்க ஒழுக்கமான வாழ்க்கையை அவங்க  வாழ்றது மட்டுமில்லை.. . மத்தவொளையும் அப்படியே நடக்க வைப்பாவொ. அப்படிப்பட்ட ஆளுங்களோட குடும்ப வாழ்க்கை, எல்லா ஆசா பாசங்களையும் விட்டுட்டு ஒரு துறவி நடத்துத நோன்பு வாழ்க்கையைக் காட்டிலும் சிறப்பானதா இருக்கும் மாப்ள. 

குறள் 59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை.

மாப்ள... ஒருத்தனோட குடும்ப வாழ்க்கை சொல்லி பெருமை படக் கூடிய மாதிரி அமையலன்னு வச்சுக்கோயேன்.. வெளிய தலை காட்டும் போது அவனால கம்பீரமா நடக்க முடியாது மாப்ள. 
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post