திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-3௦

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-3௦


குறள் 51 
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

மாப்ள.. ஒரு வீட்டுக்கு வாக்கப்பட்டு வார ஒரு பொண்ணு, குடும்பத்துக்கு ஏத்த நல்ல பழக்க வழக்கங்களோட இருக்கணும். 

வீட்டுக் காரனோட வருமானத்துக்கு உள்ளயே குடும்பத்தை சீருஞ் சிறப்புமா நடத்தணும். இப்படிப்பட்ட ஒரு வீட்டுக்காரி தான் மாப்ள குடும்பத்துக்கு ஏத்த நல்ல பொண்ணு.

குறள் 60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.

மாப்ள .. ஒரு குடும்பத்துக்கு வாக்கப் பட்டு வந்தவளோட நல்ல பண்பு இருக்கே.. அது தான்  குடும்ப வாழ்க்கைக்கு அழகு. அந்த அழகுக்கு அழகு சேக்கது, அந்த குடும்பத்துல வந்து பொறந்திருக்க நல்ல குணநலன் உள்ள  புள்ளை குட்டிங்கதான் மாப்ள. 

குறள் 64. 
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

ஏ மாப்ள... அமிழ்தம் சாப்பிட்டா எம்புட்டு சுவையா இருக்கும்னு ஒனக்குத் தெரியும்லாடே. அதைவிட சுவையா வேற ஒண்ணு இருக்கது ஒனக்கு தெரியுமாடே? 

அது என்னன்னா, நம்ம வீட்டுக் குழந்தைங்க அதுங்களோட பிஞ்சு விரல்களால, தட்டுல பெசைஞ்சு, நல்ல விரவி வச்சுருக்க சாப்பாடுதான் டே. 

குறள் 65 
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

நம்ம வீட்டு சின்னப் புள்ளைங்களைத் தொட்டு வெளயாடும்போது, நம்ம ஒடம்புக்கு கெடைய்க்க சொகம் இருக்க அதை வார்த்தையாலல்லாம் வெளக்கிச் சொல்ல முடியாது மருமவன. அவ்வளவு நல்ல சொகமா இருக்கும். 

அந்த சின்னப் புள்ளைய்ங்க கக்கா பிக்கான்னு பேசும்போது, காதுக்கு அப்பிடி ஒரு சொகமா இருக்கும் மருமவன.

குறள் 67 
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

மாப்ள... ஒரு அப்பங் காரன் பெத்த புள்ளைய்க்கு செய்ய வேண்டிய கடமை என்னன்னா.. பெரிய பெரிய அறிஞர்கள் இருக்கக் கூடிய அவையில, தாம் புள்ளை பெருமையோட முதல் எடத்துல இருக்க மாதிரி ஆக்கணும். புரியுதா மாப்ள..?

குறள் 68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

மருமவன... நம்ம புள்ளைக நம்ம விட புத்திசாலியா இருக்குகன்னு  வச்சுக்க. அதுனால நமக்கு நெறைய சந்தோசம் கெடைய்க்கும்ங்கிறது உண்மைதான். 

இருந்தாலும், இந்த ஒலகத்துல இருக்க மத்தவொளுக்கு அதுனால கெடைய்க்க நன்மையால, அவொ தான் ரொம்ப சந்தோசப்படுவாவொ. சரிதானா மருமவன... ?
(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post