
குறள் 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
மாப்ள.. ஒருத்தருக்கு ஒதவி செஞ்சு குடுத்தா அதுனால நமக்கு என்ன கெடைய்க்கும் னு நெனச்சுப் பாக்காம ஒதவணும். அப்படிப்பட்ட ஒதவியால, நமக்கு கெடைய்க்கக் கூடிய நன்மை கடல் அளவை விட பெருசு மாப்ள..
குறள்: 110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
நாஞ் சொல்ததை நல்ல கேளுல....
யாருக்கு எந்த கெடுதல் செஞ்சிருந்தாலும் அந்த பாவத்திலிருந்து லேசா தப்பிச்சிரலாம்.
ஆனா ஒருத்தரு செஞ்ச ஒதவியை மறந்துட்டு அவருக்கு கெடுதல் செய்யணும்னு நெனப்பு வந்திட்டுன்னு வச்சுக்க அந்த பாவத்துல இருந்து தப்பிக்க ஒனக்கு வளியே இல்லை..
குறள் 121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
மாப்ள... நம்ம அடக்கமா இருந்தோமுன்னு வச்சுக்க. அதுவே நமக்கு மங்காத புகழைத் தந்து, பெரிய ஆளாக்கிரும்.
அடங்காமை மட்டும் நம்மகிட்ட வந்து ஒட்டிக்கிட்டுச்சுன்னா, அம்புட்டுதான். நம்ம வாழ்க்கையே இருளடைஞ்சு பொயிரும் மாப்ள.
குறள் 124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
மாப்ள.. இப்பம் எப்பிடி இருக்கமோ, அது மாதிரியே எப்பமும் உறுதியா இருக்கணும். ஆரப்பாட்டம்லாம் எதும் இல்லாம அடக்க ஒடுக்கமா இருக்கணும். அப்பிடி இருந்துட்டா மத்தவங்க மனசுல மலையைவிட கூடுதலான ஒசரத்துல இருக்கலாம் மாப்ள..
குறள்: 127
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
தம்பி... நீ எதைக் கட்டுப்படுத்துதியோ இல்லையோ நாக்கை மட்டும் கண்டிப்பா கட்டுப்படுத்தியே ஆகணும். கட்டுப்படுத்தலைன்னு வச்சுக்கோ, நீ பேசக்கூடிய பேச்சு இருக்க, அது ஒன்னைய பெரிய இக்கட்டுல இளுத்துக் கொண்டு போய் விட்ரும் தம்பி.(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com

0 Comments