சுவனத்துக் குழந்தைகளுடன் நான்...!-4

சுவனத்துக் குழந்தைகளுடன் நான்...!-4


(உளவியல் ஆலோசகர் லைலா அக்ஷியாவின் அனுபவத் துளிகள்)

ஒரு உள்ளத்தின் தேடல்....!
"சகோதரி இந்தப் பணம் உங்களுக்கு எனது  அன்பு பரிசாக வழங்கப்படுகிறது .

உங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ளுங்கள்" என்று அன்று கையில் மொத்தமாக கிடைத்தது ஒரு தொகை பணம்.

இன்றைய சூழலில்  இப்படி கிடைத்தால் எம் சுய தேவைகளை பூர்த்தி செய்வதுதான் புத்தி என்ற போதும் ,எனது புத்தியில் அது இரண்டாவது கட்டமாகவே இருந்தது.முதற்கட்டமாக முன்வந்து போனதோ வேறொன்று.

அதற்காகவே என் கண்கள் ஒரு நாள் முழுவதும் என் தொலைபேசியை சல்லடை போட்டு, என் அந்த  தேவைக்கான பதிலை  தேடிக்கொண்டிருந்தது.

அன்பளிப்பாக கிடைத்ததை இதற்கு செலவு செய்வதாக முடிவெடுத்து விட்டேன். ஓரிரு நாள் முழுவதும் தேடியதன் விளைவு  நான்  எதிர்பார்த்த குறிப்பிட்ட சில தொலைபேசி இலக்கங்கள் கிடைக்கப்பெற்றன.

மகிழ்ச்சியோடு தொடர்பு கொண்டேன்.நேரடியாகவும் சந்தித்தேன்.அவர்களிடம் எனது தேவையை முன்வைத்தேன்.

 "'விஷேட கற்றல்' தொடர்பான தொடர்பாக மேலதிகமான சில துறைகளை கற்க விரும்புகிறேன். குறிப்பிட்ட சில பகுதிகளை பூர்த்தி செய்ய விரும்புகின்றேன்.." என முன்வைத்த என் தேடலுக்கு,சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பதிலுக்காக காத்திருந்தேன்.

எதிர்தரப்பில் அவர்களிடமிருந்து வந்த பதில்கள் என்னை  மௌனமாக்கியது.

"சரியான பயிற்றுனர்கள் இல்லை சகோதரி.. முன்பு இருந்தது. ஆனால் இப்பொழுது அவற்றை  தொடர்ந்து செய்வதில்லை.." என்றும்,பிறிதொரு இடத்தில் "நீங்கள் எதற்காக இதனையே தெரிவு செய்கிறீர்கள்? எங்களிடம் வேறு வேறு துறைகள் இருக்கின்றனவே.."என்றும்,

இன்னொரு இடத்தில் சில இறுக்கமான விதிமுறைகளை  முன்வைத்து, இந்த கற்றல் ஆர்வத்தை ஏதோ ஒரு வகையில் நான் தடுத்துக் கொள்வதற்கும், கை விடுவதற்கும் ஏதுவான காரணங்களை அவர்கள் தரப்பில் அமைத்திருந்தது .

இப்படியான காரணங்களால் சரியான பதில் கிடைக்கப்பெறாமல் திரும்பி வந்து விட்டேன்.

எனது ஆர்வம், எனது ஆசை, என்பன என் உள்ளத்திற்கு திருப்தியாகவும், சமூகத்திற்குப் பயனாகவும் இருக்க வேண்டுமெனவே நினைக்கிறேன். எனவே எந்நிலையிலும் இதில்  என் முயற்சியை கைவிடுவதாக இல்லை .

சரி இன்றைய "சுவனத்துக் குழந்தைகள்" கட்டுரைக்கு வருகிறேன்

விஷேட/சிறப்பு தேவையுடைய பிள்ளைகள் யார்?
என்பதனை இந்த சமூகம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.

ஆம் சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளில் பொதுவாக மனவளர்ச்சி குன்றிய வர்கள் அடங்குவர்.அதாவது ஏனைய சாதாரண குழந்தைகளை விட ஒப்பீட்டளவில் மெதுவாகவே இவர்களது அறிவும், மனநிலையும் மற்றும் எல்லா செயல்களும்  வளர்ச்சியடைகிறது .

அதாவது 'தமது புத்தி உடலமைப்புஉணர்ச்சிகளில் ஏனைய சமூக விடயவங்களிலும் தமது வயதை ஒத்த ஏனைய பிள்ளைகளின் வீச்சு எல்லைக்குள் வராது மாறுபட்டு நிற்கின்ற பிள்ளைகள் விசேட தேவையுடைய பிள்ளைகள்' என்கின்றோம்.

 பேச்சு மற்றும் மொழிக் குறைபாடு, தங்களை வெளிப்படுத்துவதில் அல்லது மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் சிக்கல் போன்றவற்றால் இவர்களை வெகுவாக இணங் கண்டுகொள்ளலாம். பார்வை பிரச்சனை, பெருமூளை வாதம் அல்லது பிற நிலைமைகள் போன்ற உடல் ஊனங்கள் இதோடு சம்பந்தப்படுகிறது.

இத்தகைய குழந்தைகள் (மற்றும் பெரியவர்கள்)  விஷேட தேவை குறைபாடுகளைக் கொண்டுள்ளனர் என்ற வகையில் இவர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்

*உடல்( physical)
*வளர்ச்சி (Developmental)
* நடத்தை அல்லது மனவெழுச்சி (Behavioral or emotional)
 * உணர்ச்சி குறைபாடுகள்(sensory impaired disorder)
இனி இந்நான்கு வகைகளையும் சிறிது விளக்கமாக  கூறுகின்றேன்.

1.உடல்;
 தசைச் சிதைவு, கால்-கை வலிப்பு, பெருமூளை வாதம்
Muscular Dystrophy, Epilepsy, Cerebral palsy

உடல் ரீதியான விஷேட தேவை குறைபாடு என்பது இயல்பான உடலியக்கத்தையும், கட்டுப்பாட்டையும் தடுக்கும் நிலையாகும். பல்வேறு வகையான உடல் குறைபாடுகள் இங்கு இருந்தாலும், தசைநார் சிதைவு மற்றும் பெருமூளை வாதம் ஆகியவையை பொதுவானவையாக சொல்லலாம். தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தசை நார் பலவீனமடையும். பெருமூளை வாதம் உள்ள குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்படும். 
உடல் குறைபாடுகளுக்கு பல காரணங்கள் உள்ளன.என்றாலும் மரபியல், தீவிர நோய், முதுகெலும்பு காயம் மற்றும் மூளை பாதிப்பு ஆகியவற்றை கூறலாம்

2.உள வளர்ச்சிக்குரிய குறைபாடு ( Mental Development)
(ஆட்டிசம்Autism, டவுன் சிண்ட்ரோம் Down syndrome, ஃப்ராகில் எக்ஸ்  சிண்ட்ரோம் FragileX syndrome)

வளர்ச்சி குறைபாடுகள் பொதுவாக ஆரம்பத்திலேயே கண்டறியப்படுகின்றன. உள அல்லது உடல் குறைபாடுகளே இந்த நிலையை ஏற்படுத்துகின்றன.

டவுன் சிண்ட்ரோம்  உள்ளவர்கள் குரோமோசோம் 21 உடன் அதிகரித்த அளவீடொன்றில் பிறக்கிறார்கள்.
இது மூளை மற்றும் உடல் வளர்ச்சியை பாதிக்கிறது. FragileX  என்பது மற்றொரு வளர்ச்சி குறைபாடு ஆகும். இது சிறுவர்களுக்கு Autism ஏற்படுத்தும் காரணியாக அமைகின்றது எனப்படுகிறது.

3.நடத்தை அல்லது உணர்ச்சி.
Behavioral or emotional

(ADD,  இருமுனைப்படுத்தப்பட்ட பிரச்சினை Bipolarized ,எதிர்ப்பை எதிர்க்கும் கோளாறு Oppositinal Defiant Disorder)

நடத்தை அல்லது உணர்ச்சிக் குறைபாடு பல பண்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் ஒருவருக்கொருவர்  உறவுகளை உருவாக்க அல்லது  இயலாமை (interpersonal relationships),
 கற்றுக்கொள்ள இயலாமை (learning disability) மற்றும் மனச்சோர்வு (depression)அல்லது பதட்டம்( anxiety) போன்ற உணர்வுகள் அடங்கும். 

அத்துடன் ADD என்பது ஒரு பொதுவான நடத்தை குறைபாடாகும்.இதில் கவனக்குறைவு, அதிவேகத்தன்மை (Hyperactivity)மற்றும் தூண்டுதலின் அறிகுறிகள் போன்றவற்றை கூறலாம்.

இருமுனைக் கோளாறு (Bipolar)என்பது ஒரு பொதுவான உணர்ச்சி குறைபாடு ஆகும். இதில் மனச்சோர்வு, எரிச்சல் மற்றும் கவனச்சிதறல் போன்ற அறிகுறிகளைக் கூறலாம்

4.உணர்திறன் குறைபாடு.
Sensory Impaired

(காது கேளாமை அல்லது குறைந்த செவித்திறன், பார்வையற்ற அல்லது பார்வைக் குறைபாடு.
Deaf or Blind/ Limited)

ஐம்புலன்களில் ஒன்றில் அதாவது பார்வை, செவிப்புலன், வாசனை, தொடுதல், சுவை,  விழிப்புணர்வு போன்றன  சராசரி செயல்பாட்டு மட்டத்தில் இல்லாதபோது உணர்ச்சிக் குறைபாடுகள் என கருதப்படுகின்றன. பொதுவான குறைபாடுகளாக குறைந்த செவித்திறன் அல்லது பார்வைக் குறைபாடு ஆகியவை அடங்கும். பிறப்புக்காயம் மற்றும்  தொற்று நோய் போன்றன உணர்திறன் குறைபாட்டை ஏற்படுத்தும் எனப்படுகிறது.

 ​மரபியல் (genetics )கூட ஒரு காரணமாகும்.

இலங்கையில் இத்தகைய கற்றல் 
குறைபாடுகளுடன் வாழும் பல குழந்தைகள் கல்வியின் பலனை இழக்கின்றனர். 
2016 இல், UNICEF Sri Lanka ‘இலங்கையில் கற்றல் குறைபாடுகள்’ அறிக்கையை நியமித்ததின் பிரகாரம்:

ஊனமுற்ற 5-14 வயதுடைய குழந்தைகளில் 23.5% முதன்மைக் கல்வியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

 மேலும் முக்கிய பாடசாலைகளில் சேருபவர்களிடையே, கல்வி நடவடிக்கைகளில் பங்கேற்பது வயதுக்கு ஏற்ப குறைகிறது.

15-19 வயதுடைய மாற்றுத்திறனாளி மக்களில் 55.4% மற்றும் 20-24 வயதுடைய 86% ஊனமுற்றோர் எந்தவொரு கல்வி நடவடிக்கையிலும் அல்லது தொழில் பயிற்சியிலும் ஈடுபடவில்லை.

திறமையான ஆசிரியர்களின் பற்றாக்குறை, பாடசாலைகளில் பொருத்தமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, பாடத்திட்டங்களில் வரையறுக்கப்பட்ட நோக்கம் மற்றும் கல்வியின் ஒட்டுமொத்த தரம் ஆகியவை கல்வியில் இருந்து பயனடைவதில் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு உள்ள முக்கியமான சவால்களாக இருக்கின்றன.

போன்ற விடயங்களை  முன்வைத்திருக்கிறது.

இதன் படி1997 ஆம் ஆண்டின் வர்த்தமானி முன்மொழிவுகளுக்கு இணங்க, கல்வி அமைச்சு பாடசாலைகள் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

தற்போது இலங்கையில் பல்வேறு
சிறப்புக் கல்விப் பிரிவுகள்,சிறப்புக்கல்வியை ( Special Education )பல்வேறு கற்றல் குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு வழங்குகின்றன.

டவுன்ஸ் சிண்ட்ரோம், பெருமூளை வாதம் மற்றும் மன இறுக்கம் போன்ற கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவுகளும், ஆட்டிசம் மையங்களும்  உள்ளன.

எனினும் இந்தப் பாடசாலைகள் மற்றும் இப் பிரிவுகளின் எண்ணிக்கையும் மற்றும் தரமும் போதுமானதாக இல்லை.

இவற்றுக்கான விரிவாக்கம் மற்றும் தர மேம்பாடு என்பன கண்டிப்பாக எமக்கு தேவைப்படுகிறது.

இந்த குழந்தைகளுக்கும் பரவலான முறையில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களையும்,கற்றல் வளங்களையும், வாழ்க்கையையும், எதிர்காலத்தையும்  அமைத்துக் கொடுப்பதின் அவசியத்தை சமுதாயத்திற்கு   வலியுறுத்துகின்றேன்.
(முற்றும்)
Laila Akshiya.
(skills Insight)
Dip in psychology & counselling.
Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post