Ticker

6/recent/ticker-posts

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியும், முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டிய படிப்பினைகளும்.


NPP இன் வெற்றியானது சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களதும் வெற்றியாகும்.  தமிழர்களையும், முஸ்லீம்களையும் எதிரிகளாக சிங்கள மக்களுக்குக் காட்டி பேரினவாதிகள்  ஆட்சி செய்த காலம் அழியப் போகிறது.  இனி எல்லா இனங்களும் புரிந்துணர்வோடு ஒற்றுமையாக வாழும் காலம் பிறக்கப் போகிறது. இன்ஷாஅல்லாஹ்.

இங்கே முஸ்லிம் அல்லாதவர்கள் தொடர்பாக, சரி பிழைகள் பேசுவதை விட, என் சொந்த சமூகம் பற்றியே எழுத விரும்புகிறேன்.     1915 இல் இருந்து கிட்டடி காலம் வரை இடைக்கிடையே சிங்கள மற்றும் தமிழ் மக்களின் வன்முறைகளுக்கு முகம் கொடுத்துள்ளோம். இவை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வைத்தோ அல்லது அரசியல் சுழ்ச்சிகளை வைத்தோ நடந்த அசம்பாவிதங்களாக அவைகள் இருக்கலாம்.

வீர விதான, பொதுபல சேனா, ஈஸ்டர் தாக்குதல் போன்ற நிகழ்வுகளால், இலங்கை முஸ்லீம்களின் இருப்பே கேள்விக்குறியானது. ஆயினும், அல்லாஹ் இன்று எமக்கு அருளி உள்ள அமைதியானது எதிபார்க்கப் படாத ஒன்றுதான். அதற்காக நாம் அல்லாஹ்வுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதாது.  இலங்கை வாழ் சாலிஹான மக்களின் துஆக்களின் பரக்கத்துதான் எதிரிகள் அழிந்து புது அரசியல் கலாச்சாரம் மலரப் போகிறது.
இந்த நாட்டை முஸ்லீம்களிடம் கொடுத்து நீதியாக ஆட்சி செய்யுங்கள் என்று கூறினாலும், நாடு இன்னும் சீரழிந்துதான் போகும். இது சிலருக்கு ஏற்க முடியாத கருத்தாகக் கூட இருக்கும். ஆனால் அதுதான் கசப்பான உண்மை.  உள்ளமும் பேச்சும் செயலும் நேர்மையாக உள்ள மக்கள் அல்லது உண்மையான முஸ்லீம்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் எம்மிடையே இருக்கின்றார்கள். அநேகமானவர்கள் பெயர்தாங்கி முஸ்லீம்களே . அதில் அழகான சூரத்தில் அழகாக மார்க்கம் பேசும்   நடிகர்களும் தான் இருக்கின்றார்கள். சிலரது செயற்பாடுகளை பார்த்தால் இவனும் ஒரு முஸ்லிமா என்று நினைக்கவும் தோன்றும். நான் இலங்கையின் நாலாபுறமும் மக்களுடன் பழகியவன். வெறும் கற்பனையில் கூறவும் இல்லை. 

எப்படியோ, முஸ்லிம் அல்லாத ஒரு ஆட்சியாலனிடம் நாட்டைக்  அல்லாஹ் கொடுத்து, ஒரு நல்லாட்சி வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இந்த நல்லாட்சியில்  முஸ்லீம்களும் சமத்துவமாக சமாதானமாக வாழ வழி பிறக்கும் என்பது பெரியதோர்  எதிர்பார்ப்பாக இருக்கிறது.

முஸ்லீம்கள் உண்மை முஸ்லீம்களாக வாழ முற்பட வேண்டும்

எனவே முஸ்லீம்கள் தம்மை சுய பரிசோதனை செய்து, உண்மை முஸ்லீம்களாக வாழ முற்பட வேண்டும். அதுதான் எம்மை அந்நிய மக்கள் மதிக்கவும், எங்கள் மீது அன்பு செலுத்தவும் காரணமாக அமையும். அவ்வாறு இல்லாமல், செய்யும் அடாத்துக்களை செய்துகொண்டு, வெறுப்புணர்வை வளர்த்துவிட்டு, வரும் வினைகளுக்கு துவேஷம் துவேஷம் என்று,தூற்றித் திரிவது சரி அல்ல. 

அதே நேரம், இஸ்லாமிய உலமாக்கள், பேச்சாளர்கள், தொழுகை நோன்பு ஸக்காத் ஹஜ்  என்பன பற்றி மட்டும் பேசாது, இலங்கையில் பல்லின சமூகத்தில் முஸ்லிம் சமூகத்தின் சவால்கள், கடமைகள், முரண்பாடுகளை கையாலும் விதங்கள் , நடந்து கொள்ள வேண்டிய பண்பாடுகள், இஸ்லாம் பற்றிய அறிவை அவர்களுக்கு எவ்வாறு வளங்குவது, இந்நாட்டை முன்னேற்ற எவ்வாரெல்லாம் முஸ்லிம் சமூகம் உதவலாம் போன்றன பற்றி கட்டாயம் சமூகத்தின் மனோபாவத்தை தூண்ட வேண்டும். 
அவ்வாறு இல்லாமல் நாம், பெயர்தாங்கி முஸ்லீம்களாக மட்டும் தொடர்ந்தும் வாழ முற்பட்டால், எம்மீது சாத்தியமான உள்நாட்டு வெளிநாட்டு சதிகளில் சிக்கித் திணரவேண்டிக் கூட ஏற்படலாம். 

வரப்போகும் நிம்மதியான சூழலைப் பயன்படுத்தி சமூகத்தையும் சீர்செய்து, நாட்டையும் வளப்படுத்த முடிந்த எல்லா பங்களிப்புகளையும் செய்வோம். எல்லா சமூகங்களுடனும் ஒற்றுமையை மேம்படுத்த இன்ஷாஅல்லாஹ் முயற்சி செய்வோமாக .

Dr Ajmal hassan 

 



Post a Comment

0 Comments