மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-46 (வரலாறு-பாகம்-2)

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-46 (வரலாறு-பாகம்-2)


உடுதெனிய மெடிகே 46
ஹேவாஹெற்றை தேர்தல் தொகுதியில் மாரஸ்ஸனப் பட்டினத்திலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தலாத்துஓயப் பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்திருக்கும் பூர்வீகக் இஸ்லாமியக் குடியிருப்புக்களில் ஒன்றாக உடுதெனிய மெடிகே விளங்குகின்றது. ஆங்கிலேய எழுத்தாளர் A.C.  லோரியின் குறிப்புக்களில் கண்டியிலிருந்து உடுதெனியை அடையும் மார்க்கம் பற்றிய தகவல் பின்வருமாறு வழங்கப்பட்டிருக்கின்றது:

A hamlet (small village) of the above inhabited by Moorman. It is not in the census of 1871. Population in 1881 177(96 males, 81 females) 1891: 140 (72 males, 68 females) The Moorman were expelled from the hamlet by the last King of Kandy.

(Archibald Campbell Lawrie - Kandy District Judge “ A Gezetter of the Central Province of Ceylon” (1873-1892) )

கண்டி நகரிலிருந்து தலாத்து ஓயா - மாரஸ்ஸன - தெல்தோட்டைப் பாதையின் மையத்தில் அமைந்திருக்கும் உடுதெனிய மெடிகே பிரதேசத்தில் முஸ்லிம்கள் முதலில் குடியேறிய பகுதிகளுள் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. அதன் குடியிருப்பாளர்கள் பலரின் வம்சாவளிப் பெயர்கள் அவர்களது பூர்வீகத்திற்குக் கட்டியம் கூர்வதாக அமைந்திருக்கின்றன.
  அவற்றுள்,

  1. வல்தெனுவே கெதர
  2. தென்னேஹேன கெதர
  3. பட்டாணி கெதர
  4. கித்துல் தெனிய கெதர
  5. கொங்காலே கெதர
  6. யட்டலே கெதர
  7. மஹபாரே கெதர
  8. ஒயதலாவே கெதர
  9. கும்புக்கந்துர கெத
 10. வாகஹமுல கெதர
 11. தொட்டகஹமுல கெதர - குறிப்பிடப்பட வேண்டியவை.
           
இவ்வம்சாவளிப் பெயர்கள் அதிகமாக “கெதர” என்ற  வதிவிடப் பெயரோடு  இணைந்திருப்பதிலிருந்து  உடுதெனிய மக்கள் நீண்டகால இருப்பை உடையவர்கள் என நிறுவ முடிவது சிறப்பானதாகும். சிங்கள அரசர்கள் காலமுதல் மலையக இராசதானியில் அதிகம்  கவனயீர்ப்புப் பெற்றிருந்த பகுதிகளுள் ஒன்றாகவும்  உடுதெனிய விளங்கியிருக்கின்றது. அக்காலத்தில் ஐந்து பெரும் நிருவாகப் பிரிவுகளைக் கொண்டிருந்த கண்டி இராச்சியத்தில் ஹேவாஹெற்றை நிருவாகப் பிரிவில் உடுதெனிய ஒரு மெடிகேக் குடியிருப்பாக விளங்கியதை  எழுத்தாளர்   A.C. யின் தகவல்களும் உறுதிசெய்கின்றன.

அவரது  தகவல்களில்  கண்டியின் கடைசி சிங்கள அரசன் ஸ்ரீவிக்ரம இராஜசிங்கனால் (1798-1815) உடுதெனிய முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படினும், அதற்கான காரணம் வழங்கப்படவில்லை என்பது கவனிக்கற்பாலது.  அரசன் ஸ்ரீவிக்ரம இராசசிங்கனின் மூர்க்கத்தனமான அரசியல் நடவடிக்கைகள்  கண்டி இராச்சியத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன எனவும் வரவாற்றாசிரியர் கொள்வதுண்டு. அரசனின் செயற்பாடுகளால் கண்டி இராச்சியத்தில் இருபதுக்கும் அதிகமான பிரபுக்களும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் கொலை செய்யப்பட்டமை வரலாறாகும்.  அவர்களுள் எஹலேப்பொல குமாரிஹாமியும் அவரது பிள்ளைகளும் குறிப்பிடத்தக்கவர்கள். கண்டிய இராசதானிக்குத் தானே அரசனாக வேண்டுமென்ற  மகாபிரதானி பிலிமதலாவையின் சதித்திட்டங்களே இப்பழிவாங்குதல் களுக்குப் பின்னணியாக இருந்திருக்க வேண்டுமெனக் குறிப்பிடப்படுவதுண்டு. 1803ம் ஆண்டு ஆங்கிலேயரால் மேற்கொள்ளப்பட்ட கண்டி மீதான படையெடுப்பின்போதும் மாத்தளை-வரக்காமுறை முஸ்லிம்கள்  ஆங்கிலேயப் படைகளுடன் இணைந்து செயல்பட்டதாகக் கருதிய அரசன் ஸ்ரீவிக்ரம இராசசிங்கள் வரக்காமுறையையே துவம்சம் செய்துவிடுமாறு விடுத்த ஆணையும் பிரபல்யமானது. இவ்வாணை பற்றி எழுத்தாளர் லோறி பின்வருமாறு எழுதியுள்ளார்.

“Some of the  Moormen of  Warakamura having adhered to the English during the war of 1803, the  King gave order to destroy the Village”
(Archibald Campbell Lawrie - Kandy District Judge
“A Gezetter of the Central Province of Ceylon” (1873-1892) )

அரசனின் பல அரசியல் நடவடிக்கைகளை நோக்கும்போது உடுதெனிய முஸ்லிம்களது வெளியேற்ற உத்தரவும் ஒரு பழிவாங்கல் நடவடிக்கையாகவே அமைந்திருக்க இடமுண்டு எனலாம்.

 1881ம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பில் 177 முஸ்லிம்கள் மெடிகேயில்  வாழ்ந்திருக்கின்றனர். அவர்களுள் 96 ஆண்களும் 81 பெண்களும் அடங்குவர்.

 மெடிகேயின் ஆரம்ப வரலாறு பற்றிய ஆவணங்கள் கிடைக்கப் பெறாதபோதும் செவிவழிச் செய்திகளிலிருந்து அவர்கள், கம்பளை உடபலாத்த பிரதேசத்தின் எகொட கழுகமுவையிலிருந்து  குடிபெயர்ந்தோராவர் என அறிய முடிகின்றது. இலங்கை வரலாற்றில் விஜயனிலிருந்து ஆரம்பமாகும் பல வரலாற்றுக் கதைகள் செவிவழிச் செய்திகளாகவே பேசப்பட்டு வந்துள்ளதை இங்கு நினைவுபடுத்த வேண்டும்.  மகாவலியின் கிழக்குக் கரையோரமாக அமைந்திருக்கும் எகொட கழுகமுவப் பிரிவில் நூற்றாண்டு காலமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தது பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களுள் ஒரு பிரிவினர் கண்டிய சமஸ்தானத்தில் நம்பிக்கைகுரிய மருத்துவப் பணியாளர்களாகவும் விளங்கியோராவர்.  சமீப காலம் வரையும் எகொட கழுகமுவையில் பெரும்பகுதி  நிலம் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக விளங்கியிருக்கின்றது.  1988-89 காலப் பகுதியில் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் கிளர்ச்சிகளின்போது வாழ்ந்த கடைசி முஸ்லிம்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். எகொட கழுகமுவையிலிருந்து  உடுதெனியை அடைவத்றகான கிட்டிய மார்க்கமாக  நில்லம்ப, கலஹா, மொரகொல்ல பாதை விளங்கிற்று. மொரகொல்லையை அடைபவர்கள் முதலில் பௌலான மலையைக் கடந்து பஸ்கம வழியாக உடுதெனியைச் சென்றடைவர். இந்நடைபாதை அக்காலை  புகழ்பெற்று விளங்கிய போக்குவரத்துப் பாதைகளுள் ஒன்றாகும்.  இரு பிரதேச மக்களதும் மொழிப்பிரயோகம், கலாசார அம்சங்களை ஒப்பிடும்போது  இக்கருத்தை நிராகரிப்பது கடினமானதாகும்.

 உடுதெனிய மெடிகேயின் பௌதீக அமைப்பு மத்திய பிரதேச முஸ்லிம் குடியமைப்புகளுக்குப் பெரிதும் வித்தியாசமாக  விளங்குவதைக் குறிப்பிட முடியும். அநேகமாக மத்திய பிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்களில் காணப்படும் சிறப்பான பௌதீக அம்சங்களுள் ஒன்று அவை மலைச்சாரளான மேடுகளில் அமைந்திருப்பதாகும். ஹேவாஹெற்றையின் உள்ளகக் குடியிருப்புக்களும், உடுதெனியும் மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்றன.  ஆரம்பத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் விவசாயப் பயிர்ச் செய்கைக்காக உடுதெனியில் குடியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.  முதலில்  குடியேறிய மக்கள் தமது பிரதான தொழிற்றுறைகளாக விலங்கு வேளாண்மை, நெற்பயிர்ச்செய்கை  போன்றவற்றை மேற்கொண்டிருந்தபோதும், தற்போது  பிரதேச மக்களின் பொருளாதாரக் கூறுகளில்  பெரும் மாற்றம் நிகழ்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

குடியிருப்பின் மேற்கு எல்லையாக பௌலான மலைக்குன்றும், கிழக்கு எல்லையாக கந்தகெட்டிய மலைக்குன்றும், வடக்கு எல்லையாக மாரஸ்ஸன மேட்டு நிலமும்  அமைந்திருக்கின்றன. மேற்குப் பகுதியில் சிங்களக் குடிகள் பரந்து வாழும் பிரதேசம் யட்டிதெனியாகும்.

தொன்று தொட்டு மெடிகேக் குடியிருப்பாக விளங்கிய உடுதெனியை எழுத்தாளர் லோறியும் மெடிகே எனப் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடப்பட வேண்டியதாகும். உடுதெனியூடாக ஹங்குராங்கெத்த வரையும் நீண்டு சென்ற வர்த்தகப் பாதையைத் தழுவியதாகவே உடுதெனிய மெடிகே உருவாகியிருக்கின்றது எனக்குறிப்பிட முடிவதுபோன்று, குடியிருப்பைச் சேர்ந்த பலர் மெடிகேபத்த பதவிகயையும் அலங்கரித்துள்ளமை சிறப்பானதாகும்.

விசாலமான உடுதெனிய இன்று வல்தெனிய, ஊர்மனை, தெமலாதொட்ட, அக்கரஹத்த, கந்தகெட்டிய, மாஓய எனப்பல பகுதிகளாக விரிவடைந்திருக்கின்றது. சுமார் நானூறுக்கும் அதிகமான குடும்பங்கள் வாழும் உடுதெனியின் விவசாயப் பயிர்ச் செய்கைக்கு உதவியாக  முன்னாள் பிரதமர் டீ. எஸ் சேனாநாயக்க (1884-1952) பதவிக் காலத்தில் தெல்தொட்ட - கந்தேதன்ன குளத்திலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றது.
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com
 

Post a Comment

Previous Post Next Post