கண்ணியமிக்க ரமலானே!

கண்ணியமிக்க ரமலானே!


இம்மை மறுமையைப் புனிதம் ஆக்கும்
ஈமானின் இறுக்கம் பெருக்கம் ஆகும்
இஸ்லாம் மார்க்கம் உவந்து தந்த
இனிய ரமலானே வருக வருக

சங்கை மிக்க ரமலான் மாதமே
சிறப்புகள் ஊறும் உன்னத மாதமே
நான்காம் கடமையாய் நானிலம் வந்தாயே
நன்மைகள் எல்லாம் அள்ளித் தந்தாயே

நின்று வணங்கிட வந்த மாதம்
நித்தியமாக இலங்கிடும் நிறை மாதம்
நோன்பு வைத்திட முப்பது நாட்கள்
நற்செயல் புரிய முனைவோம் நாங்கள்

திருக்குர்ஆன் ஈந்த கண்ணிய மாதம்
திருமறை வசனங்களெங்கும் ஒலித்திடும் மாதம்
தீமைகளை விட்டு விலக்கிடும் மாதம்
திருவேதங்கள் யாவும் இறங்கிய மாதம்

ஆயிரம் மாதங்களை விடவும் மேன்மையாம்
ஆத்மீக லைலதுல் கத்ர் இரவின் தூய்மையாம்
மகத்துவம் சுமந்த இந்த இரவினிலே
மலக்குகளின் மன்னர் தரை இறங்குபவராம்

ஏழையின் பசி அனைவரும் அறிய
எதிர்பார்ப்புகள் எல்லாம் அடக்கி ஆள
பொறுமை காக்க இறையின் ஏற்பாடு
புடம் போட்டிடும் மாண்புடை மாதமாம்

ஈருலக வாழ்விலும் நாம் சிறப்புறவே
அடைந்தோம் ரமழான் முதல் பிறையை
இறைவன் காட்டிய நேர்வழிநெறியாய்
விமோச்சனம் பெற்றிட எழுவோம் விரைவாய்

இனிய ரமலானே வருக வருகவே
இறைவிசுவாசம் புகட்டிச் செல்க செல்கவே

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post