எனக்கு சதைப்பிடிப்பு நோய் பல மாதங்களாக உள்ளது. இடைக்கிடையே சதைப்பிடிப்பு ஏற்படும் போது தாங்க முடியாத வேதனை ஏற்படும். இது ஏன் வருகிறது? இதற்கு ஏதும் பரிகாரமும் ஆலோசனையும் தரவும்.
பாத்திமா சிபா கிண்ணியா
பதில் : சதைப்பிடிப்பு என்பது ஒரு நோயல்ல இது பல நோய்களின் ஒரு அறிகுறியாகும். இது தசைத்தொகு தியுடன் சம்பந்தப்பட்ட நோயாகும். தசைத்தொகுதி எமது உடம்பின் கட்டமைப்பிற்கும் அசைவிற்கும் மிகமிக முக்கியமாகும்.
எமது உடம்பின் ஏதாவது ஒரு உறுப்பு அசையும் போது அவ்வுறுப்பின் ஒரு பகுதியில் உள்ள தசைகள் சுருங்குவதோடு மற்றுமொரு பகுதி விரிவடைகின்றது. உதாரணமாக முழங்கையை மடிக்கும் போது கையின் முற்பகுதியிலுள்ள தசைகள் சுருங்குவதோடு கையின் பிற்பகுதியிலுள்ள தசைகள் விரிவடைகின்றன. அத்துடன் அசைவு பூர்த்தியானதும் தசைகள் ஒய்வு நிலைக்கு ஒரு சில செக்கன்களிலேயே வருகின்றன. ஆனால் சதைப்பிடிப்பின் போது திடீரென சதைகளில் சுருக்கம் ஏற்பட்டு ஓய்வு நிலைக்கு வராமல் சில செக்கன்களுக்கு அல்லது நிமிடங்களுக்கு தொடர்ந்தும் சுருக்க நிலையிலேயே இருக்கும். இதன் போது நோயாளிக்குத் தாங்க முடியாத வேதனை இருக்கும்.
சதைப்பிடிப்பானது இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அதாவது ஓய்வு நிலையிலோ அல்லது பகல் நேரத்தில் நாம் எமது அன்றாட வேலைகளுக்காக நடந்துக் கொண்டிருக்கின்றபோதோ ஏற்படலாம். அத்துடன் இது பொதுவாக வயது வந்தவர்களைத் தாக்கினாலும் கூட இளம் வயதினரையும் சிறுவர்களையும் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. சிறுவர்களில் ஏற்படக்கூடிய இந்நிலை Growing pain என கூறப்படும்.
சதைப்பிடிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. தீவிர உடற்பயிற்சி மற்றும் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களின் உடம்பில் சில கனியுப்புகள் குறைவடைதல், விட்டமின்களின் குறைபாடு, உடற்பயிற்சி இன்மை, நீண்ட நாட்களாகப் புகைத்தல், குருதியிலிருக்கும் அதிகமான கொழுப்புச் சத்துக்களின் தாக்கம், உடலில் நீரின் அளவு குறைதல் போன்றவைகளைக் குறிப்பிடலாம். மேலும் சில மருந்துகளின் தாக்கம், இரத்த நாடிகளுடைய இரத்தோட்டம் குறைவடைதல் போன்ற காரணங்களினாலும் சதைப்பிடிப்பு ஏற்படலாம். எனவே எக்காரணத்தினால் சதைப்பிடிப்பு ஏற்படுகின்றதெனக் கண்டறிந்தே அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் ஒவ்வொரு நோயின் தன்மையைப் பொறுத்து சதைப்பிடிப்புடன் மேலும் பல நோய் அறிகுறிகளும் காணப்படலாம்.
இந்நிலையுடையவர்கள் தமது அன்றாட உணவில் வெள்ளைப்பூடு, இஞ்சி, கீரைவகைகள் விஷேடமாக வல்லாரை, மரக்கறி வகைகள் போன்றவற்றைக் கூடுதலாகச் சாப்பிட வேண்டும். அத்துடன் அதிக நீர் பருகுவதன் மூலம் தசைகளில் தேங்கிக் கிடக்கும் நச்சுப் பொருட்களை அகற்றலாம். தினமும் சாதாரணமான உடற்பயிற்சியிலும் ஈடுபடுதல் வேண்டும்.
மேலும் இளஞ்சூடான நீருக்குச் சிறிதளவு உப்பும் சேர்த்து ஒத்தடம் கொடுப்பதோடு இரவில் தூங்கச் செல்ல முன் இளம்சூடான நீரில் உடம்பைக் கழுவுவதன் மூலம் ஓரளவு நிவாரணத்தைப் பெறலாம்.
அத்துடன் ஒரு சில மாத்திரைகளைத் தொடர்ந்து பாவித்தாலும் சதைப்பிடிப்பு ஏற்படலாம். விஷேடமாக சிறுநீர்ப் போக்கை கூட்டக் கூடிய மாத்திரைகளைப் பாவிப்பவர்களுக்கு இந்நிலை வரலாம். எனவே சதைப்பிடிப்பு இருப் பவர்கள் வைத்தியர் ஒருவரை நாடி மாத்திரைகளினால் இந்நிலை ஏற்படுகின்றனவா என உறுதி செய்யவும். அத்துடன் நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி சதைப்பிடிப்பு ஓய்வாக இருக்கும் போதோ அல்லது வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதோ ஏற்படலாம். ஆனால் நாம் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது முக்கியமாக நடக்கும் போது காலில் சதைப்பிடிப்பு ஏற்பட்டு நாம் சற்று ஓய்வெடுக்கும் போது குறைந்தால் எதிர்காலத்தில் இருதய நோய் ஏற்படலாம் என்றே கருதவேண்டும். எனவே இவர்கள் தகுந்த வைத்தியரை நாடி அதற்குரிய பரிசோதனைகளைச் செய்து கொள்வதே நன்று.
நவீன வைத்தியத் துறையில் இந்நோய் அறிகுறியை உண்டாக்கக் கூடிய சரியான காரணத்தைக் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
யுனானி வைத்தியத்துறையிலும் இந்நிலைக்கான பல சிகிச்சை முறைகள் உள்ளன. வெளிப்பூச்சு மருந்துகளாக மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள், உட்கொள்வதற்கான பல மாத்திரைகள் மற்றும் மசாஜ் சிகிச்சை போன்றவைகள் உள்ளன.
இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது உங்களுக்குச் சதைப்பிடிப்பு ஏற்படுமானால் அதைப்பற்றி அலட்சியமாக இருக்க வேண்டாம்.
காரணம் இது இருதய நோயின் ஒரு முன்னோடி அறிகுறியாக இருக்கலாம் எனவே இது விடயத்தில் கவனமாக இருக்கவேண்டும்
DR.NASEEM
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments