கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-15

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-15

 
வாலியின்மறுமொழி

எங்கள் இனமுறைகள் இப்படித்தான்! என்றுரைத்தே
தன்கருத்தை வாலிசொன்னான் பார்.

கற்புநெறி எங்களுக்கு வேறாகும்!  அங்கங்கே
அப்படியே இன்புறுதல் வாழ்வு.

வேதநெறி மற்றும் குலமரபோ இல்லாமல்
தோதான போக்கில்தான் வாழ்வு.

சீராக சிந்தித்தால்  நான்குற்றம் செய்யவில்லை!
கார்வண்ண ராமனே காண்

"வாலிகுற்றம்செய்தவனே" இராமன்வலியுறுத்தல்
உள்ளம் கலங்காமல் வேதநெறி கூறும்
நல்லியல்பைக் கொண்டவன் நீ.

குரங்கினத்தில் நீயில்லை என்பதை இந்த
தரவுரை காட்டும் உணர்.

பாவத்தைச் செய்ததற்கு உந்தன் பிறப்பினத்தைக்
காரணம் காட்டாதே நீ.

அறவழி என்பதோ ஐம்புலன்கள் ஆளும்
புறஎல்லைக் குட்பட்டதா? சொல்.

பகுத்தறியும் பேரறிவு கொண்டவனே தப்பை
மறுக்காமல் ஏற்றுக்கொள் நீ.

கஜேந்திரமோட்சம்
முதலைப் பிடியில் யானை அலற
உதவ திருமாலே வந்து

முதலையைக் கொன்றதால் யானைக்கோ மோட்சம்!
விலங்கினம் என்போமா கூறு.

சடாயு பறவைதான்! சீதையைக் காக்க
சடாயு இறந்தது பார்.

நெஞ்சில் மனிதநேயம் கொண்டால் பறவையும்
இங்கே உயர்வே உணர்.

ஆறறிவா? ஐந்தறிவா? தீமைக்குத் தோள்கொடுத்தால்
ஆறறிவும் ஐந்தறிவு தான்.

உயர்வதும் தாழ்வதும் அம்மக்கள் செய்யும்
செயல்களின் தன்மையால் தான்.

பண்பிழந்தே மாற்றான் மனைவியைக் கைப்பற்றி
வன்கொடுமை செய்துவிட்டாய் நீ.

என்றே இராமன் உணர்த்தினான் வாலிக்கு!
தன்விளக்கம் தந்தான் உயர்ந்து.

வாலி:மறைந்திருந்துஅம்புஎய்ததுஏன்?
மறைந்திருந்து தாக்கிய காரணம் என்ன?
மறைச்சான்றோன் உன்பதிலைக் கூறு!

இலக்குவன்மறுமொழி
தஞ்சமென வந்துநின்றான் ராமனிடம் சுக்ரீவன்!
பண்பாளன் ஏற்றான் கனிந்து.

உன்னை இயமன் உலகுக் கனுப்புவேன்
என்றேதான் சூளுரைத்தான் அன்று.

போர்க்களத்தில் நேராகச் சந்தித்தால் தஞ்சமென்றே
நீசொல்வாய் என்றெதிர் பார்த்து

மறைந்திருந்தே அம்பைத் தொடுத்தழித்தான் உன்னை!
தடையின்றிக் கேட்டான்  சிலிர்த்து.

வாலியின்மனமாற்றம்
ராமன் இலக்குவன் சொன்ன கருத்துகளைப்
பாமணக்க வாலிகேட்டான் பார்.

ஞானமிகு ராமனோ ஈனவழி செல்லமாட்டான்
ஆனமட்டும் சிந்தித்தான் கேட்டு.

ராமனை நோக்கி வணங்கினான் வாலிதான்!
ஞானம் நிமிர்ந்தது வென்று.

வாலிகேட்டவரங்கள்
வரம் 1
மதுவெறி கொண்டிருப்பான் சுக்ரீவன் ராமா!
தொடுக்காதே ராமபாணந் தான்.

வரம்2
அண்ணனைக் கொன்றவன் என்றேதான் மற்றவர்கள்
வன்சொல் தொடுப்பார் இங்கு.

பண்பாய் அறிவுரை கூறித் தடுக்கவேண்டும்!
என்றுவரம் கேட்டான் பணிந்து.

உன்னுடைய சீதையைக் கண்டு பிடிப்பதற்(கு)
இங்கே தயார்படுத்தப் பார்.

வாலி அனுமனைப்பற்றி இராமனிடம்கூறுதல்
என்வாலால் ராவணனைப் பற்றிக் கொணர்கின்ற
பொன்வாய்ப்போ இல்லை எனக்கு.

அத்தகைய ஆற்றல் அனுமனுக் குண்டு!
சுட்டி உரைத்தான் விழைந்து.

சுக்ரீவனை இராமனிடம் அடைக்கலமாகத்தருதல்
என்தம்பி மற்றும் இவன்சார்ந்த சுற்றத்தார்
உன்காப்பில் இன்றுமுதல் தான்.

தவறை உணர்ந்தே மரணத்தை ஏற்றான்
களவீரன் வாலிதான் அங்கு.
(தொடரும்)


Post a Comment

Previous Post Next Post