Ticker

6/recent/ticker-posts

Ad Code



புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -109


அமேசான் வனப்பகுதி நோக்கி நடந்து கொண்டிருந்த  இர்வின், செரோக்கி, அவனது தந்தை  ஆகிய மூவரும் பெரியகல்லின் அடிவாரத்துக்கு வந்ததும் தரித்து நின்று, எந்த வழியில்  வனத்துக்குள் நுழையலாமென அவர்கள் யோசிக்கலாயினர்.

பெரியகல்லின் அடிவாரத்தை ஊடறுத்துச் செல்லும் பாதையில் செல்வதைவிட, கல்லின் மேற்பகுதிக்கு வந்து, அங்கிருந்து கீழிறங்கிச் செல்லும் பாதையில் சென்றால் மிக இலகுவில் வனப்பகுதியை   அடைந்துவிடலாம்  என்று அமேசான் வனத்தைப் பற்றி அக்குவேறு ஆணிவேராக அறிந்து வைத்திருந்த செரோக்கியின் தந்தை ஆலோசனை  கூறினார்.  அவரிளிருந்தும் இர்வினின் கருத்து மாறுபட்டதாக இருந்தது.

அன்று “ஒரினோகோ” ஆற்றிலிருந்து பெரியகல்லின் அடிவாரத்தை ஊடறுத்துச் சென்று வந்த  அனுபவம்  அவனுக்கு இருந்தபடியால் கல்லின் மேற்பகுதியிலிருந்து  இறங்கிச் செல்வதால்  இன்னொரு அனுபவத்தைப் பெறலாம் என்று இர்வின் தனக்கு  சார்பான  கருத்தைக்கூறவே, அதற்கு உடன்பட்டவர்களாக,  மூவரும்  கல்லின் மேற்பகுதி நோக்கி  ஏறலாயினர்.

அன்றொருநாள்  செரோக்கியைத் தேடியலைந்த இர்வின், கல்லின் மேற்பகுதிக்கு வந்தபோது, கல்லடிவாரத்திலிருந்து வந்த குரலின்,  வலுக்கட்டாய ஆலோசனையால் அவன் ஓரினோகோ ஆற்றங்கரை வரை சென்று, ரெங்க்மாவின் ‘தோசங்ககழிப்பு’ நிகழ்வில்  கலந்துகொள்ள முடிந்தது. அந்தக் கட்டளியைத் தந்த முதியவரை ஒருமுறை நேரில் காணவேண்டுமென்ற எண்ணம் அவனது உள்மனதில் இருந்தது!  

கல்லின் நடுப்பகுதிக்கு வந்ததும், அந்த முதியவர் தெரிகின்றாரா என்று இர்வின் கிழக்குப்புறமாகவிருந்த  கல்லடிவாரத்தை எட்டிப்பார்க்கலானான். இர்வினைத் தொடர்ந்துகொண்டிருந்த,  செரோக்கியும் அவனது தந்தையும்  இர்வினின்  நடவடிக்கையை நோட்டமிடலாயினர்.

“அந்த முதியவர் தெரிகின்றாரா என்றுதான் பார்த்தேன்!” என்றான் இர்வின்.

“கல்லிலிருந்து காததூரத்திலிருக்கும் அவரை உன்னால் காணமுடியாது நண்பா!” என்றான் செரோக்கி.

“அன்று நான் அவரைப் பார்த்தபோது... அவரது தலை மாத்திரம்தான் எனக்குத் தெரிந்தது. அப்போது நான் பார்க்கும்போது அவரின் தலைமுடி பழுத்துப் பொன்னிறமாயிருந்தது!” என்றான் இர்வின்.

“இந்த விடியலில் நீ அவரைப் பார்க்க முடியாது. இந்நேரம் அவர் தியானத்திலிருப்பார்!” என்றான் செரோக்கி.

“இதுவெல்லாம் இப்போ நமக்கெதற்கு? நாம் வந்த வேலையைப் பார்க்கலாமே!” என்று எச்சங்களையும் மூலிகைகளையும் திரட்டிவரத்தான் நாம் வனத்தை  வந்திருக்கின்றோம் என்பதை நாசூக்காகப் பிள்ளைகளுக்கு ஞாபகப்படுத்தி வைத்தார் செரோக்கியின் தந்தை.

தனது நண்பனின் உள்நோக்கத்தை சரியாகப் புரிந்துகொண்ட செரோக்கி,  இர்வின் இப்போதைக்கு அந்தப் பெரியவரை நேரில்  காணாமல்  இங்கிருந்து நகர மாட்டான் என்பதை நங்கு புரிந்துகொண்டவனாக,  தனது தந்தையைப் பொறுமை காக்கச்செய்தான்!

“எனக்கு அந்தப்பெரியவரை நேரில் ஒருமுறை பார்க்க வேண்டும் போலிருக்கின்றது!” என்றான் இர்வின்.

“சரி... சரி... பார்த்துவிடுவோம்!” என்று தனது நண்பனின் கோரிக்கைகைக்கு பச்சைக்கொடி காட்டிய செரோக்கி, தனது தந்தையை அங்கேயே தரித்து நின்று இளைப்பாறும்படி கூறிவிட்டு, இர்வினைத்  தரதரவென்று இழுத்துக்கொண்டு பெரிய கல்லை விட்டும் கீழிஇறங்கி, அன்றொருநாள் தான்  ஆலமரவிழுதுகளைப் பிடுங்கிவந்த இடத்தை நோக்கிச் செல்லலானான்!

மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த விழுதுகளில் தொங்கியபடி  நண்பர்கள் இருவரும், ஐந்தாறு விழுதுகளைப் பிடுங்கி எடுத்துக் கொண்டவர்களாக மீண்டும் பெரியகல்லை நோக்கி வந்தனர்!

கல்லில் சாய்ந்தபடி  இளைப்பாறிக்கொண்டிருந்த செரோக்கியின் தந்தை, செரோக்கியும் பிள்ளைகள் இழுத்துக்கொண்டு வந்துகொண்டிருந்த  ஆலம்விழுதுகளை பார்த்ததும் திகைத்துவிட்டார்!

பிள்ளைகள் பெரியாரின் இடத்தை நோக்கி  இறங்கப்போகின்றார்கள்  என்பதைப் புரிந்துகொண்ட  அவர்,  பெரியாரைப் பார்ப்பதில் தனக்கும் ஒரு மெலிதான  விருப்பம் இருந்ததால், அவர்களின் நடவடிக்கைக்கு அவரும் இணங்கியவராக அவர்களோடு சேர்ந்து செயற்பட விளைந்தார்.

அவர்கள் தாம் கொண்டுவந்த விழுதுகளுக்கு இடைவெளிவிட்டு முடிச்சுக்கள் போட்டனர்.  பின்னர் எல்லா விழுதுகளையும் ஒன்றாக்கி இணைத்தனர். அதன் ஒரு தொங்கலைக்   கல்லின் கிழக்குப் பக்கத்தினூடாக, கல்லடிவாரம் வரை இறக்கிவிட்டு, மறுதொங்கலை  கல்லின் மேற்பகுதியிலிருந்த  குழியொன்றினுள் மண் நிறைந்து, அதற்குள் வேர்விட்டு வளர்ந்திருந்த மரமொன்றின் அடிவாரத்தில்  இறுகக்கட்டிவிட்டு, ஒவ்வொருவராக முடிச்சில் விரலிடுக்கைத் திணித்தபடி கல்லடிவாரம் நோக்கி  இறங்கலாயினர்!  செரோக்கி முதலில்  இறங்கலைத் தொடக்கி வைத்தான்!
(தொடரும்)  



Post a Comment

0 Comments