Ticker

6/recent/ticker-posts

Ad Code



வரலாறு பேசும் பெண்மையின் புகழ்-1

வல்ல நாயன் அல்லாஹ்வின் மாபெரும்  வல்லமையால் விண்ணிலிருந்து நீர் புகட்டப்பட்ட   உயர் பெண்மணி உம்மு ஷரீக் ரலியல்லாஹு அன்ஹா...


மக்கத்து மண்ணில் புனித இஸ்லாத்தின் பிரச்சாரம் பகிரங்கப்படுத்தப்படும் முன்னர்...

தீனுல் இஸ்லாத்தை தன் நெஞ்சகம் ஏந்தி விட்டார் எம் தியாகப் பெண்மணி உம்மு ஷரீக் நாயகி...

தான் பெற்ற இந்த மார்க்கத்தின்  இன்பத்தை தன்னை போன்றே ஏனைய பெண்களும் பெற வேண்டும் என்று பேரவா கொண்டு, குறைஷிப் பெண்களிடம் இஸ்லாம் மார்க்கத்தின் புனிதத்துவம் பற்றி போதனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

 பெண்களிடையே நடக்கும் இப்பிரச்சாரம் ஆண்களின் காதுகளுக்கு எட்டவில்லை.... குறைஷிப் பெண்கள் இஸ்லாத்திற்குள் நுழைய ஆரம்பித்துவிட்டார்கள்...

பலவீனமான உள்ளங்கள் பலம் பெற்று, வளம் பெற்றன.....

காலம் கடந்து செல்கையில் குறைஷி குலத்தின் ஆண்களிடையே இச்செய்தி  பரவி உம்மு ஷரீக் நாயகி அவர்களின் மேல் பெரும் கோபத்தை  மூட்டி விட்டது. 

ஒரு முறை அன்னை உம்மு ஷரீக் அவர்கள் காஃபிர்களுடைய வீடொன்றில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சமயம் கையும் களவுமாக அவர்களை குறைஷி மக்களில் ஒரு கூட்டம் பிடித்து விட்டது.

நம் வீரப் பெண்மணியோ இப்போது காஃபிர்களின் கடும் பிடியில்...

இப்படியே இப்பெண்ணை விட்டுவிட்டால் பெரும் பிரச்சினை வளர்ந்து விடும் என்றெண்ணிய அவர்கள் இப்பெண்ணை கொன்று விடலாமா! என்று மதவெறி கொண்டாலும் உம்மு ஷரீக் அவர்களின் கோத்திரத்தின் பலம் மற்றும் அவர்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மனம் தயங்கி  நின்றார்கள்.

"பெண்ணே! உன் கூட்டம் மட்டும் இல்லை என்றால் நாங்கள் உன்னை என்ன செய்வோம் என்று நாமே அறிய மாட்டோம். இன்றோடு உன் மார்க்க பிரச்சாரத்தை நிறுத்தி விடுவதே உனக்கு நல்லது!" என்று  எச்சரித்து அவர்களை விட்டு விட்டார்கள்.

இறை நாட்டம் இன்றி சிறு அணுவும் அசைய இயலாது என்ற எம்பெருமானார்ﷺ ஊட்டிய இறைநம்பிக்கையை இதயம் ஏந்தியிருந்த இப்பெண்மணி மீண்டும் தொடர்ந்தார்கள்... தன் இறை  உவந்த பிரச்சாரப் பணியை.....

இச்செய்தி மீண்டும் குறைஷிக் காஃபிர்களை வந்தடைந்து அவர்களை தீவிரப்படுத்தியதன் விளைவு, மீண்டும் உம்மு ஷரீக் கொடியவர்களின் பிடியில்....

பிரயாணத்திற்கு பயன்படாத கிழட்டு ஒட்டகத்தின் முதுகில் எவ்வித விரிப்பும் இன்றி, கொதிக்கும் பாலை வெளிக்கு அழைத்துச் சென்று, பலமான கயிற்றால் அவர்களுடைய உடலை கட்டி, சுட்டெரிக்கும் வெயிலில் தவிக்க விட்டார்கள்.

அப்பாலை வெளியோ பலமான  ஒருவனை கூட பலமிழந்து குற்றுயிராக பலமிழந்துவிடச் செய்யும்.

நம் தியாகப் பெண்மணி அப்பாலை வெளியில் ஒரு நாளல்ல! இரண்டு நாளல்ல! தொடர்ந்து மூன்று நாட்கள்!!!

 ஆகாரம் எதுவும் இன்றி, பட்டினியோடு இறைவன் ஒருவனையே சார்ந்து ஆன்ம பலத்துடன் இறையருள் வேண்டி காத்திருந்தார்கள்.

பேரிறைவனின் பேரன்பு பெரும் துயரை துடைக்கும் தருணம் வந்தது.

விண்ணகத்திற்கு சொந்தக்காரன் விண்ணிலிருந்து வியக்க வைக்கும் விதமாக, தாகித்திருந்த தன் இறை நேசப் பெண்மணிக்கு தண்ணீர் வாளி ஒன்றை அவர்கள் முன்னே இறக்கினான்.

உள்ளம் பூரித்த அவர்கள் பெரும் கொடையாளன் அல்லாஹ்வை புகழ்ந்து அகமகிழ்ந்தவர்களாக  அத்தண்ணீரை அருந்தினார்கள்...

பின்னர் தன் உடல் முழுவதும் அத்தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள்.

குளிர்ந்த தண்ணீர் உடலை  குளிரச் செய்தது....

புதிய உற்சாகத்துடன்  பொலிவுடன்  நம் நாயகி  காட்சியளித்தார்கள்.

ஓய்வெடுக்க சென்றிருந்த குறைஷிக் கூட்டம் உம்மு ஷரீக் அவர்களிடம் திரும்பியது.

உடல் முழுவதும்   நனைந்து புதிய தெம்புடன் காணப்பட அவர்களைப் பார்த்து "பெண்ணே!எங்கிருந்து உனக்கு நீர் ? நாங்கள் சேமித்து வைத்திருந்த நீர்ப் பாத்திரங்களை களவில் உபயோகித்தாயா" என மிரட்டிய அவர்களை  நாயகி மறுத்து,  நடந்த உண்மையை எடுத்துரைத்தார்கள்.

"நீ கூறுவது உண்மையாக இருக்குமெனில் நாங்கள் வணங்கும் சிலைகளை விட உன் இறைவனே மேலானவன் என ஏற்றுக் கொள்வோம்" என்றுரைத்து அவர்கள் சேமித்து வைத்திருந்த நீர் பாத்திரங்களை சோதிக்க சென்றனர்.. 

காபிர்கள் அதிர்ந்து நின்றார்கள்...எந்தவொரு மாற்றமும் நீர் பாத்திரங்களில் இல்லை... இருந்த அளவேயன்றி கொஞ்சமும் குறையவில்லை.

உண்மையை ஏற்றுக்கொண்ட குறைஷிக் காபிர்கள் அந்நொடியே புனித இஸ்லாத்தை அகமேந்திய உண்மை முஸ்லிம்களாக நல்வழி பெற்றார்கள்....

மத வெறியால் கொடூரம் நிறைந்த பல இதயங்கள், பேரின்பம் தரும் உண்மையை ஏற்றுணர ஒரு பெண்ணையே வல்ல அல்லாஹ் மூல காரணமாக வைத்தான்  என்ற விந்தை பெண்ணினம் பெருமை கொள்ள வேண்டிய விடயம்.....

(தொடரும்)



இலங்கை
 |  இந்தியா | உலகம் 



Post a Comment

0 Comments