Ticker

6/recent/ticker-posts

நான் ஆயிஷா பேசுகிறேன் !


அன்பின் பெற்றவரே என்னைக் காணாது துடிக்கும் உற்றவரே 

நேற்றிலிருந்து எனக்காக பிரார்த்தித்த உறவுகளே 

என்னை சேற்றுக்குள்ளிருந்து தூக்கியெடுத்த பெறா தந்தையே  

அறிந்தும் அறியாமலும் என் புகைப்படத்தை இணையத்தில் இட்டு என்னைப் பாதுகாக்க துடித்த அன்பர்களே...

தங்கள் அன்பு என்னை மகிழ்விக்கிறது... 

எனக்காக உலகமே இரங்கும் நொடிகளை எண்ணி இதயம் கனிகிறது...  

என் நிலையைப் பற்றி உங்களிடம் கூற உள்ளம் துடிக்கிறது... 

கையோடு பொருள் வாங்க கடைப்பக்கம் நான் போக களவாடி கூட்டம் ஒன்று என்னைக் களவாடிச் சென்றது.. 

முகத்தை மறைத்து விசத்தைத் தெளித்து நினைவை மறக்கடித்த கயவரிடம் மன்றாடினேன்.

எனை செவிசாய்க்கவில்லை... 

என்  உடல் வலியால் துடிப்பதைதாயிடம் கூற கத்த எத்தனித்தேன் ,

முடியவில்லை... 

என் தந்தையின் சாயலில் ஒருவர் அந்தக் கயவர் கூட்டத்திலே இருந்ததால் அவர் வதனத்தை பார்த்து கெஞ்சினேன் 

அவருக்கும் என் வலி புரிந்தது போலும். என்னைப் பார்த்தால் குற்றவுணர்ச்சி. என்னை விட்டுவிடச் சொல்லும் என்று அஞ்சினாரோ என்னவோ எனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை... 

இருட்டிலே தான் இருந்தேன்.  

இருட்டென்றால் எனக்கும் பயம்...

நாட்டில் மின் வெட்டு அமுலில் இருக்கும் போது தாயின் முந்தானையை பிடித்துக் கொண்டே இருந்து பழகி விட்டேன். 

இப்போதும் அதே பயம் தான்.. 

தாயின் முந்தானையை தேடிய கைகளுக்கு கயவனின் கைகளே கிட்டியது..

தூக்கி எறிந்தான் என் கைகள் வலியில் துடித்தன 

நடுநடுங்கின... 

மிருக குணம் கொண்ட மனித நாயொன்று என் உடலை பிடித்து பிடித்து ஏதோ தடுமாறினான். 

கத்தினேன், கதறினேன், யாருக்கும் கேட்கவில்லை..

கேட்பதற்கு என் குரலின் சத்தம் வெளியில் வரவில்லை போலும்... 

' உம்மா' என்று அழைத்தேன்  

உலகத்தில் அனைத்து படைப்புக்களுக்கும் கேட்டிருக்கும் என் சத்தம்.. 

ஏன் உங்களில் யாருக்கும் கேட்கவில்லை.. 

கடவுளின் விதியா 

காமுகனின் சதியா?  

சுயநினைவு இல்லாமல் போகிறேன்... 

விழிக்கும் போது மூச்சுத் திணருகிறது... 

வயலில் சேற்றின் வாசனை குடலைப் பிரட்டுகிறது... 

என்னுடல் சேற்றுக்குள் உரமாகிடுமா,? 

புழுக்கள் என்னை கொஞ்சம் கொஞ்சமாக உணவாக்கத் துடிக்கிறது.  

இன்னும் பூச்சுக்கள் என்னை மோப்பமிடுகின்றன. 

வரம்பு வழியே சென்ற நாயொன்று தன் நாவினால் என்னை சுவைக்க முயற்சித்து  சேற்றோடு மல்லுக்கட்டாமல் நகர்ந்து செல்கிறது..... 

வயலோரம் கட்டியிருந்த மாடொன்றும் கண்களை சிமிட்டிப் பார்க்கிறது...  

பயத்திலே என்னுயிர் மண்ணுள் புதைகிறது... 

உலகமே என்னை நாலாபக்கமும் தேடியும் 

வீட்டருகே வயலில் இருக்கும் என்னைக் கண்டு பிடிக்க இவ்வளவு நேரம் தேவையா..?

அச்சத்தினால் என்மூச்சு  நின்று விடும் போல் தோன்றுகிறது... 

ஆம் என் மூச்சு வர வரமறுக்கிறது  ...

 இதயம் துடிகக மறுக்கிறது...  

நான் இறந்து போகிறேன் ... 

உம்மா வாங்களே இருட்டில் தனியாய் உயிர் பிரிகிறேன்... 

என்னை மீட்ட வந்த உறவொன்று 

என் மகள் போனறவள் என்று ஓலமிடும் போது 

என் தந்தையின் பாசத்தை உணர்கிறேன்... 

போகிறேன் 

இறைவனிடம் மீள்கிறேன்... 

உறவுகளே நாட்டில் நீதி உண்டானால் எனக்கான நீதியை பெற்றுத் தாருங்கள், 

என் போன்ற பிள்ளைகள் நிம்மதியா வாழ வேண்டுமானால் 

என்னைக் கொன்ற கயவர்களைக் கணடு பிடியுங்கள்... 

அனைவரும் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.. 

இறைவன் துணையிருப்பான்.. 

இவ்வண்ணம் நான் உங்கள் பிள்ளை ஆயிஷா...


Post a Comment

1 Comments