ஷுஹதாக்கள் மூவருக்கு மனைவியாகும் பாக்கியம் பெற்று, தானும் ஷஹீதான வீரப் பெண்மணி உம்மு ஹக்கீம் ரழியல்லாஹு அன்ஹா.
அன்னை உம்மு ஹக்கீம் ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் போற்றத்தக்க மார்க்கப்பற்று....
இஸ்லாமிய வரலாற்றில் மறக்கவோ, மறைக்கவோ முடியாத அளவிற்கு என்றும் மணம் கமழச் செய்யும் வீரம் செறிந்த ஸஹாபிகளில் முக்கியத்துவம் நிறைந்த ஒரு படைத்தளபதி காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு.
இவர்களின் அருமை தங்கை தான் அன்னை உம்மு ஹக்கீம்.
ஒரே இரத்தம் வீரத்திலும் துணிவிலும் ஒரு துளியும் வேறுபடவில்லை.
பூமான் நபி அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிவதற்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னர்,இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை உம்மு ஹக்கீம் ரழியல்லாஹு அன்ஹா.
அதுவரையிலும் இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பல போர்களிலும் இஸ்லாமிய விரோதிகளுடன் போருக்குச் சென்றவர்கள்.
இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், கொடியவன் அபூஜஹ்லின் மகனான இக்ரிமாவின் மனைவி தான் இவர்கள்.
இவ்வாறு இருக்கையில்.
உண்மையை உணரும் நேரமும் வந்தது. இஸ்லாத்தை ஏற்பதற்காக வரிசையாக பெருமானாரிடம் வந்த பெண்களுடன் அன்னை உம்மு ஹக்கீமும் உடன் வந்தார்கள்.
ஈருலக இரட்சகர் அவர்களின் திருச் சமூகம் சென்று பெண்களுக்கு பாதுகாப்பையும் கண்ணியத்தையும் அளிக்கும் புனித மார்க்கமான இஸ்லாத்திற்குள் நுழைந்தார்கள்.
நுழைந்த அடுத்த கணம் ஒரு வேண்டுகோளை நம் வேந்தரிடம் வைத்தார்கள்.
" நாயகமே என் கணவர் இக்ரிமாவோ, முஸ்லிம்களின் எண்ணிக்கை நகரத்திற்குள் பெருகியதை கண்டு உயிருக்குப் பயந்து ஊரைவிட்டே வெளியேறிவிட்டார். நீங்கள் என் கணவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராது என உத்தரவாதம் அளித்தால் அவரை நான் இங்கே அழைத்து வந்து இப்புனித மார்க்கத்தை ஏற்க வைப்பேன்" என வேண்டினார்கள்.
கருணையின் கருவூலம் அல்லவா எங்கள் கண்மணி நாயகம் அவர்கள் !!!
தந்தை அபூஜஹ்ல் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும், அவன் பிள்ளையை மன்னித்தருள சம்மதித்தார்கள்.
இந்நிலையில் இக்ரிமாவின் நிலைதான் என்னவாயிற்று?
ஊரைவிட்டே விரண்டோடிய அவர், யமனை நோக்கிச் செல்லும் ஒரு கப்பலில் ஏறிக் கொண்டார்.
வல்ல நாயன் அல்லாஹ் ஒருவருக்கு நல்வழியை நல்க நாடிவிட்டால் சந்தர்ப்பங்களை அதற்கு ஒரு காரணமாக அமைத்து விடுவான் அல்லவா! அதேபோன்று ஒரு சந்தர்ப்பத்தை இக்ரிமாவிற்கு அமைத்துக் கொடுத்தான்.
இவர்கள்பயணித்த கப்பல் பெரும் புயலில் சிக்கியது.
கப்பலின் மாலுமிகள் முஸ்லிம்கள்!
அவர்கள் தங்கள் பயணிகளிடம் "பிரயாணிகளே! நாங்கள் பெரும் இன்னலில் சிக்கி இருக்கிறோம்.
இறைவன் நாடினாலே அன்றி நாம் துன்பத்திலிருந்து மீள முடியாது.
எனவே நீங்கள் எந்த இறைவன் உமக்கு உதவும் என நம்புகிறீர்களோ, அதனிடம் உளத்தூய்மையுடன் துயர் அகற்ற பிரார்த்தியுங்கள்!" என்றார்கள்.
இதனைக் கேட்டதும்,
இக்ரிமாவின் உள்ளத்தில் ஒரு ஓரமாய் பதுங்கியிருந்த இறை நம்பிக்கை இதமாய் துளிர்ந்து வர ஆரம்பித்தது.
அதே நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம், "இறைவனே உனக்கும் எனக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இது! நீ எங்களை இந்த நிலையிலிருந்து பாதுகாப்பாயானால், இதிலிருந்து மீண்ட உடன் நான் பெருமானாரிடம் செல்வேன். அவர்களுடைய கையுடன் என் கை சேர்த்து அவர்களை என்னை மன்னிக்க கூடிய சங்கையாளராக பெற்றுக் கொள்வேன்" என்று இறைஞ்சினார்.
கருணையாளனின் திருக்கருணை அப்புயலை நிறுத்தியது.
அக்கப்பல் நலமாக கரையை வந்தடைந்தது.
கணவரின் வருகைக்காக காத்திருந்த அன்னை உம்மு ஹக்கீம் அவர்கள், தன் கணவரை தூரத்தில் கண்டதுமே, "என் சிறிய தந்தையின் மகனே!
நான் மிகவும் நல்லவரான, உறவுகளை சேர்த்து நடப்பவரான மேலும் வாக்குறுதிகளை காப்பாற்றுபவரான நம் தூதரிடம் இருந்து வந்திருக்கின்றேன்.
நீரே உம்மை அழித்துக் கொள்ள வேண்டாம்.
உம் உயிருக்கான உத்தரவாதத்தை நம் தூதரிடம் இருந்து பெற்றுவிட்டேன் " என்று கூறி தன் கணவரை கையோடு பெருமானாரிடம் அழைத்துச் சென்றார்கள்.
போகும் வழியில் கணவன் மனைவி இருவரும் ஒரு இடத்தில் ஓய்வுக்காக தங்கினார்கள்.
அப்பொழுது இக்ரிமா தன் மனைவியை நெருங்கியதும், அன்னையவர்கள் "கணவரே நம் தூதரை அடையும்வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நானோ இப்போது முஸ்லிமாகி விட்டேன். நீங்கள் காபிராக இருக்கும் நிலைமையில் என்னை தொடுவது இப்புனித மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை.
எனவே மக்கா சென்றடையும் வரை பொறுமையாக இருங்கள்" என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்கள் அன்னை உம்மு ஹக்கீம்.
இவர்களின் இந்நடத்தை பெண்ணினமே சிந்திக்க வேண்டிய முன்மாதிரியாக அமைந்துவிட்டது.
இவ்வளவு காலம் சேர்ந்து வாழ்ந்து வந்த கணவரை விட தன் மார்க்க சட்டத்திற்கு முன்னுரிமை அளித்த இவர்களை நினைக்கும் பொழுது, எல்லா ஒழுக்க விழுமியங்களையும் மீறி கண்டவனோடு கைகோர்த்து நிற்கும் இன்றைய சமுதாயத்தில் இருக்கும் பெண்களின் அவல நிலையை என்னவென்று சொல்வது?
இஸ்லாமிய ஒழுக்க வரம்புகளை மதித்து, தங்கள் வாழ்க்கையினை அமைத்துக் கொள்ளும் எதிர்கால சமூகப் பெண்களை நம்மில் இருந்தே ஆரம்பிப்போம் இன்ஷா அல்லாஹ்!
(தொடரும்)
1 Comments
அக்கால இஸ்லாமிய வீரப்பெண்மணிகளின் வரலாறுகளைத் தொகுத்து வழங்குவதன் மூலம் இக்காலத்துப் பெண்கள் படிப்பினை பெறுவார்களாயிருந்தால் உங்கள் ஆக்கங்களின் நோக்கம் வெற்றிகாணும் என்பதில் ஐயமில்லை.
ReplyDelete