Ticker

6/recent/ticker-posts

வரலாறு பேசும் பெண்மையின் புகழ்:05

யுத்த களத்தில் வீரபவனி வந்த உம்மு ஹக்கீம் ரழியல்லாஹு அன்ஹா.


கொடியவன் அபூ ஜஹ்லிற்கு மகனாக பிறந்து ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கு பல இன்னல்களை விளைவித்து பின்னர் வெற்றி தரும் மார்க்கமான இஸ்லாத்தில் இணைந்து பெருமானார்ﷺ அவர்களின் அருமை ஸஹாபியாக அமையும் பாக்கியத்தைப் பெற்றார் அன்னை உம்மு ஹக்கீமின் கணவர் அபூஜஹ்லின் மகனான இக்ரிமா ரழியல்லாஹு அன்ஹு.

தன் தந்தை இஸ்லாம் மார்க்கத்திற்கு இழைத்த கொடுமைகளை நிவர்த்தி செய்யும் குற்றப் பரிகாரமாக இக்ரிமா ரழியல்லாஹு அன்ஹு மார்க்கத்திற்காக பெரும் தியாகங்களை செய்தார்கள்.

இக்ரிமா ரழியல்லாஹு அன்ஹு, யர்மூக் எனும் நீண்டகாலமாக நடக்கும் யுத்தத்தில் ஷஹீதாகும் பாக்கியத்தையும் பெற்றார்கள்.

அன்னை உம்மு ஹக்கீமின் முதல் கணவர் ஷஹீத் எனும் உயர் அந்தஸ்தை அடைந்து விட்டார்கள்.

தன் அன்புக் கணவரின் இழப்பிற்காக இத்தா இருந்தார்கள்  உம்மு ஹக்கீம் ரழியல்லாஹு அன்ஹா.

இவர்களின் தெளிவான சிந்தனையையும், நுணுக்கங்கள் நிறைந்த அறிவையும் இறையச்சத்தையும் அறிந்த பலர் இவர்களை மணம் முடிக்க முன்வந்தனர்.

அன்னையவர்கள் இத்தா முடிந்ததும் காலித் இப்னு ஸஈத் எனும் ஸஹாபியை மணம் முடிக்க சம்மதித்தார்கள்.

அந்த காலமோ யர்மூக் யுத்தம் முடிவின்றி தொடர்ந்து கொண்டிருந்தது.

பொழுது விடிந்ததிலிருந்து பொழுது ஓயும் வரை யுத்தம் நடைபெறும்.

உயிருக்கு  உத்தரவாதம் கூறமுடியாத காலநிலை அது.

இதை உணர்ந்த காலித் இப்னு ஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அன்னை உம்மு ஹக்கீமிடம், "நாம் இருவரும் உடனடியாக திருமணம் செய்து கொள்வோம்"என்று கூற,அன்னையோ  "இந்தப் போர்  இனிதே முடிவு பெறட்டும். காஃபிர்களை முஸ்லிம்கள் தோற்கடித்த பின்னர் நாம் மணமுடித்துக் கொள்வோம்"என்று மறுத்தார்.

அதற்கு காலித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் "உம்மு ஹக்கீமே! போர் முடிவடைவதற்குள் நிலைமை என்னவாகும் என்பதை நாம் அறிய மாட்டோம்.

நான்கூட இப்போரில் ஷஹீத் ஆகலாம். அதற்கு முன்னர் இப்பொழுதே உம்மை மணம் முடிக்க விரும்புகின்றேன்" என்றார்கள்.

அதை உணர்ந்த அன்னை உம்மு ஹக்கீமும் சம்மதிக்க, அவர்கள் இருவருக்கும்  திருமணம் இனிதே நடைபெற்றது.

சிரியாவில் மர்ஜுஸ்ஸபர் எனும் இடத்தில் ஒரு ஆற்றங்கரையில் தான் இவர்களது வலீமா விருந்து கொடுக்கப்பட்டது.

அதன் காரணமாக இன்று வரை அந்த ஆற்றங்கரைக்கு உம்மு ஹக்கீம் என்று அழைப்பது வழமையாகிவிட்டது.

மணமுடித்த தம்பதிகளுக்கு ஸஹாபா பெருமக்கள் தங்குவதற்கு ஒரு குடிலை அமைத்துக் கொடுத்தார்கள்.

ஒரே ஒரு இரவு தான் இருவரும் மகிழ்வுடன் கூடியிருந்த இரவு.

ரோமர்கள், முஸ்லிம்களை தாக்க வருவதை அறிந்த காலித்  ரழியல்லாஹு அன்ஹு, மணமுடித்து ஒரே ஓரு நாள்தான்.

தன் மார்க்கம் நிலைக்க அனைத்து இன்பங்களையும் உதறிவிட்டு யுத்த களம் நோக்கி உடனே கிளம்பி விட்டார்கள்.

இறைவனின் விதிப்படியே அந்த யுத்தத்தில் காஃபிர்களால் கொலை செய்யப்பட்டார்கள் காலித் இப்னு ஸஈத் ரழியல்லாஹு அன்ஹு.

அன்னை உம்மு ஹக்கீமின் இரண்டாவது கணவரும் ஷஹீத் எனும் உயர் அந்தஸ்தை அடைந்தார்கள்.சுவன இன்பங்களை அனுபவிக்கப் பறப்பட்டு விட்டார்கள்.

கணவரின் மரணச்செய்தி அறிந்ததும் உதிரம் கொதித்தெழுந்த உம்மு ஹக்கீம் ரழியல்லாஹு அன்ஹா, தன் குடில் அமைக்க பயன்படுத்தியிருந்த உருளை கட்டையை வாளுக்குப் பதிலாக உருவி எடுத்தார்கள்.

போருக்குரிய உடைகளை அணிந்து ஒரு வீரமான ஆணுக்கு இணையாக எதிரிகளை அடைந்தார்கள்.

போர் செய்ய வாளும் இல்லை, அம்பும் இல்லை. எந்த ஆயுதமும் அன்னையிடம் இல்லை.

 ஒரே ஒரு கட்டையை கொண்டு, வலிமை கொண்ட நெஞ்சுடன் காஃபிர்களிடம் போர் புரிந்தார்கள்.

 ஒருவருக்குப் பதிலாக 8 பேரை கொன்று குவித்தார்கள்  வேங்கை பெண் உம்மு ஹக்கீம் ரலியல்லாஹு அன்ஹா.

(தொடரும்)



Post a Comment

1 Comments

  1. கல்ஹின்னை மண்ணில் கவிப்பேரரசு மர்ஹும் சுபைர் மாஸ்டர் அவர்களின் வீட்டின் அருகாமையில் உதித்ததினாலோ இச்சிறு மலர் (நிப்ளா இம்தியாஸ்) மிக அருமையாக வரலாறு பேசும் பெண்மையின் தொடரென எழுதிவரும் கட்டுரை அனேகமாக பெண்களின் உள்ளங்களில் பதியப்படும் முத்திரையாக விளங்குகின்றது அல்ஹம்துலில்லாஹ் தொடரட்டும் (நிப்ளா இம்தியாஸ்) மகளின் பயணம் வாழ்த்துக்கள் மகளே. பாரூக் (WC)

    ReplyDelete