Ticker

6/recent/ticker-posts

Ad Code



உதட்டில் போட்டுக்கொண்ட ஊசி.. அழகு சிகிச்சை ஆபத்தில் முடிந்த விபரீதம்.. பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்!


பிரபல பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவேத் உதட்டில் ஊசி போட்டுக் கொண்டதால் முகம் வீங்கி விகாரமாக மாறிய வீடியோ காட்சிகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அழகு சிகிச்சை ஆபத்தில் முடிந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து பார்ப்போம்.

பார்த்தவுடன் பதற வைக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு பாலிவுட்டை கதற விட்ட நடிகை தான் இந்த உர்ஃபி ஜாவெத். உர்ஃபி ஜாவெத் வருகிறார் என்றால் முதல் நாள் இரவே படுக்கையை போட்டு தங்கி எழுந்து, மறுநாள் காலை போட்டோ எடுக்க காத்திருக்கும் கேமரா மேன்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டும்.

வித்தியாசமான உடைகளை அணிவதில் ஹாலிவுட்டை மிஞ்ச முடியாது என்ற மூட நம்பிக்கையை எல்லாம் தவிடுபொடியாக்கி, "கொஞ்சம் பாலிவுட்டை பாரு கண்ணா" என திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் இந்த உர்ஃபி ஜாவெத். மாடலிங் துறையில் கலக்க வேண்டும், பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு மும்பைக்கு ஓடி வந்தவர் தான் உர்ஃபி ஜாவேத்

ஆரம்பத்தில் பாலிவுட் திரையுலகம் அவரை ஏற்க மறுத்தது. அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தன. "எனக்கா வாய்ப்பு கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள்" என பொங்கி எழுந்த ஜாவெத், தான் அணியும் உடைகள் மூலம் பாலிவுட்டை புரட்டிப் போட்டு பந்தாடினார் என்றே கூறலாம்.

தலகாணியால் செய்யப்பட்ட உடை.. பீட்சா உடை.. டஸ்ட்பின் கவரால் செய்யப்பட்ட உடை.. பஞ்சுமிட்டாய் உடை.. பேப்பர் ட்ரெஸ்.. ஸ்நேக் டிரெஸ்.. கம்பி உடை. சிப்ஸ் பேக்கெட் உடை.. மிளகாய் ட்ரெஸ். என ஒரு மனிதனால் சாதாரணமாக யோசித்து பார்க்க முடியாத கோணங்களில் எல்லாம் சிந்தித்து மாடலிங் உலகை செதுக்கியவர் தான் இந்த உர்ஃபி

அவரது இந்த ஆடை புரட்சி மூலம் நினைத்தது போலவே சில வருடங்களில் பிரபலமாகி விட்டார் உர்ஃபி ஜாவேத். அது மட்டுமின்றி பாலிவுட் திரையுலகின் பிரபலங்களுடன் அவ்வப்போது எடுத்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு பிரபலமானார். மேலும், அமேசான் பிரைமில் தனது வாழ்க்கை குறித்த டாக்குமெண்டரி ஷோவையும் வெளியிட்டுள்ளார் உர்ஃபி

ஆரம்பத்தில் அவரது செயல்களை பைத்தியக்காரத்தனம் என்றும், இப்படித்தான் பிரபலமாக வேண்டுமா? என்றும் பலரும் ட்ரோல் செய்து வந்தனர். ஆனால், தற்போது அவரை 5.4 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார். இந்நிலையில், உதட்டில் ஊசிப்போட்டு தனது லிப் ஃபில்லரை நீக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்து இருக்கிறார் உர்ஃபி ஜாவேத்.

தனது 18 வயதிலேயே கவர்ச்சியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக உர்ஃபி ஜாவேத் தனது உதட்டில் லிப் ஃபில்லரை போட்டுக் கொண்டுள்ளார். தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு அது தனக்கு சரியாக இல்லை என்ற முடிவுக்கு வந்த உர்ஃபி அதனை நீக்க முடிவு செய்துள்ளார். உதட்டில் ஊசிப்போட்டு அதன் மூலம் தனது லிப் ஃபில்லரை நீக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் உர்ஃபி ஜாவேத். இதனால் உர்ஃபியின் உதடுகளும், முகமும் பர்ஃபி போல் வீங்கி விகாரமாக மாறி விட்டது.

இருப்பினும் எதனையும் மறைக்காமல் தனது முகத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட அவர், எதுகை மோனையில் சில தகவல்களையும் கேப்ஷனில் பகிர்ந்துள்ளார். அதில், “இது ஃபில்டர் கிடையாது. நான் எனது ஃபில்லர்ஸை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்” அதே நேரம் “நான் ஃபிலர்ஸிற்கு (feelars) எதிராக எதுவும் பேசவில்லை. என தனது சோகத்தைக் கூட கவிதையாக பகிர்ந்திருக்கிறார்.

மேலும், தெரு தெருவுக்கு காஸ்மெடிக் கிளினிக் வைத்து நடத்தி வரும் போலி நபர்கள் குறித்தும் சாடியிருக்கிறார். ஒருத்தருக்கும் ஒன்றுமே தெரியவில்லை. ஆரம்பத்தில், தெரியாத்தனமாக ஒரு டாக்டரிடம் வாயை கொடுத்த நிலையில், ஒழுங்காகவே லிப் ஃபில்லரை வைக்கவில்லை. அதன் காரணமாகவே நல்ல டாக்டரை தேடிப் பிடித்து தற்போது ஒட்டுமொத்தமாக லிப் ஃபில்லரை நீக்கிவிட்டு இயற்கையான அழகுடன் இருக்கலாம் என முடிவு செய்துவிட்டேன் எனக் கூறியிருக்கிறார் உர்ஃபி ஜாவேத்.

லிப் ஃபில்லரை நீக்கிய உடனே இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை அறிந்தே தான் அவ்வாறு செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் அனைத்தும் சரியாகி விடும் என்றும் புதிய தோற்றத்துடன் ரசிகர்களை விரைவில் சந்திப்பேன் என்றும் உர்பி தெரிவித்துள்ளார். உர்ஃபி ஜாவேத்தின் இந்த கோரமான லிப் ஃபில்லரை நீக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள்,

ஹீரோயின்கள் ஏன் இப்படி இயற்கை அழகை விட்டுவிட்டு, சினிமா மோகத்துக்காக ஏகப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்து தங்களது உடல் நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர் என்கிற கேள்விகளை அடுக்கி வருகின்றனர். இதனால் ஏற்படும் பின்விளைவுகள், நடிகைகளின் உடல்நிலையையும் எதிர்காலத்தையும் சீர்குலைத்து விடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments