Ticker

6/recent/ticker-posts

Ad Code



வரலாறு பேசும் பெண்மையின் புகழ்-08


யுத்த கைதிகளில் ஒருவராக பெருமானார் (ஸல்) அவர்களின் தளம் வந்து, முஃமீன்களின் தாயாகும் பாக்கியத்தை பெற்ற அன்னை ஜுவைரியா ரழியல்லாஹு அன்ஹா...

ஒரு யுத்த கைதிக்கு இத்தகைய அரிய வாய்ப்பு எப்படி கிடைத்தது?? என்று யாவரையும் திகைக்க வைக்கும் விதமாக இவர்களது வாழ்வில் ஒரு அதிசயம்...

ஹிஜ்ரி 5 அல்லது 6 மதீனாவில் நடந்த ஒரு யுத்தத்தில் இஸ்லாத்திற்காக போராடிய முஸ்லிம்கள் உன்னத வெற்றி அடைந்தனர்...

எதிரிகளான காஃபிர்களின் கூட்டம் பலத்த தோல்வியடைந்து, பலர் யுத்தகைதிகளாக பெருமானார் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர்...

யுத்தத்தில் கிடைத்த பொருட்களையும், கைதிகளையும் நீதி நபி (ஸல் )அவர்கள் ஸஹாபாக்கள் மத்தியில் நீதமாக பங்கு வைத்தார்கள்...

அந்தக் கைதிகளிடையே தான் அன்னை ஜுவைரியாவும் இருந்தார்கள்...

இவர்கள் பனுல் முஸ்தலக் எனும் கோத்திரத்தின் பெருந்தலைவர்களில் ஒருவரான ஹாரிஸ் என்பவரின் திருமகள் ஆவார்கள்...

பெருமானார்(ஸல்)அவர்களின் பங்கு வைத்தலின் பின்பு, அன்னை ஜுவைரியா, ஸாபித் பின் கைஸ் எனும் ஸஹாபிக்கு உரியவராகிவிட்டார்கள்...

இவர்களை அடிமையாக பெற்ற ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு, ஜுவைரியாவிடம்"நீ எனக்கு தேவையில்லை. உனக்கு விடுதலை வேண்டும் என்றால் ஏதாவது ஒரு பொருளையோ,அல்லது பணத்தையோ ஈட்டி நஷ்ட ஈடாக என்னிடம் தந்துவிட்டு நீ விடுதலையாகி விடு" எனக் கூறினார்கள்...

இதைக்கேட்ட அன்னை ஜுவைரியா பெருமானார்(ஸல்)அவர்களிடம் சென்று,"நீங்கள் என்னை ஸாபித் என்பவரிடம் அடிமையாக பங்கிட்டீர்கள். ஆனால் அவரோ என்னை வேண்டாம் என்று கூறி நஷ்ட ஈடாக ஏதேனும் தந்துவிட்டு உரிமை பெற்றுக் கொள்ளச் சொல்லிவிட்டார்.

என்னுடைய நிலைமையோ நீங்கள் அறியாதது இல்லை. யுத்தத்தில் என்னுடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார்.கடும் வேதனை என்னை சூழ்ந்து இருக்கிறது. என்னை விடுதலை ஆக்கிக்கொள்ள என்னிடம் எதுவுமில்லை ஏதேனும் எனக்குத் தாருங்கள்"என்று பெருமானாரிடமே கேட்க,அதற்கு அண்ணலார்(ஸல்) அவர்கள்,"ஜுவைரியாவே! உமக்கு பணம்,பொருள் தருவதைவிட நீர் விடுதலையாகிக் கொள்ள சிறப்பான ஒன்றை தரட்டுமா? என்று கேட்டு, "நான் உம்மை திருமணம் செய்து கொள்ள நாடுகிறேன்.உமக்கு சம்மதமா?" என்று எம்பெருமானார்(ஸல்)அவர்கள் வினவினார்கள்...

அக்காலத்தில் நபிகளாரின் மனைவி என்ற உன்னத உறவின் மூலம் பெருமானாருக்கு ஒவ்வொரு நொடியும் சேவை செய்ய எத்தனையோ பெண்கள் ஏங்கிக் கொண்டிருந்த காலமது....

எந்த தயக்கமும் இல்லாமல் உடனே அன்னை ஜுவைரியாவும் பெருமானாரிடம் தன் முழு சம்மதத்தையும் தெரிவித்தார்கள்...

கண்மணி நாயகம் அவர்கள் தன் வாழ்வில் எந்த ஒரு முடிவையும் தன் சுய விருப்பங்களை முன்னிட்டோ அல்லது தன் மனோ இச்சையைப் பின்பற்றியோ எடுக்கவில்லை...

புனித ஸம் ஸம் நீரினால் கழுவி சுத்தம் செய்யப்பட்ட அந்தத் தூய்மையான இதயத்திற்கு சொந்தக்காரர் அண்ணலெம் பெருமானார் (ஸல்)அவர்கள் அல்லவா...

மனதின் கீழ்த்தரமான ஆசைகளுக்கு பெருமானாரின் இதயமான அந்தப் புனித தலத்தில் ஒரு துளியும் இடமில்லை...

வல்ல நாயன் தன் நேசம் இவருக்கு தான் முற்றிலும் பொருந்தும் என்று மனித குலத்திலிருந்து தேர்ந்தெடுத்து,நேசித்த ஹபீபுல்லாஹ் முத்து எம்பெருமானார் (ஸல்)அவர்கள் அல்லவா...

அவர்களின் இந்த திருமணமும் வல்ல நாயனின் ஏற்பாடே....

காரணம், ஜுவைரியா நாயகி பனுல் முஸ்தலக் எனும் கோத்திரத்தை சார்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரின் மகள்..

இவர்களை பெருமானார்(ஸல்)  அவர்கள் மணப்பதன் மூலம்இக் கோத்திரத்தைச் சேர்ந்த பலர் புனித இஸ்லாத்திற்குள் நுழைவார்கள் என்று தூய நோக்கம் கொண்டே இத்திருமணம் நடந்தது...

அண்ணலார் அவர்களின் திருமணங்களில் அதிகமானவை அடிமைகளுக்கும், விதவைகளுக்கும் மறு வாழ்வளித்தல், தூய இஸ்லாத்தின் வளர்ச்சி, போன்ற இத்தகைய உயரிய நோக்கங்களுக்காகவே நடைபெற்றன.

இந்த உத்தமரை தான் சறுகுகளான சிலர் வாய் கூசாது இழிவாகப் பேசுகிறார்கள்...

எனவே சர்ச்சை செய்வதை அடியோடு நிறுத்தி விட்டு பெருமானாரின் அகமியத்தை அறிந்து செயற்படுவது தான் நம் ஈமானுக்கு பாதுகாப்பு அரணாக அமையும்...

அண்ணலார்  அவர்கள் அன்னை ஜுவைரியாவை திருமணம் முடித்த செய்தி ஸஹாபா பெருமக்களிடம் சென்றடைய, அவர்கள் ஒவ்வொருவரும் தாயின் குடும்பத்தவர்களை எவ்வாறு தன் அடிமைகளாக வைத்திருக்க முடியும் என்று தன்னிடம் இருந்த பனுல் முஸ்தலக் கோத்திரத்தை சார்ந்தவர்களை உடனே உரிமை விட்டுவிட்டனர்...

யுத்த கைதியாக பெருமானாரை அடைந்த ஜுவைரியா, அண்ணலாரை மணந்து முஃமின்களின் தாயாகி பெரும் அந்தஸ்தை அடைந்த அன்னை ஜுவைரியா ரழியல்லாஹு அன்ஹா ஆக உயர்வடைந்தார்கள்...

இவர்களின் மூலம் கிட்டத்தட்ட நூறு குடும்பங்கள் இஸ்லாத்தை ஏற்றனர்...

அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்.."ஜுவைரியா மூலம் இஸ்லாத்தை ஏற்ற கூட்டத்தைப் போல வேறு எந்தப் பெண் மூலமும் இவ்வளவு கூட்டம் இஸ்லாத்தை தழுவவில்லை" என்று அன்னை ஜுவைரியா அவர்களின் பெருமையை எடுத்துரைக்கிறார்கள்...

இஸ்லாமிய வரலாற்றின் பக்கங்களுக்கு புகழ் சேர்த்த பெண்மணிகளில் அன்னை ஜுவைரியா  அன்ஹா அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.

(தொடரும்)



Post a Comment

0 Comments