Ticker

6/recent/ticker-posts

Ad Code



சுனாமி; 20 வருட துயரத்தின் நினைவு!


சுனாமி பற்றி அறிந்து கொண்டதும், அவ்வாறான அனர்த்தம் ஒன்று  பற்றி இலங்கை மக்கள் புரிந்து கொண்டதும் கடந்த 2004ம் ஆண்டு டிஸம்பர் மாதம் 26ம் திகதியில்தான்!

2004, திசம்பர் 25ம் திகதி இரவு உலகம் முழுவதிலும் மக்கள் நத்தார் களியாட்டங்களில் இலயித்திருந்து, பிறக்கப்போகும் புதுவருடத்தைக் கொண்டாடக் காத்திருந்த வேளையில் இவ்வனர்த்தம் நிகழ்ந்தது!

9.00 ரிச்டர் அளவிலான பாரிய  பூமியதிர்ச்சி இலங்கை நேரப்படி அதிகாலை 6.58க்கு சுமாத்ராதீவை அண்டியுள்ள கடலுக்கடியில் சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இது நிகழ்ந்தது.

தரைப்பகுதியிலுள்ள தகடுகளின் உலுப்பல், உராய்வு அல்லது வெடிப்பின்போது ஏற்படும் உந்தல் காரணமாக, கடலலைகள் வெகு வேகமாக கடற்கரை நோக்கி வந்து, கடற்கரைகளையும் தாண்டி, நிலப் பகுதிக்குள் பிரவாகித்தது!

மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்

இந்து சமுத்திரத்திலுள்ள சுமார் பதினொன்றிற்கும் மேற்பட்ட தென்கிழக்காசிய நாடுகளைச் சார்ந்த கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்த மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்டுவிட்டு, இலட்சக்கணக்கானவர்களின் உடைமைகளை அழித்தொழித்து, பல்லாயிரக் கணக்கான மக்களை அகதிகளாக்கிய பின்னரே 'சுனாமி' என்ற ஆழிப்பேரலையின் அனர்த்தங்களை இப்பிராந்திய மக்கள் நேரடி நிகழ்வின் மூலம் சரிவரப் புரிந்துகொண்டார்கள்!

'சுனாமி' என்பது ஜப்பானிய மொழிச் சொல்லாகும். இச்சொல்லுக்கு ‘துறைமுகத்தைத் தாக்கும் பேரலைகள்’ என்று பொருள் கொள்ளப்படுகின்றது.  1964க்குப் பின்னர், பாரிய கடலலைகள் தரைப்பகுதிக்கு அடித்து வருவதை இப்பெயர் கொண்டு அழைக்கத் தொடங்கியபோதிலும், அதற்கு முன்னர் இது ‘பூமியதிர்வுக் கடலலைகள்’ என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. 

1899க்கு பின்னர் உலகில் ஏற்பட்ட பாரிய கடல்சார் பூமியதிர்வுகளுள் ஒன்றாக 2004 டிஸம்பரில் நிகழ்ந்த இது, 1964க்குப் பின்னர் ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த ஒன்றாகவும்  கருதப்படுகின்றது.
இதன் தாக்கத்தால் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலைத்தீவு, பங்களாதேஷ், மியன்மார், சோமாலியா, தன்சானியா, கென்யா போன்ற நாடுகளின் கடற்கரைவாசிகளும், கடற்கரைகளில் உல்லாசப் பயணத்தைக் கழித்துக் கொண்டிருந்தோரும் தமது உயிர்களையும், உடைமைகளையும் இழந்தனர். 

இந்த 'ஆழிப்பேரலை' ஏற்பட்டு சுமார் மூன்று மாதங்களின் பின்னர் ஊர்ஜிதமான தகவல்களின்படி,  இந்தோனேசியாவில்தான் அதிகமானோர் இறந்ததாகவும், அது சுமார் 2,36,012 பேர்கள் என்றும், அடுத்தபடியாக 31,150 இலங்கையர்களும், இந்தியாவில் 16,749 பேரும், அந்தமான் - நிகோபார் தீவுகளில் 1925 பேரும், தாய்லாந்தில் 5395 பேரும், சோமாலியாவில் 298 பேரும், மாலைத்தீவில் 82 பேரும், மலேசியாவில் 68 பேரும், மியன்மாரில் 69 பேரும், பங்களாதேசில் 2 பேரும், கென்யாவில் ஒருவருமாக இறந்துள்ளதோடு, பாதிப்புக்குள்ளான நாடுகளில் அனைத்திலும் மொத்தமாக சுமார் 14,374 பேர்கள் காணாமற்போனதாகவும் அப்போதைய செய்திகள் குறிப்பிட்டன.

இவ்வனர்த்தம் காரணமாக இலங்கையில் மாத்திரம் இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்விடங்களை இழந்தன.

சுமார் 1675 கிலோ மீற்றர்கள் நீளமான இலங்கையின் கடற்கரைசார் பிரதேசங்களில் நாட்டின் முழுச் சனத்தொகையில் 33 வீத மக்கள் வாழ்கின்றனர்; நாட்டின் நகரங்களுள் சுமார் 65 வீதமானவை கடலோரங்களிலேயே அமைந்துள்ளன. 

இலங்கைக் கடற்கரையைச் சுற்றியுள்ள 12 துறைமுகங்களில் 10 அனர்த்தம் காரணமாகச் சேதமடைந்தன. அனர்த்தம் காரணமாக நேரடிப் பாதிப்புக்குள்ளான கடற்கரைவாசிகள் 1,77,785 என்றாலும், கடலை அண்டித்தொழில் புரிந்த சுமார் எட்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

வடக்கு- கிழக்குப் பகுதிகளில் பெரும் சேதம் 

இவ்வனர்த்தம் காரணமாக இலங்கையில் தாய், தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகள் 1060 பேர்கள் என்றும், தாயை அல்லது தந்தையை மட்டும் இழந்தோர் சுமார் 3414 பேர்கள் என்றும் அவ்வேளை கணக்கிடப்பட்டது. 
சுனாமி அனர்த்தம் காரணமாக வடக்கு- கிழக்குப் பகுதிகளில் பெரும்பாலான வைத்தியசாலைகள் சேதமடைந்ததாகவும், இதனால்  சுமார் ஏழாயிரம் மில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டதாகவும் அந்நாட்களில் தகவல் வெளியாகியது. 

இதன் காரணமாக வடக்கு-கிழக்குப் பகுதிகளில் சுமார் 430 கிலோ மீற்றர் நெடுஞ்சாலைகளும், அதனோடிணைந்த ஆறு பாலங்களும் பழுதடைந்தன. அத்தோடு 163 கீலோ மீற்றர் புகையிரத வீதிகளும், அதனோடினைந்த ஆறு பாலங்களும் பாதிப்புற்றன. 

சுனாமியின் தாக்கம் பசிபிக் கடலில் ஹவாயன், அலாஸ்கா கடற்கரைகளில் ஏற்பட்ட பின்னரே  ‘சுனாமி சர்வதேசத் தகவல் நிலையம்’ ஹொனலூலு நகரில்  நவம்பர் மாதம் 1965ம் ஆண்டில் நிறுவப்பட்டது.

பசிபிக் கடலில் ஏற்படும் சுனாமிப் பேரலைகள் பற்றிய தகவல்களை அறியும் பொருட்டு  UNESCO அணுசரணையுடன் இந்நிலையம் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

புவியின் மேற்பகுதி கற்கோளங்களை ஆரம்பகால ஆய்வாளர்கள் 6 தகடுகள் என்றனர். தற்போது இவை 12 தகடுகளாகக் கணக்கிடப்பட்டுள்ளன. இறுதியாக 13வது தகடாக 'இந்தியத் தகடு' குறிப்பிடப்படுகின்றது. 

2004ம் ஆண்டு ஏற்பட்ட பூமியதிர்வானது இந்திய, சுமாத்ரா, அவுஸ்திரேலியாத் தகடுகள் சந்திக்கின்ற இடத்தில், இந்தியத் தகட்டில் ஏற்பட்ட வெடிப்பின் தாக்கத்தினாலேயே நிகழ்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தியத் தகட்டில் ஏற்பட்டுள்ள வெடிப்பானது இமயமலையை நோக்கி நகர்வதாயும், அதனால் எதிர்காலத்தில் இந்தியப் பிராந்தியத்தில் பூமியதிர்வுகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே இருப்பதாகவும் ஆய்வாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

1883ல் கல்கத்தாவில் ஏற்பட்ட பூமியதிர்வானது, இலங்கையில் அருகம்குடாவிலும் ஏனைய சில பகுதிகளிலும்  தாக்கங்களை ஏற்படுத்திய தகவல்களும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. 
இதுவரை உலகில் நிகழ்ந்துள்ள அதிபாரிய பூமியதிர்வு 1960 மே 22ம் திகதி சிலியில் சந்தியாகோ-கொண்கேசன் நகர்களுக்கிடையே சுமார் 9.5 ரிச்டர் அளவிலும், அடுத்த பாரிய பூமியதிர்வு 1964 மார்ச் 28ம் திகதி 9.2. ரிச்டர் அளவில் அலாஸ்காவிலும், 1957 மார்ச் 9ம் திகதி 9.1 ரிச்டர் அளவில் எண்டியநோப் தீவுகளிலும் ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு அடுத்தபடியான பாரிய பூமியதிர்வு 2004 டிஸம்பரில் ஏற்பட்ட 9.0 ரிச்டர் அளவிலானதாகும்!

கின்னஸ் புத்தகம் பாரிய அனர்த்தங்களாக 1896ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியையும், 1976 ஜூலை 28ல் சீனாவின் டேங்சான் பிரதேசத்தில் ஏற்பட்ட பூமியதிர்வையும், 1887 ஒக்டோபரில் சீனாவின் ஹொடெங் ஆற்றுநீர் பொங்கியெழுந்ததையும் குறிப்பிடுகின்றது. 

ஆரம்ப காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பூமியதிர்வு பற்றிய புள்ளிவிபரங்கள் கிடைக்கப்பெறாவிடினும், கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் 1615 ஏப்ரில் 14ம் திகதி ஏற்பட்ட பூமியதிர்வின்போது பூமி வெடித்து ஒருவகைக் ‘கெந்தகம்’ கலந்த புகை மண்டலம் வெளிப்பட்டதாகவும்,  கற்பாலங்கள் விழுந்து நொறுங்கியதாகவும், இதனால் 200 வீடுகள் சிதைவுற்று சுமார் 2000 பேர் உயிரிழந்ததாகவும் அறிய முடிகின்றது.

1880, டிஸம்பர் 31ம் திகதி காலை 7.00 மணிக்கு இலங்கையில் நிகழ்ந்த பூமியதிர்வின்போது ஏற்பட்ட சுனாமிப் பேரலையினால் திருகோணமலைப் பிரதேசத்தில்  200 - 300 வீடுகள் அழிந்ததாகவும்,  2000 - 3000 உயிர்கள்  பலியானதாகவும் கலாநிதி எம். தனவர்தன குருகே எழுதியுள்ள கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்!

செம்மைத்துளியான்


 



Post a Comment

0 Comments