Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் ஆய்வுக் கழகத்தின் பொன்விழா: கோலாகலம்...!

சான்றோர்கள், அமைச்சர்,மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் பங்கேற்றுச் சிறப்பித்த வரலாற்றுச் சாதனை.


கோவை, ஜூலை 5, 2027:

கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் திருக்குறளை உலகமெங்கும் எடுத்துச் செல்லும் உயரிய இலட்சியத்துடன் செயல்பட்டு வரும் திருக்குறள் ஆய்வுக் கழகத்தின் பொன்விழா (1976–2026), 2026 ஜூலை 5 ஆம் நாள் கோவை இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மிகுந்த கோலாகலத்துடனும், இலக்கியச் செழுமையுடனும், தமிழர் பண்பாட்டு பெருமையுடனும் நடைபெற்றது.

திருக்குறள் ஆய்வுக் கழகத் தலைவர் முனைவர் டாக்டர் மு.க. அன்வர் பாட்சா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கல்வியாளர்கள், இலக்கிய அறிஞர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், வெளிநாட்டுத் தமிழர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

விழாவிற்கு இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் டாக்டர் சி.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். வடிவமைப்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பணிகளை முனைவர்  டி.ஜே. ராஜூ சிறப்பாக மேற்கொண்டார். நிகழ்ச்சியைத் தமிழ்ச்சான்றோர் களும் மாணவர்களும் சிறப்பாக வழிநடத்தினர்.

விழாவில் குவைத் நாட்டின் M.A. Hyder Group of Company நிறுவனத்தின் இயக்குநரும் தொழிலதிபருமான டாக்டர் எஸ். எம். ஹைதர் அலி அவர்கள்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, திருக்குறளின் உலகளாவிய முக்கியத்துவத்தை,தம்முடைய வாழ்வியல் அனுபவத்துடன் எடுத்துரைத்தார். திருக்குறள் மனித சமுதாயத்திற்கான ஒப்பற்ற வாழ்க்கை நெறி நூல் என்றும், இளைஞர்கள் அதனை வாழ்வியல் வழிகாட்டியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்வில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு வே. சம்பத்குமார் அவர்கள், பேராசிரியர் டாக்டர் ஆர். விஜயராகவன், முனைவர் ஆர். சுகுமார், உலகசாதனையாளர் திரு வெங்கடேஷன், கல்வியாளர்கள், இலக்கிய அறிஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சான்றோர் பெருமக்கள் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.
பொன்விழாவின் முக்கிய அம்சமாக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. முனைவர் மு.க. அன்வர் பாட்சா அவர்களின் தமிழ், திருக்குறள்,நான் வியந்து பார்க்கும் மாமனிதர்,மற்றும் பொன்விழா மலர் நூல்கள் வெளியிடப்பட்டன. முதல் பிரதிகளை சிறப்பு விருந்தினர் அமைச்சர் வெளியிட, இலக்கிய அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் பெற்றுக்கொண்டனர். நூல்களின் கருத்து, ஆய்வின் ஆழம் மற்றும் சமுதாயப் பயன்பாடு குறித்து பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

விழாவின் மற்றொரு சிறப்பாக மகளிர் அரங்கம் நடைபெற்றது. பெண்களின் கல்வி, சமூகப் பொறுப்பு, குடும்ப நலன், திருக்குறளில் பெண்களின் மாண்பு, இன்றைய தலைமுறைக்கான விழிப்புணர்வை ஒட்டி அறம்,பொருள்,இன்பம் என்ற  தலைப்புகளில்  மகளிர் அறிஞர்கள் கருத்துரையாற்றினர். இந்நிகழ்வு பெண்களின் பங்களிப்பை உயர்த்திப் பேசும் சிறந்த அரங்கமாக அமைந்தது.

பொன்விழாவை யொட்டி நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ், கல்வி, சமூகப்பணி, தொழில், மனிதநேயம் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய ஆளுமைகள் கௌரவிக்கப் பெற்றனர். ஒவ்வொரு விருதாளரின் சமூகப் பங்களிப்பும் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டு, நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆளுமைகள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ்ப்பணியாளர்கள் மற்றும் இளைஞர் முன்னோடிகள் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் மாநில அரசின் அமைச்சர்,  வெளிநாட்டு தொழிலதிபர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் இலக்கிய உலகின் முன்னணி சான்றோர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர். அவர்கள் அனைவரும் திருக்குறள் ஆய்வுக் கழகத்தின் ஐம்பது ஆண்டு அர்ப்பணிப்பு பணியை மனமாரப் பாராட்டி, 
முனைவர் மு.க. அன்வர் பாட்சா அவர்களின் இடையறாத இலக்கியச் சேவைக்கு உயரிய பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி முழுவதும் திருக்குறள், வாழ்த்தரங்கம், விருது வழங்கல், நூல் வெளியீடு, நினைவுப்பரிசு வழங்குதல், மகளிர் அரங்கம், சான்றோர் கருத்தரங்கம், பாராட்டு விழா மற்றும் நன்றியுரை உள்ளிட்ட நிகழ்வுகள் ஒழுங்காக நடைபெற்றன.

இறுதியில் திருக்குறள் ஆய்வுக் கழகத் தலைவர் முனைவர் டாக்டர் மு.க. அன்வர் பாட்சா,செயலாளர் வாகை துரைசாமி, பொருளாளர் ர.சின்னசாமி மற்றும் விழாக்குழுவினர் அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்கள். 

ஐம்பது ஆண்டுகால திருக்குறள் பணிக்கு உறுதுணையாக இருந்த அறிஞர்கள், ஆதரவாளர்கள், தன்னார்வலர்கள், கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்கள். எதிர்காலத்தில் திருக்குறளை உலக மொழிகளில் பரப்பும் புதிய திட்டங்களையும் தலைவர் அறிவித்தார்.

பொன்விழா நிகழ்வு, ஒரு சாதாரண விழாவாக அல்ல; தமிழின் பெருமையையும், திருக்குறளின் உலகளாவிய மகத்துவத்தையும் மீண்டும் ஒருமுறை பறைசாற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க இலக்கிய மாநாடாக அமைந்தது. தமிழறிஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா நினைவாக இந்நிகழ்வு பதிந்துள்ளது.

விழாவில், 

தேசிய மாநில சாதனை படைத்த, ஏபிஜே அப்துல் கலாம் விருது பெற்ற சிறுமுகையில் இருந்து கொண்டுவரப்பெற்ற  1330 திருக்குறள் தறியில் நெய்த சேலை  திருக்குறள் ஆய்வுக்கழக பொன்விழாவில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது,கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பார்வையாளர்கள் அனைவரும் கண்டுமகிழ்ந்தனர்...

வேட்டை  நிருபர் 
தமிழ்நாடு 

 


Post a Comment

0 Comments