இதயத்தை கவர்ந்த இஸ்லாத்திற்காக தன் தந்தையின் அர்ப்பணிப்பை, தந்திரம் செய்து நியாயப்படுத்திய அன்பு மகள் அஸ்மா பின்த் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹா...
இறை கட்டளைப்படி மதீனா செல்வதற்கு ஆயத்தமான அண்ணலார் (ஸல்) அவர்களுடன் அன்புத் தோழர் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுவும் சென்றார்கள்...
அன்னை அஸ்மா, தன் உயிரை விடவும் நேசித்த இவர்கள் இருவருக்குமான உணவுப் பொருட்களை அவர்களிடம் ஒப்படைத்த சம்பவத்தை நாம் முந்தைய பதிவுகளில் ஒன்றில் பார்த்தோம்...
அதே வீரமங்கை அன்னை அஸ்மாவின் பெரும் குணங்களில் ஒன்றை கீழ் வரும் சம்பவம் உலகத்திற்கு பறைசாற்றுகிறது...
தன் தந்தை ஹிஜ்ரத்திற்காக வீட்டை விட்டு வெளியானதும் அன்னை அஸ்மா அவர்கள் வீட்டில் தனிமையில் இருந்தார்கள்...
அச்சமயத்தில் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை அபூ குஹாஃபா தன் மகன் ஹிஜ்ரத் செய்ய கிளம்பி விட்ட செய்தி அறிந்து அவர்களின் வீட்டிற்கு வந்தார்...
அவர் அந்த நேரம் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. அதனால் தன் மகன் பெருமானார்(ஸல்) அவர்களுடன் எந்நேரமும் கூடி இருப்பதையும், அவர்களுக்காக தன் சொத்துக்களை தியாகம் செய்வதையும் விரும்பவில்லை...
அண்ணலாரின் தோழமை பெற்ற அபூ பக்கர் ரழியல்லாஹு அன்ஹு சாதாரணமானவர்களா என்ன!!!
தன் வாழ்வை நெறிப்படுத்திய இஸ்லாத்திற்காக, அதற்கு வழிகாட்டியாக அமைந்த அண்ணலார் ﷺ அவர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்யக் கூடியவர்கள் அல்லவா அவர்கள்....
ஹிஜ்ரத் செய்வதற்காக தன்னிடமிருந்த மொத்த பணத்தையும் கிட்டத்தட்ட 6000 திர்ஹங்களை அள்ளிக்கொண்டு இஸ்லாத்திற்காக செலவழிக்கப் புறப்பட்டார்கள்...
இதை எவ்வாறோ அறிந்த அபூ குஹாஃபா, தன் பேரப்பிள்ளை அஸ்மாவிடம் "உன் தந்தை என்ன இப்படி வீண் செலவு செய்து விட்டாரே..உங்களுக்காக என்ன விட்டு சென்றிருக்கிறார்? அனைத்தையும் பொறுப்பின்றி இஸ்லாத்திற்காக செலவழிக்கிறா ரே!"
என்று தன் மனக் கவலையை வெளிப்படுத்தினார்...
உண்மையிலே அவர்களது வீட்டில் ஒரு திர்ஹம் கூட சொந்த செலவுக்கென்று மீதமில்லை...
அபூ குஹாஃபா கண்பார்வையை இழந்தவர். எனவே உடனே அஸ்மா தன் பாட்டனாரிடம் "பாட்டனாரே! நீங்கள் வீணாக மனதை போட்டுக் குழப்ப வேண்டாம்.
நம் தந்தை நமக்கு தேவையான அளவு பணத்தை வைத்து விட்டு தான் சென்றிருக்கிறார்"என்று பாட்டனாரிடம் கூறிவிட்டு,
பளிங்கு கற்களை ஒரு உண்டியல் போன்ற ஜாடியில் போட்டு, அதன் மேற்புறத்தை புடவையால் கட்டி வைத்துவிட்டு, தன் பாட்டனாரிடம் அதை கொடுத்து " இதோ!உங்களுக்கு சந்தேகம் என்றால் இதை தொட்டுப் பாருங்கள்" என்று அவரிடம் அந்த ஜாடியை கொடுத்து குழுக்கியும் காண்பித்தார்கள்...
அந்தக் கற்களும் திர்ஹங்களைப் போல ஒலிஎழுப்ப, அபூ குஹாஃபாவும் அதை திர்ஹங்கள் என்றே நம்பி விட்டார்...
"நல்ல நேரம் உன் தந்தை உங்களுக்காக இதையாவது விட்டுச் சென்றிருக்கின்றார். நல்லது" என்று கூறி அவ்விடம் விட்டு அகன்றார்...
இருக்கும் பணம் சொந்த தேவைகளுக்கே போதாது இதில் எங்கே பிறருக்கு தர்மம் செய்வது என்று அலுத்துக் கொள்ளும் இன்றையபெண்கள், செலவுக்கு எதுவுமே இல்லாத நிலையிலும் இறை பொருத்தத்தை பெற்றுத்தரும் தன் தந்தையின் தியாகச் செயலை நியாயப்படுத்திய அன்பு மகள் அன்னை அஸ்மாவின் இவ் அழகிய முன்மாதிரியை நினைவில் கொள்வது கடமையல்லவா....(தொடரும்)
0 Comments