புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -111

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -111


“இன்னும் சில காலங்களில் உலகத்தில் நிகழப்போகும் பாரிய அழிவொன்றை நீ தடுத்து நிறுத்த விளைந்துள்ளாய்! அது உன்னிலிருந்தும் நழுவிச் சென்றுவிட்டது குழந்தாய்!” என்று நிதானமாக அந்தப் பெரியவர்  கூறிமுடித்தபோது, இர்வினுக்கு குகையிலிருந்து குள்ளர்கள் எடுத்துச்  சென்ற புராதன நூலின் நான்கு பக்கங்களே நினைவுக்கு வந்தது. அவற்றில் அடிக்குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் ஒருவகையில் முக்கியத்துவம் பெற்றதாக  இருக்குமோ என்ற கேள்வி அவனுக்குள் உண்டானது.

“குழந்தாய், சிலகாலங்களுக்கு முன்னர் கிரேக்கத்தின் “கிரீடி” பகுதியிலிந்து எனது பெற்றோருடன் நான் இங்கு வந்தபோது, கால் சறுக்கி இந்தக் கல்லடிவாரத்திற்குள் விழுந்து விட்டேன். இங்கு விழுகின்றவர்கள் எவரும் உயிரோடிருப்பதில்லை என்ற வனவாசிகளின் பேச்சை நம்பினர் போலும்!  அவர்கள்  நான் இறந்திருப்பேன் என்ற நம்பிக்கையில் என்னைத் தேடாது விட்டுவிட்டு  இங்கிருந்து சென்றுவிட்டனர்!”  என்றவாறாகத்  தன் கதையைக் கூற ஆரம்பித்த பெரியவர், சற்று நிறுத்தியவேளை,  இர்வின் குறுக்கிட்டான்.

“பெரியவரே, இப்போது உங்களின் வயது எத்தனையாக இருக்கலாம்?” என்று அவன் கேட்டபோது,

“எனக்குத் தெரியாது குழந்தாய்!” என்று கூறிவிட்டு, அவர் தான் இருந்த  இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் தெரிந்த ஒரு பென்னம்பெரிய மாமரத்தைச்  சுற்றிக்காட்டி, அதன் பக்கத்தில் ஒரு கிடங்கு இருப்பதாகவும் அதற்குள் இருக்கின்ற விதைகளைக் கணக்கிட்டால் எனது வயதை அறிந்து கொள்ளலாம் என்று கூறியதும், இர்வினும், செரோக்கியும்  கிடங்கின் பக்கத்தில் சென்று, அதனை எட்டிப் பார்த்தபோது அதற்குள்  மாம்பழ  விதைகள் குவிந்து காணப்பட்டன!

அவற்றை எண்ணிவிடவேண்டுமென்ற அவாவில்,  விதைகளை வெளியே எடுத்து இருவரும் எண்ணலானான்.

சரியாக எண்பத்தெட்டு விதைகள் இருந்ததால், பெரியவரின் வயது அதற்கும் அதிகம் என்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டனர்!

தூர இருந்து இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த செரோக்கியின் தந்தை இர்வினின் புத்திசாதுரியத்தை நினைத்து வியந்தார்! வெளியுலகில் வாழ்வோர் கற்கையில் கவனம் செலுத்தித் தமது அறிவை மேம்படுத்திக்கொல்வதே அதற்குக் காரணம் என்று நினைத்துக் கொண்டவராக நின்றிருந்தவரிடத்திற்கு, இரவின் நெருங்கி வந்தான்!

“என்னை மன்னித்து விடுங்கள் தந்தையே!” என்றவாறாக அவரது காலடியில் விழுந்தவாறு மன்னிப்புக் கேட்கலானான்!

“எழுந்திரு மகனே, என்னிடம்  ஏன் நீ    மன்னிப்புக் கேட்க வேண்டும்?”  என்றவாறாக அவனது தோள்களைப் பிடித்தவாறே அவனை எழுப்பிவிட்டார்!

நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த செரோக்கி குழம்பிப்போய்விட்டான்!

‘தன் நண்பன் இர்வின், தனது  தந்தையிடத்தில் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்?’

எதையும் இலகுவில் புரிந்துகொள்ளமுடியா நிலையில்  அந்தக் கானகத்து இளைஞன் தவியாய்த் தவிக்கலானான்!  

(தொடரும்)  


Post a Comment

Previous Post Next Post