பிரார்த்தனை!

பிரார்த்தனை!


'உங்களுக்கு தெரியுமா ஆயிஷா டீச்சர் 5 ஆம் வாட்டுல போட்டிருக்காம்' அவசரமாக போய்க் கொண்டிருந்த 
என்னை நிறுத்தி வழமையாக தகவல் மையம் என செல்லமாக அழைக்கும் ரிபானா கூறவும் என்னவா இருக்கும் என ஒரு கணம் எனக்குள்ளே கேட்டுக்கொண்டு ஐந்தாம் வாட்டை நோக்கி நடந்தேன். 

சரியாக மூன்றாவது கட்டில் ஆயிஷா டீச்சர் வழமையான அதே புன்னகையுடன் படுத்திருந்தார். அவரது மகள் அருகில் நின்றவாறு என்னைக் கண்டதும் சிறிது கண் கலக்கத்துடன் பார்த்தார்.! 

என்ன நடந்திருக்கும் என்பதை மருத்துவ பதிவுகள் மூலம் தெரிந்து கொண்டேன்.  அவருக்கு முதுகில் ஏற்பட்ட ஒரு கட்டி காரணமாகவே அவர் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அது ஒரு அசாதாரண இடத்தில் இருந்ததாலும் அளவில் பெரிதாக இருந்ததாலும் ஒரு பகுதியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

இன்னமும் ரிப்போர்ட் வரவில்லை. ஆயிஷாடீச்சரை  பார்க்கும்போதெல்லாம் அவர் எனது மூத்த மகளுக்கு முதலாமாண்டு வகுப்பாசிரியராக இருந்ததே நினைவிற்கு வரும் முதலாமாண்டு என்றவுடன் தாயின் அரவணைப்பை தாண்டி புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும் எனது மகள் ஆயிஷா டீச்சரையும் இன்னொரு தாயாகவே பார்த்தாள்.

பலதடவை பாடசாலைக்கு நான் செல்லும்போது ஆயிஷா டீச்சரின் மடியில் இருந்தவாரே எனது மகள் பாடப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பார். 

அந்தளவுக்கு தாய்மை உணர்வுடனும் உண்மையான அன்புடனும் மாணவர்களையும் அவரது பிள்ளைகள் போலவே பார்க்கும் 
அவருக்கு  எதுவும் ஆகக்கூடாது என்று எண்ணியவாறே எனது கடமைக்கு சென்றேன்.

 ஐந்து நாட்கள் இருக்கும் ஆயிஷா டீச்சரின் மகளிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 

அவரது தாயின் பரிசோதனை அறிக்கையில் ஏதோ ஒரு புற்றுநோய் இருப்பதாக சொல்கிறார்கள் கொஞ்சம் பயமாக உள்ளது ,தயவு செய்து வரமுடியுமா எனக் கேட்டார், அவர் கிளினிக்கில் இருப்பதாகவும் சொன்னார்.

எனக்குள் ஆயிரம் கேள்விகள் பிரார்த்தனைகளுடன் அவசரமாக விரைந்தேன். அவருக்கு வந்திருக்கும்  புற்றுநோய் கொஞ்சம் வீரியம் கூடியது தான் என்னாலேயே நம்ப முடியவில்லை 

உலகத்திலுள்ள நல்ல மனிதர்கள் எல்லாம் ஏன் அற்ப ஆயுளுடன் வாழ்கிறார்கள்,! என்று பல தடவை எனக்குள்ளே நான் கேட்டிருக்கிறேன்.

வாழும் சொர்க்கவாசி என்று ஆயிஷா டீச்சரை நான் பலமுறை எண்ணியிருக்கிறேன். அவரது தந்தையார் ஊரிலேயே மூத்த முஆத்தீன் அவர் பிரசங்கம் செய்யாத ஜும்மா நாட்களே இல்லை எனலாம். தள்ளாத வயதிலும் எங்களூர்ப் பள்ளியில் தானே ஜும்மா செய்ய வேண்டும் என முனுமுனுத்தபடியேனும் தொழுவித்திருக்கிறார் அவரது கடைசிக்காலம் வரை. அவர் 100 மீட்டர் தூரத்தில் நடந்து வரும் போதே அத்தர் மனமும் பிரகாசமான அவர் முகமும் இவர்தான் வருகிறார் என ஊரில் உள்ள அனைத்து பெண்களுக்கும்  ஆன்மிகப் பண்புகளை எல்லாம் அப்போதுதான் வெளியே எடுப்பார்கள். 

முக்காடு போட்டு முந்தானையை சரி செய்து வீதியோரங்களில் நின்றிருந்தவர்கள் மறைவாகவே நிற்பார்கள். 

ஏனென்றால் மார்க்கத்திற்கு முறணாக ஒழுங்குமுறை அற்று அவ்விடத்தில் யாராவது நிற்பதைக் கண்டால் அவ்விடத்திலேயே நின்று மார்க்க அறிவுரைகளை, போதனைகளை கொஞ்சம் கண்டிப்புடன் சொல்லிச் செல்வார். 

இந்த கண்டிப்புக்காகவே அவரைக் கண்டால் ஒருவித பயமும் பக்தியும் ஊரிலுள்ள அனைத்து பெண்களிடமும் ஆண்களிடமும் வந்து விடும், அவரின் அதே வளர்ப்பில் வளர்க்கப்பட்ட டீச்சர் கொஞ்சம் கூட மார்க்க மணம் மாறாமல் கனிவான உள்ளம் கொண்ட ஒரு ஆத்மா உடையவர், இவருக்கு இந்த நோய் வந்திருப்பது என்னால் மட்டுமல்ல பலரால், அவரிடம் படித்த மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அவரது உறவினர்களுக்கும் ஒரு பெரிய இடி விழுந்தது போல் இருந்தது, நாட்கள் செல்ல செல்ல அவரின் நோயின் தன்மை அவரைப் போட்டு வாட்டியது .

ஓரிரு மாதங்களிலேயே அவரது மகளின் கண்டியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை நான் செவிமடுத்த போது.. உண்மையில் மயக்கம் வருவது போலவே இருந்தது. எதிர்பாராதவிதமாக கண்டி வைத்தியசாலையில் அவர் உயிர் பிரிந்து விட்டது, 

ஆயிஷா டீச்சரின் கணவன் அபூஹனீபா ஆசிரியர் ஒரு விஞ்ஞான ஆசிரியர், ஊரில் அபூஹனீபா ஆசிரியர் என்றால் தெரியாதவர்களே கிடையாது அந்த அளவுக்கு எந்த ஒரு  விளையாட்டு நிகழ்ச்சிகள்,  பாடசாலை சம்பந்தப்பட்ட சகல போட்டி நிகழ்ச்சிகள் எல்லாவற்றுக்கும் முன்னின்று அவராலான முழுமையான பங்களிப்புகளை செய்வார், எந்த ஒரு கள்ளங்கபடமுமற்ற நல்ல மனிதர். இவர்கள் இருவருக்கும் நான்கு பெண் பிள்ளைகள் மூத்தவர் எம் எல் டி ஆகவும் இரண்டாவது குழந்தை உயர்தரத்தில் படித்துக் கொண்டும் மூன்றாவதும் நான்காவதும் படிப்பில் சிறந்து விளங்கியும் வாழ்ந்து வந்த ஒரு அழகிய குடும்பம். 

 டீச்சரின் இறந்த செய்தி அபுஹனிபா ஆசிரியரின் மனதை வெகுவாக பாதித்தாலும் அவரது மாறாத புன்னகையும்  தைரியமான அணுகுமுறையும் எல்லோரையும் ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது. உண்மையில் இந்த மனிதர் கவலைப்படவில்லை! என்று கேட்கும் அளவிற்கு தனது நான்கு பெண்பிள்ளைகளும் அவர்களது தாய் இறந்த துக்கம் தெரியக்கூடாது என்பதற்காக தனது கவலையை மறைப்பது போலவே தோன்றியது. 

ஆயிஷா டீச்சரின் மரணத்திற்குப்பின் பத்து நாள் இருக்கும் ஒரு நாள் காலை ஏழு மணிக்கு வீதியோரங்களில் சலசலப்பு கேட்டு எட்டிப் பார்த்தேன் என்ன ஒரு ஆச்சரியம், கவலை ஆயிஷா டீச்சரின் கணவர் அபூஹனிபா ஆசிரியர் சந்தியில் கடைக்குச் சென்று திரும்பும் வழியில் திடீரென மயங்கி விழுந்ததாக தகவல் எட்டியது அவசரமாக வைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து விசாரித்தேன் அவர் ஏற்கனவே மரணித்து தான் வைத்தியசாலைக்கு வந்திருப்பதாக கேள்விப்பட்டேன். 

இவர்கள் இருவரும் இவ்வளவு சீக்கிரமாக உலகைவிட்டுச் செல்வார்கள் என ஊரில் உள்ள யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆயிஷா டீச்சரின் மறைவிலிருந்து  திரும்பும் முன் அவரது கணவரான அபுஹனிபா ஆசிரியரின்  மரணத்தை ஊரிலுள்ள யாராலும் தாங்கவே முடியாத போது அவர்களது குழந்தைகள் எவ்வாறு பொருந்திக் கொள்வார்கள்! 

எல்லோரின் பார்வையும் அவர்களது குடும்பத்தை நோக்கியே இருந்தது. அந்த மையத்து வீட்டில் நான்கு பெண் பிள்ளைகளின் முகத்தை பார்க்கும்போது கண்ணீர் வடிக்காத ஆட்களே இல்லை. கடைசிப் பிள்ளையின் பரிதாபமான பார்வை கண்களை குளமாக்கியது. 

அந்த நான்கு குழந்தைகளைப் பார்க்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களை சூழ்ந்து நிற்கும் அப்போதைய எண்ணம் இந்த நான்கு குழந்தைகளின் கஷ்டமே தெரியாமல் சகல உதவிகளையும் செய்ய வேண்டுமென்பதுதான்.

நெருங்கிய சொந்தங்கள் மட்டுமல்லாமல் பழகியவர்கள் தெரிந்தவர்கள் அனைவருமே அந்த குடும்பத்தை தொடர்ந்து நல்ல நிலைக்குக் கொண்டு வரும் வரை உதவியாக இருப்போம் என்ற மனநிலையில்தான் மையத்து வீட்டுக்கு வந்த பெரும்பாலானவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ஒருவாறு நாட்கள் கடந்தன அவ்வப்போது பக்கத்து வீட்டுக்காரர்களும் உறவினர்கள் தெரிந்தவர்கள் என உதவிகள் கிடைக்கப் பெற்றாலும் சிலர் இந்த சம்பவத்தை மறந்து தான் போய்விட்டார்கள் ஒரு சில நல்லுள்ளங்கள் தொடர்ச்சியாக உதவி வந்தார்கள். 

ஒருவாறு போராடி மூத்த மகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது.  இதற்காக அதிகம் பாடுபட்டவர்  அபுஹனிபா ஆசிரியரின் சகோதரர், என்னதான் கவலைக்கு ஆறுதலாக ஊரார் முன் வந்தாலும் முக்கியமான பொறுப்புகளை உறவுகள் மட்டுமே செய்வார்கள். 

அந்தவகையில் அபுஹனிபா ஆசிரியரின் சகோதரர் ஆயிஷா டீச்சரின் குடும்பம் அவர்களுக்கு பக்கபலமாக இருந்தது மூத்த மகளின் திருமணம் ஒரு உயர் பதவியில் உள்ள மணமகனுடனேயே நடைபெற்றது. ஆயிஷா டீச்சரின் இரண்டாவது மகள் பரீட்சையில் சித்தி அடைந்து வைத்தியத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார் அவரின் மூன்றாவது  மகள் பிசியோதெரபி துறைக்கும் நான்காவது மகள் வைத்தியத்துறைக்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தது அவர்களது தாய் மட்டும் தகப்பனாரின் பிரார்த்தனைக்கான பலன் என்றே ஊரில் உள்ளவர்கள் இன்றுவரை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். 

உண்மையில் நமது தாய் தந்தை சேர்த்துவைத்த சொத்து நமக்கான அவர்களுடைய பிரார்த்தனைகளும்,நமக்கு வழிகாட்டிய ஒழுக்க நடத்தைகளுமேயாகும்

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post