புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -112

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -112


பூமியில் நாகரிக உலகோடு தொடர்பில்லாமல் வாழும் பழங்குடி மக்களில் “அமேசான்’ எல்லையில் வாழும் ‘புரோகொனிஷ்’ கிராமத்தவரும் அடங்குவர்.

இந்த தொடர்பின்மைக்கு புவியியல் காரணங்களோடு, வேறும் பல காரணங்களும்  உண்டு.  இப்பிரதேசத்தை பிரேசில் பாதுகாப்பு வாலயமாக வரையறுத்திருப்பதுவும் இன்னொரு காரணமாகும்! இதனால்தான் இம்மக்களின் தனித்துவம் இன்றுவரை காப்பாற்றப்பட்டு வருகின்றது. அதே நேரம்  இதுவரை இங்கு வெளியாட்கள் சென்றிருந்தாலும், சந்திப்பு மோசமாகவே நிகழ்ந்துள்ளது!

இர்வின் வனவேஷத்தில் சென்றதன்  காரணமாகவே சந்திப்புக்கள் சீராக அமைந்தன.

வனவாசிகளின் வாழ்க்கை முறை பற்றி அவன் நன்கு  அறிந்து கொள்வதற்கும்,  தனது பல்கலைக்கழகப்பட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஆவணப் படுத்தலுக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அதன் பின்னர் “அமேசான்” சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட சஞ்சிகைக்கு வனத்தைப்பற்றிய ஆக்கங்களை அவன் படைப்பதற்கும் வனவாசிகள் வேசத்தில் அவன் நுழைந்து   அங்கு அவனது சந்திப்புகள்  சீராக அமைந்ததுவும்  அனுகூலமானதாகும்!

செரோக்கியின் தந்தையை ஒருவாறு சமாளித்துவிட்டதாகத் தனக்குள் திருப்தியடைந்துகொண்ட   இர்வின், பெரியகல்லடிவாரத்தில் தவத்தில் ஈடுபட்டு,  அங்கேயே தனித்து வாழ்ந்துவரும் பெரியார் பற்றிய அரிதான தகவல்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில்  அவர்முன் போய் நின்றான்!

"குழந்தாய், உனது துடிப்புத்தனமும், புத்திக்கூர்மையும் எனக்குப் பிடித்திருக்கின்றது!  உன்னால் எனக்கொன்று ஆகவேண்டியுள்ளது!” என்று நிதானமாக இர்வினை நோக்கினார் அந்தப்பெரியார்.

ஆச்சரியமடைந்த இர்வின், ‘அது என்ன?’ என்பதுபோல் பதிலுக்கு  அவரை உற்று நோக்கினான்.

“ ‘கிரீடி’யிலிருந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர், எனது தந்தை ஏன் இங்கு வந்தார் என்பதை நீ அறியமாட்டாய் குழந்தாய்! இதோ பார்த்தாயா இந்தப் புராதன நூலை. அவர் அங்கு இதனை  வைத்துக் கொண்டு ‘பஆல்’ பார்ப்பதில் ஈடுபட்டு, அத்துறையில்  பிரசித்தியும்  பெற்றிருந்தார். இந்த நூலை வைத்தும், தனது பகுத்தறிவப் பயன்படுத்தியும்  ‘அமேசான்’ வனப்பகுதியிலுள்ள  ‘பெரியாகல்’ ஒன்றிற்கருகில் குகையொன்றினுள் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த நூலொன்று இருப்பதை அறிந்து கொண்டார்!  அந்த நூலைத்தேடியே அவர் தன் குடும்பத்தாருடன் அக்காலை இங்கு வந்தார்!  நாங்கள் அனைவரும் அன்று இந்தக் கல்லின்மேல் ஏறினோம். எனது தந்தை தனது நூல் அடங்கிய பையை என்னிடம் தந்துவிட்டு, கல்லின்மேல் அங்குமிங்குமாக  அலைந்தபடி எங்காவது குகையொன்று தென்படுகின்றதா என்று பார்க்கலானார்! அப்பொழுது எனக்கு வயது பத்து இருக்கலாம். நான் பையோடு கல்லருகே வந்தபோது, கால்  சறுக்கி விழுந்து விட்டேன்.” என்று தன் கதையை விலாவாரியாகக் கூறி முடித்த பெரியவர் சற்று நிதானமடைந்தார். அப்பொழுது அவர் மூச்சு உள்வாங்கி வெளியானது!

ஊடகத்துறையில் முன்னோடியாகவிருந்த இர்வினுக்கு அவரது வரலாற்றுத் தடையல்  சுவாரசியமாக இருந்ததில் வியப்பில்லை !

பெரியார் கூறிக்கொண்டிருப்பதை விளங்கியும் விளங்காமலும் செரோக்கியும் அவனது தந்தையும் நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

பெரியாரின்  தந்தை தேடிவந்தது தன்னிடம் தற்போது இருக்கின்ற நூல்தான் என்பதை இர்வினால் உணர்ந்துகொள்ள முடிந்தது! அந்த நூலில்தான் இப்பொழுது நான்கு பக்கங்கள் இல்லாமலாகிவிட்டதே! அந்தப்பக்கங்களைத் திருடிச் சென்ற குள்ளர்கள், அவற்றை வைத்து  என்னதான் செய்யப்போகின்றார்களோ?

அதற்கும் பெரியார் தன்னிடத்தில் ஆரம்பத்தில் குறிப்பிட்ட, ‘இன்னும் சில காலங்களில் உலகத்தில் நிகழப்போகும் பாரிய அழிவொன்றை நீ தடுத்து நிறுத்த விளைந்துள்ளாய்!’ என்பதற்கும்  ஏதோவொரு  சம்பந்தம் இருப்பதை இர்வின் உணரலானான்!

(தொடரும்)


  


Post a Comment

Previous Post Next Post