நானாகவே நீ !

நானாகவே நீ !


எனக்குள்ளே நான்
தீர்மானித்துக் கொள்கிறேன்
" எந்த சூழலிலும்
கோபத்தை உன்னிடம்
கொட்டிவிட கூடாதென்று..."
என்னவோ தெரியவில்லை
உனது அதீத கோபத்தால்
என்னையும் 
ஆட்கொண்டு விடுகிறது
இனம் புரியாத கோபம்
உன் கோபத்தின் நியாயத்தை
தாமதமாக உணர்ந்து
உள்ளுக்குள் தவிக்கிறேன்
உன்மீது ரௌத்திரம் கொள்வதில்
எந்த நிலையிலும்
எனக்கு உடன்பாடில்லை
ஒருவேளை 
நான் ஆத்திரக்காரனாகி
எனக்கு புத்தி மட்டானால்
மீண்டும் ஒரு முறை
உன் கோபத்தின் அடர்த்தியை
துகள்களாக்கி 
என்மீது கொட்டிவிடு
பதிலாக
உன் விழிகளை 
நனைய விடாதே தோழி
நிஜமாகவே 
உடைந்து போகிறது இதயம்
காரணம்
உன் அரவணைப்பால் தூங்குகிறேன்
உன் நம்பிக்கையால் 
எழுகிறேன்
உன் நகர்வால்
இயங்குகிறேன்
உன் வார்த்தைகளால்
வாழ்கிறேன்
உலகின் பார்வைக்கு
பலவீனமாகத் தென்படுகிற
நீ தானே
என் பலத்தின் இரகசியம்
வாழ்க்கைத் துணையாக
நீ வந்தபின்னால்
நான் நானாகவே இல்லை
நேற்றும் இருந்தாய்
இன்றும் இருக்கிறாய்
நாளையும் இருப்பாய்
நானாகவே நீ...


1 Comments

  1. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    இனிமையாக எனது கவிதை வெளி வந்திருக்கிறது. இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
    ஒவ்வொரு படைப்புகளையும் தேர்வு செய்து வெளியிடும் நேர்த்தி இனிமையாக இருக்கிறது. அன்பான வாழ்த்துகள்...

    நன்றியுடன்..
    ஐ.தர்மசிங்

    ReplyDelete
Previous Post Next Post