கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-18

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-18



இராவணனின்கட்டளை

தூங்குகின்ற கும்ப கருணனைப் போயெழுப்பி
ஈங்குவரச் சொல்லென்றான் வேந்து.

யானை மிதிக்க உலக்கை அடித்திருக்க
தூங்குவோனைத் தட்டினர் அங்கு.

எப்படியோ கும்ப கருணன் இமைதிறந்தான்!
அப்படியே வந்தான் எழுந்து.

தம்பியைக் கட்டி அணைத்தேதான் போர்க்கோலம்
பண்ணியதைப் பார்த்தான் வியந்து.

கும்பகருணன்கேள்வி
போர்க்களமா?கற்புக் கரசியின் துன்பத்தை
தீர்க்கவில் லையா?விளம்பு.

அண்ணனே! ராமனிடம் சென்று சரணடைந்தால்
மண்ணகத்தில் உய்யலாம் பார்.

அண்ணனின்கோபம்
தம்பி உரைத்ததும் அண்ணன் சினந்தெழுந்தான்
எண்ணத்தைச் சொன்னான் தொடர்ந்து.

மானிடனைக் கும்பிட்டு வாழ்வதா?கும்பகர்ணா!
தூங்கப்போ என்றான் சினந்து.

தன்னுடைய தேரை ,படையுடன்  கொண்டுவர
மன்னனிட்டான் ஆணை வெகுண்டு.

கும்பகருணன்கருத்து
அண்ணனே! மன்னித் தருள்வாய்! என்றேதான்
நின்றான் அண்ணனைப் பார்த்து.

சூலத்தைப் பெற்றவன் போர்க்களம் செல்லுமுன்
கூறிய நற்கருத்தைப் பார்:

"இந்திர சித்தை இலக்குவன் வென்றிடுவான்! 
என்னையும் வெல்வான்! இங்கு.

என்னையும் வென்றாலோ உன்னையும் வென்றிடுவார்!
அண்ணா! உணர்ந்திடு நீ."

போர்க்களத்தில்கும்பகருணன்
வீடணன் சென்றான்! தழுவினான்கும்பகர்ணன்!
வீடுமாற்றம் மீறிய அன்பு.

ராமனிடம் சென்றாய் உயிர்தப்பி வாழ்கின்றாய்!
ராமனை விட்டுவந்த தேன்?

கேட்டதும் வீடணன் தான்வந்த காரணத்தை
நாற்றைப்போல்  நட்டுவைத்தான் பார்:

ராமனிடம் நீவா! எனக்களித்த லங்கையை
நீயேற்று நல்லாட்சி தா.

உனக்கேவல் நான்செய்வேன் நாளும் மகிழ்ந்து!
எனச்சொல்லி தாள்பணிந்தான் பார்.

கும்பகருணன்மறுமொழி:
நீர்க்கோலம் போன்றழியும் வாழ்வில் எனைவளர்த்தே
ஆளாக்கி னானண்ணன் இங்கு.

என்னுயிர் போகவேண்டும் என்றால் எவருமே
என்னுயிரைக் காப்ப தரிது.

நன்றிக் கடன்மறந்தால் தூற்றும் மனசாட்சி!
என்னுயிர் நீத்தல் கடன்.

இப்படிநீ வந்ததே தப்பு! இளவலே! 
அப்படியே சென்றுவிடு நீ.

வீடணன் ராமனிடம் சொல்லியதும் ராமனோ
கூடழிவை யார்தடுப்பார் சொல்?.

விதியையோ யார்வெல்லக் கூடுமென்றான் ராமன்!
விதிப்பிடியில் கும்பகர்ணன் சாவு.

 வானரர்கள் சூழ்ந்து வளைத்தார்!அந்தப்
போர்க்களத்தில் மூண்டது போர்.

அனுமனின் தோளில் இலக்குவன் ஏறி
கணைதொடுத்தான் ஆற்றலுடன் தான்.

வில்லாற்றல் கண்டு  வியந்துநின்றான் கும்பகர்ணன்!
சொல்லுகின்றான் போருக்க ழைத்து:

ராமனின் தம்பிநீ! ராவணன் தம்பிநான்!
நாம்களத்தில் மோதவேண்டும் வா..

என்தங்கை மூக்கை அறுத்தஉன்  கைதன்னைத்
துண்டாக்கி வீசுவேன் பார்.

சொல்லால் மறுமொழி சொல்வதற்குக் கற்கவில்லை!
வில்லால் விடைசொல்வேன் வா.

கடும்போர் புரிந்தபோது சுக்ரீவன் வந்தான்!
நடுங்கி நினைவிழந்தான் அங்கு.

மயங்கி விழுந்தவனைக் கும்பகர்ணன் தூக்கி
இலங்கைக்குக் கொண்டுசெல்வோம் என்று

நடந்தான்! அவனை அனுமன் தொடர்ந்தான்
விடுவிக்கும் எண்ணமுடன் சென்று.

செய்தியை ராமனுக்குச் சொன்னார்! நகருக்குள்
செல்ல முடியாமல் ராமன்

கணைத்தடுப்பை ஏற்படுத்தி நிற்கவைத்தான்! போரின்
முனையிலே கும்பகர்ணன் தான்.

கடுமையான போரில் தனியனாக ஆகி
உருவிழந்தான் கும்பகர்ணன் அங்கு.

கும்பகருணன்வேண்டல்
ராமனே! உன்னம்பால் என்தலையைக் கொய்தேதான்
ஆழியில் வீசென்றான் சோர்ந்து.

வரங்கொடுத்தான்! அம்பைத் தொடுத்ததும் அந்தத்
தலையோ கடலுக்குள் காண்.

மாயாசனகப்படலம்
மருத்தன் உருமாறி சனகனாக அங்கே
வரச்சொல்லிச் சென்றுவிட்டான் வேந்து.

சீதையிடம் சென்றான்  பலவாறாய் இச்சைகளைக்
கோதையிடம் சொன்னான் குழைந்து.

சீதை துரும்பினைப் பார்ப்பதுபோல் ராவணனை
வேதனையால் பார்த்தாள் வெறுத்து. 
(தொடரும்)


Post a Comment

Previous Post Next Post