Ticker

6/recent/ticker-posts

வரலாறு பேசும் பெண்மையின் புகழ் - 10


மிகுந்த ரோஷம் கொண்ட தன் கோபக்கார கணவரை அனுசரித்து வாழ்ந்த அன்னை அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா
மிகுந்த துணிவும், புத்தி கூர்மையும் சமயோசிதமாக நடந்து கொள்ளும் ஆற்றலும் பெற்றிருந்த அன்னை அஸ்மாவின் இல்லற வாழ்விலும் வழமையில் கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்தன.

பெருமானார்ﷺ அவர்களின் சீடர் என்று அழைக்கப்படுகின்ற ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை, அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அன்பு மகள் அஸ்மாவிற்கு திருமணம் செய்து கொடுத்தார்கள்.

திருமணம் முடிக்கும் பொழுது ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம்  குதிரை ஒன்றையும், சிறிய நிலத்தையும் தவிர வேறு எந்த சொத்துக்களும் இருக்கவில்லை.

அன்னை அஸ்மாவும் மணமுடித்த நாளிலிருந்து, தன் கணவரின் குதிரையையும்,  நிலத்தையும் பராமரிப்பதிலேயே மிகவும் கவனம் செலுத்தினார்கள்.

எதற்கெடுத்தாலும் எளிதில் கோபம் கொள்ளும் கணவராக தன் வாழ்க்கை துணை அமைந்திருந்தாலும், இறைப் பொருத்தம் ஒன்றை மட்டுமே நாடி  இல்லறம் சீர்பெற பொறுமையுடன் வாழ்ந்து வந்தார்கள்.

அந்தக் குதிரைக்கு வேண்டிய தீனிகள், வீட்டுக்குத் தேவையான தோட்டத்தில் உள்ள விறகுகள் போன்றவைகளை தானே தன் முதுகில் சுமந்து கொண்டு வருவார்கள்.

திருமணமான புதிதில் அன்னை அஸ்மாவிற்கு முறையாக ரொட்டி செய்ய தெரியாது .

தன் கணவர் இதனால் கோபம் கொண்டு விடக்கூடாது என அஞ்சி, அவர்களது பக்கத்து வீட்டுப் பெண்களின் உதவியுடன் ரொட்டி செய்து தன் கணவரை திருப்தி படுத்துவார்கள்.

இவ்வாறு தன் கணவரின் திருப்திக்காக அதிக வேலை சுமைகளை சுமந்து கொண்டிருந்த தன் மகளுக்கு, அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு அடிமையை அனுப்பி வைத்து அவர்களது வேலைப்பளுவை குறைத்தார்கள்...
ஒரு கட்டத்தில், இதற்கு மேல்  சகித்துக்கொண்டு பொறுமையாக வாழ முடியாது என்ற நிலையில் தன் தந்தையிடம் கணவரின் கோபத்தை முறையிட்டார்கள்.

பூவுடன் சேர்ந்த நாரும் மணக்க தானே செய்யும் அதே போன்று அண்ணலார்ﷺ அவர்களின் பக்குவமும் பொறுமையும் உற்ற தோழரிடம் இல்லாமல் போய்விடுமா என்ன!!!

கணவனை முறைப்பாடு செய்து நின்ற தன் மூத்த மகளை நோக்கி "மகளே! ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு ஸாலிஹான நல்ல மனிதர். ஒரு பெண்ணிற்கு ஸாலிஹான கணவர் அமைந்து, அவரது மரணத்திற்குப் பின் அந்த பெண் வேறு எவரையும் திருமணம் முடிக்காவிட்டால் இறைவன் அந்த ஸாலிஹான கணவருடனே இந்தப் பெண்ணை சொர்க்கத்தில் சேர்த்துவைப்பான்.

எனவே கொஞ்சம் பொறுமையாக இரு" என்று தன் மகளுக்கு பக்குவமாக அறிவுரை கூறினார்கள்.

அதே பக்குவத்தை பெற்றிருந்த அன்பு மகள் அஸ்மாவும், தன் தந்தையின் அறிவுரைப்படி மீண்டும் ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு உடன் பொறுமையுடன் வாழ்ந்தார்கள்...
பின்னாட்களில் மொத்தமாக எட்டு குழந்தைகள் பெற்று தன் இல்லறம் சிறக்க அன்னை அஸ்மா வாழ்ந்துவந்தார்.

இவ்வளவு துணிவும், வீரமும் கொண்ட பெண் எதற்காக இத்தனை வேதனைகளையும் சகித்துக்கொண்டு கஷ்டப்பட வேண்டும் என்று நினைக்கும் உள்ளங்கள் ,அன்னை அஸ்மா எந்த மார்க்கத்திற்காக தன் உயிரை பணயம் வைத்து துணிச்சலுடனும் தைரியத்துடனும் பல சேவைகளும், தியாகங்களும் செய்தார்களோ, அதே மார்க்கம் போதித்த படி கணவருக்கு கட்டுப்பட்டு வாழ்வதிலும் உயரிய இஸ்லாத்தின் வாழ்வியல் போதனைகளை மதித்து நடந்தார்கள் என்பதை இன்றைய இஸ்லாமியப் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.(தொடரும்)

 


Post a Comment

0 Comments