
புதியதொரு பொறுப்பு தனக்கு வந்துள்ளதை புதுத்தொல்லையாக செரோக்கி நினைத்தபோதிலும், தனது சமூகத்தின் மேம்பாட்டை நினைத்து அவன் தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டு, இது விடயமாக கிராமத்திலுள்ள மூத்த குடியினர்களை ஒவ்வொருவராக அணுகலானான்!
காலாகாலமாக அன்னியர் வருகையைத் தமது பிரதேசத்துக்குள் நெருங்க விடாமல் தடுத்து வந்த இம்மக்கள், இப்புதிய திட்டத்தை ஒருபோதும் விரும்பவில்லை.
அவர்களின் விரும்பாமைக்குப் பல காரணங்களை அவர்கள் செரோக்கியிடத்தில் எடுத்துக் கூறியபோதிலும், செரோக்கி அவர்களை திருப்திப் படுத்தக் கூறிய ஒரே காரணம் – ஒதுங்கி வாழ்ந்த எமது சமூகம், உலகத்தாருடன் ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கிய நிலையில் துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து வந்துள்ளது, வருகின்றது. அதற்கொரு விடிவுகாலம் பிறக்க வேண்டும். தொடர்ந்தும் இந்நிலை நீடிக்கப்படக்கூடாதிருப்பதற்காக நமது சமூகம் கல்வியூட்டப்பட வேண்டும். வனத்தையே தஞ்சமெனக் கருதி வாழும் நமது சமூகத்தின் எதிர்காலச் சந்ததியினர், வெளியுலகத்தாருடன் ஒத்து வாழ வேண்டிய காலம் வந்துள்ளது. இதனை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை அவன் தனது சமூகத்தின் மூத்தவர்களிடம் பல்வேறு கோணங்களிலும் விளக்கிக் கூறினான்.
ஒருவாறு அவர்களும் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்தனர். கிராமத்திலுள்ள நகர எல்லையில் கொட்டில் அமைத்து “கல்விப்பயணம்” தொடர அவர்கள் சரிகண்ட இணக்கப்பாட்டை செரோக்கி நல்லதொரு நற்செய்தியாக இர்வின் மூலம் தூதுக்ககுழுவுக்குத் தெரிவித்துவிட்டு, அவர்களது மறுவருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தான்!
(தொடரும்)


0 Comments