
குழந்தையின் தலையை
பாதுகாக்கின்றன
பள்ளிப் புத்தகங்கள்
மெல்ல விரிகிறது
ஊன்றுகோலான
தாத்தாவின் குடை
பழக்குவியலை
ஒளித்து வைக்கிறான்
நடைபாதை வியாபாரி
விரியும் சிறகுகளினடியில்
குஞ்சுகளை பதுக்குகிறது
ஈரமான கோழி
ஒதுங்க இடம் தேடி
ஓடுகிறார்கள்
ஒன்றுமில்லாதவர்கள்
மதுக் குப்பிகளை
பற்களால் திறக்கிறார்கள்
குளிருக்கு பயந்தவர்கள்
சேர்ந்திருந்த பாத்திரங்களை
பிரித்து வைக்கிறார்கள்
ஒழுகும் வீடுகளில்
எரியாத அடுப்புகளை
தேடி அலைகிறது
நடுங்கும் பூனைகள்
புதுப்பிக்கப் படுகின்றன
மாசடைந்த
இலைகளும் பூக்களும்
சாலைகளில்
வழிதவறி ஓடுகின்றன
புதிய ஆறுகள்
விரியும் உதடுகளிடையே
தப்பித்து ஓடுகின்றன
பலவடிவங்களில் புகைகள்
அலறியபடியே மறுபடியும்
மழைக்குள் நுழைகின்றன
ஒதுங்கிய நாய்கள்
கைகளிலிருக்கும்
கண்ணாடி குவளையில்
மேலெழும்பும் ஆவிகள்
தலைகீழாகிக் கிடக்கிறது
சற்று முன்பு வரை
நேராகிக் கிடந்த
சகஜ நிலை
ஆனாலும்
அழகாகவே இருக்கின்றன
ஒன்றன்பின் ஒன்றாக
அந்தரத்திலிருந்து கீழிறங்கும்
அழகான மழைத் துளிகள்...


2 Comments
வணக்கம் சார்.
ReplyDeleteஇவ்வார இதழில் எனது கவிதை வந்திருக்கிறது.. மிகவும் மகிழ்ச்சி...
எனது வளர்ச்சிக்கு நீங்கள் தத்துவமும் இனிய வாய்ப்புகளுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்..
நேசமுடன்...ஐ.தர்மசிங்
சிறு திருத்தம்...
ReplyDelete( தந்துவரும் வாய்ப்புகளுக்கு)