Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-44


குறள் 385
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

வருமானத்தைப் பெருக்கணும்னா ஒரு அரசாங்கம் நல்ல திட்டங்களைத் தீட்டணும் மாப்ள. அந்த திட்டங்கள் மூலம் வருவாயைப் பெருக்கணும். வருகிற வருவாயை பாதுகாப்பா வைய்க்கணும். பொறவு அதை வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன் படுத்தணும். இப்பிடிச் செஞ்சாத்தான் அது நல்ல ஆட்சிக்கு எடுத்துக்காட்டு மாப்ள. 

குறள் 386
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

மாப்ள... பாக்கதுக்கு பந்தா கிந்தால்லாம் இல்லாம எளிமையா இருக்கணும். எரிச்சல் கிரிச்சல் படாம இனிமையா பேசணும்.  இப்பிடிப்பட்ட தலைவனைத் தான்  இந்த உலகம் புகழ்ந்து பேசும் மாப்ள. 

குறள் 388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

மாப்ள.. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும், நீதி நெறிகளுடனும், மக்கள் நலனுக்காகச் செயல்படும்  ஆட்சியாளனை  மக்கள் இறைவனாக போற்றுவார்கள். 

குறள் 389
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

மாப்ள.. எதிர்க் கட்சிக் காரங்க, அம்புட்டு மோசமாவும், கேவலமாவும் ஏசுவாங்க. ஆனா, ஆட்சிப் பொறுப்புல இருக்கவரு, பொறுமையா இருந்தாருன்னா, அப்படிப்பட்ட பண்புள்ளவர் ஆட்சிக்கு மக்கள் கிட்ட மதிப்பு இருக்கும் மாப்ள. 

குறள் 394
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

மாப்ள... மத்தவொகிட்ட பழகும் போது அவொ எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கும் படி நடக்கணும். 

அதே மாதிரி தான் மாப்ள, அவொளை விட்டு பிரியக்கூடிய நெலைமை வந்தா, எல்லாரும் கண் கலங்கணும். 

இது தான் மாப்ள படிச்சவங்க நடந்துக்கிற முறை. (தொடரும்)


Post a Comment

0 Comments