மோகத்தின் விலை - 41

மோகத்தின் விலை - 41


சோதனை மிக்க இரவுபோல் உறக்கம் துறந்து மூவரும் படுக்கையில் கிடந்தனர். விடிந்ததும் தனக்கு ஆபிசுக்கு வர இயலாமையை மானேஜருக்கு அறிவித்தான் கண்ணன்.  அம்மாவைப் பற்றிய மனதின் வலி அவனை மிகவும் படுத்தியது.

அவனின் கட்டாயத்தின் பேரில் வேலவன் இன்னும் இரண்டொரு நாட்கள் தங்க ஒப்புக் கொண்டிருந்தார். தேவகியைப் பற்றி அவர் உயர்வாகவே பேசும் போது கண்ணன் மன நிறைவுடன் அவரை நோக்க, கண்களில் சந்தேகத்துடன் அவரை எடை போட முயல்வான் ஆறுமுகம்.

ஆபிசில் சரண்யாவின் ஊடுருவல் கொஞ்சம் எல்லை மீறவே  சங்கடமாகவே உணர்ந்தான் கண்ணன். ஆனால் அன்றைய பொழுதே மீண்டும் ஓவியாவை சந்திப்போம் என்று கண்ணன் நினைக்கவே இல்லை.  பாதி வழியிலேயே ஓட மறுத்த பைக்கை காரேஜில் கொடுத்து விட்டு பஸ்ஸில் ஏறியபோது தான் ஓவியா அமர்ந்திருப்பதை கண்டான் கண்ணன்.

அறிமுகம் இருந்ததாலோ என்னவோ அவள் மெதுவாக புன்னகைத்தாள்.  அடுத்த நிமிடமே பார்வையை தாழ்த்திக் கொண்டாள். தரிப்பிடம் வந்ததும் அவள் இறங்கவே தானும் இறங்கிக் கொண்டான் கண்ணன்.  அவன் இறங்குவதை கவனித்த அவள் ஒருநிமிடம் அவனை குழப்பத்துடன் நோக்கினாள்.

“என்ன பயந்து விட்டீர்களா?” என்றான் கண்ணன். 

அவள் சுற்றும் முற்றும் பார்த்தவளாக “இல்லை .. நான் எவருடனும் எல்லை மீறி பேசுவதில்லை.  உங்களிடம் எடுத்த பணத்தை தந்து விட்டேன்.  பின் எதற்காக நீங்கள்.....?” என்று அவள் தடுமாறியதும், “நாம் நல்ல நண்பர்களாக இருக்கலாமே” என்றான் கண்ணன் வாஞ்சையுடன்.

“கொஞ்சம் புத்தகங்கள் வாங்க வேண்டும், அதுதான் இங்கே வந்தேன்” என்றாள் அவள் பயம் நீங்கி மெதுவாக. 

“சரி வாங்கலாமே” என்று சொல்லி விட்டு அவளின் பதிலை எதிர்பாராமல் அவளுடன்  சேர்ந்தே நடந்தான் கண்ணன். பின் அவளை கேளாமலேயே பக்கத்தில் இருந்த ரெஸ்டாரண்டில் அவளுக்கு சைகை காட்டிவிட்டு நுழைந்தான்.  அவளும் மறுக்க இயலாமல் அவன் பின்னே உள்ளே நுழைந்தாள்.

மிகவும் சங்கடத்துடன் அவள் அமர்ந்து சகஜ நிலைக்கு வர கொஞ்சம் நேரமாயிற்று.  இதுவே அவள் இடத்தில் சரண்யாவாக  இருந்தால், நடந்ததே வேறு விதமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டான் கண்ணன்.

இருவாருக்கும் குளிர்பானம் ஆர்டர் பண்ணினான் கண்ணன். சிறிது நேர அவகாசத்துக்கு பின் தன்னைப் பற்றிய சில தகவல்களை சொன்னாள் அவள்.
(தொடரும்) 



Post a Comment

Previous Post Next Post