தாயற்ற அவள் நோயுற்ற தந்தையினை கவனிக்கவே ட்யூசன் எடுக்கின்றாள் என்பதும், மற்றவர் உதவியின்றி தன் கையாலேயே உழைத்து உண்பதே சிறப்பு என்ற கொள்கையைக் கொண்டவளாக இருப்பதையும் சொன்னாள்.
தந்தையின் கவனிப்பு மாத்திரமே இப்போதைக்கு என்றாலும், தன் தாய் மரணிக்கும் வரை எத்தனை அன்புடன் வளர்த்தாள் என்பதை கண்கலங்க கூறினாள். அத்துடன் நாகரிக வாழ்வில் சோரம் போகாமல் வாழும் விதத்தை தன் தாய் புகட்டியதுடன், ஆசிரியரான தந்தை வாழ்விற்கே உலை வைக்கும் இணையதளத்தின் நிழலே படாமல் தன்னை காத்து வருவதையும், அதனாலேயே ஒரு கைபேசிகூட தான் உபயோகிப்பது இல்லை என்ற விபரத்தையும் சொன்னாள்.
பேசிக் கொண்டிருந்த அந்த சில நிமிடங்களுக்குள்ளேயே ஓவியாவை மிகவும் பிடித்துப் போயிற்று கண்ணனுக்கு. தந்தையைப் போலவே பழமை விரும்பியான அவனுக்கு இந்த நாகரிக காலத்திலும் இப்படி ஒரு பெண் இருப்பாளா என்று நினைக்கவே வியப்பாகவும் இருந்தது. அவளுடனே புத்தக கடை வரை சென்று வேண்டிய புத்தகங்களை வாங்கிய பின் விடை பெற்று சென்ற அவள், வெகு தூரம் சென்று மறைந்த பின்னும் அவள் தன்னுடனேயே இருப்பது போலவே உணர்ந்தான்.
தோட்டத்தின் மரங்களின் நிழலில் அமைந்திருந்த பெஞ்சில் அமைதியாக உட்கார்ந்திருந்தார் பெரியவர். ஏதோ பெரிய காரியம் ஒன்றை சாதித்து போல் அவர் முகத்தில் தெரிந்த திருப்தியான தோற்றம் ஆறுமுகத்தை சீண்டியது.
‘யார் இவர்? எதற்காக வந்தார்? எஜமானியம்மாவை பற்றிய விபரங்கள் இவருக்கு எப்படி தெரியும்? அதுவும் துல்லியமாக எப்படி எல்லா விசயங்களையும் தெரிந்து வைத்திருந்தார்?’ என்றெல்லாம் மண்டையை குழப்பிக் கொண்டிருந்த ஆயிரம் கேள்விகளையும் அள்ளிக் கொண்டு பெரியவரை நெருங்கினான் ஆறுமுகம்.
முதன் முறையாக ஆறுமுகத்தை நேர்பார்வை பார்த்தார் பெரியவர், ‘உட்காருங்கள் ஐயா’ என்றார் மிகவும் மரியாதையாக.
“நீங்கள் யார்? எப்படி எஜமானியம்மாவைப் பற்றிய எல்லா விபரங்களும் உங்களுக்கு தெரியும்?” என்றான் ஆறுமுகம் பொறுமை இழந்தவனாக.
“உங்கள் ஆற்றாமையும் வேதனையும் எனக்குப் புரிகின்றது ஐயா. எப்படியோ, எஜமானியம்மா ஆத்மா சாந்தியடைய ஏற்பாடுகள் செய்தீர்களே.. அதுவே போதும்” என்றார் பெரியவர் கண்கலங்க.
“எங்கள் குடும்ப விசயத்தில் தலையிட நீங்கள் யார் என்ற கேள்விதான் என்னை கொல்கின்றது? யாரையா நீங்கள்? வேலவன் என்ற பெயரில் எங்களுக்கு எவரையும் தெரியாதே?” என்றான் ஆறுமுகம்.
“நியாயமான கேள்விதான். பதில் சொல்லியே ஆக வேண்டிய கடமை எனக்குள்ளது. நிச்சயம் சொல்கின்றேன் ஐயா. ஆனால் கண்ணன் தெரிந்து கொள்ள வேண்டாமே..!” என்றார் மிக தயக்கத்துடன். அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்ணன் அவர்களை நோக்கி வரவே அவர்கள் பேச்சும் தடை பட்டுப் போனது.
(தொடரும்)
1 Comments
😥😥
ReplyDelete