மோகத்தின் விலை - 43

மோகத்தின் விலை - 43


“கண்ணா.. உன் கைப்பற்றிக் கொண்டு இந்த ஆற்றங்கரையில் நடந்து செல்ல வேண்டும் போல் இருக்கின்றது” என்று தன்  மனதின் எண்ணத்தின் ஓட்டத்தை வெளிப்படுத்தினார் பெரியவர். வேண்டா வெறுப்பாக மதிய உணவுக்கான ஏற்பாடை பார்க்க கிளபினான் ஆறுமுகம்.

ஆற்றங்கரையில் கால்கள் மண்ணில் பதிய நடந்த போது தன் தந்தையின்  கை பிடித்து நடை பயில்வது போன்ற உணர்வுடன் மகிழ்வுடன் பெரியவரை பார்த்தான் கண்ணன்.  அவரோ கண் கலங்க மௌனமாக அவனுடன் நடந்து கொண்டிருந்தார்.

“தம்பி.. எனக்கு குழந்தைகள் இல்லை. உன்னை என் பிள்ளையாக நினைக்கின்றேன். தயவு செய்து மின்தளம் எனும் இந்த இன்டர் நெட் பக்கம் தலை வைத்தும் படுக்காதே.  அப்படியே காலத்தின் கட்டாயம் என்று   அதனுள் சென்றாலும் சீக்கிரம் வெளியே வந்து விடு.  அதன் மாய வலையில் சிக்கி விடாதே.  நாளை உனக்கு திருமணமாகி குழந்தைகள் என்று வந்தாலும் அவர்களுக்கும் அதன் உண்மை  நிலைப்பாட்டை விளக்கிச் சொல்.  உறவினருடனும் குடும்பத்தினர் உடனும் ஒட்டி வாழ்வதைப் போன்ற இன்பம் வேறு எதிலும் இல்லை” என்று கூறியவர் “நானொரு பைத்தியம்.  தனியாக வாழும் நான் உனக்கு அட்வைஸ் பண்ணுகின்றேன் பார்” என்று சிரித்தார். 

“ஐயா, இன்னும் கொஞ்ச நாள் எங்கள் வீட்டிலேயே நீங்கள் இருங்கள்.  நீங்கள் எங்களுடன் இருப்பது எங்களுக்கு நிறைவாகவே உள்ளது” என்றான் கனிவுடன் கண்ணன். 

அதற்கு அவர் “இல்லை தம்பி.  என் மன உளைச்சலுக்கு மருந்து வேண்டும்.  குழந்தைகள், குடும்பம் என்பதெல்லாம் எனக்கு எட்டா கனிகள். நான் சென்றே ஆக வேண்டும்,  இதற்கு  மேலும் நான் இங்கே இருப்பது முறையில்லை” என்றார். பின் சிறிது நேரம் கழித்து “தம்பி,  நீயும் கல்யாணம் செய்யக் கூடிய வயதை எட்டி விட்டாய்.  ஆறுமுகம் அதற்கான ஏதும் ஏற்பாடு செய்யவில்லையா?” என்றார்.

“அதற்கென்ன அவசரம்.  சமயம் வரும் போது பார்த்துக் கொள்ளலாமே” என்று சிரித்தான் கண்ணன்.

“நான் வரும்போதே ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்தேன்.  எனக்கு  மிகவும் தெரிந்த ஒருவர். அவர் பெயர் சதாசிவம்.  நல்ல குணவதியான அவரின் ஒரே மகள்.  அவளை உனக்கு பேசி முடிக்கலாம் என்று எண்ணி இருந்தேன்” என்றார் மிக்க ஆவலுடன். 

“எதுவாய் இருந்தாலும் தாத்தாவுடன் பேசுங்கள்.  அவர் எனக்கு நல்லதை அன்றி  வேறு எதையும் செய்ய மாட்டார்” என்றான் கண்ணன்.

மீண்டும் தான் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை பெரியவர் முன் வைக்கவே, அவரை பிரிய மனமில்லாமலே “தங்கள் இஷ்டம் ஐயா.  எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எங்களிடம் வரலாம்” என்றான் கண்ணன் பாசத்துடன். 

(தொடரும்)



Post a Comment

Previous Post Next Post