Ticker

6/recent/ticker-posts

உன் ஆரம்பமும் எங்கள் முடிவும்...!.


உன் ஆரம்பம்
மூளைச் சலவை செய்யப்பட்ட
ஒரு சாராரின் ஆனந்தமும்
இன்னொரு சாராரின்
அதிருப்தியும் கலந்தது.

ஒரு இனத்தை
தலைக்கு மேல் தூக்கியும்
மற்றவர்களை
காலுக்குக் கீழ் மிதித்த
கதை தான்
உன் பழைய
பாதச் சுவடுகள்
பதித்திருந்தன.

நீ நடந்து வந்த பாதைகளில்
துவேஷப் பூக்கள்
தூவப் பட்டிருந்தன.

நீ வளர்த்த செடிகளும்
பேதமை முட்கள் நிறைந்த
செடிகளாகவே
வளர்ந்தன.

அவை முளைத்துப் பரவி
முழு நாடும் காடாகுமுன்
அடையாளம் 
கண்டு கொண்டார்கள் 
மக்கள்.
உன் அடையாளமும்
அத்தோடு அழிந்து போனது.

திருட்டு ரேகை பதிந்த
கைகளோடு
இரத்தக்கறை படிந்த
கைகளோடு 
தப்பியோடியதாக
உன் வரலாறு 
எழுதப்பட்டு விட்டது.

அழுக்கு அரசியல் செய்த
ஒரு குடும்பத்தின்
அசிங்கமான அத்தியாயங்களை
அரசியல் சரித்திரம்
பக்கம் பக்கமாக  
இனி எழுதப் போகிறது.

ஒரு குடும்பம் 
கொள்ளையடித்த 
இந்த தேசத்தில்
எஞ்சி இருப்பது
வெறுமனே 
வறுமையில் வாடும்
மக்கள் மட்டுமே.

திட்டமிட்டு
நாசமாக்கப்பட்ட 
ஒரு நாட்டைப் பார்த்து
பரிதாபப் படப் போகிறது
உலக நாடுகள்.

வாக்குகளை அளித்து
ஏமாந்த மக்கள்
ஒருவரை ஒருவர் பார்த்துப்
பரிதாபப் பட்டுக் கொள்ளட்டும்.

அரசியல்வாதிகளைத்
தேர்ந்தெடுப்பதும்
மக்களே
அவர்களை
எதிர்த்துப் போராடுவதும்
மக்களே.

எல்லா அதிகாரங்களையும்
மிஞ்சியது
மக்கள் சக்தி மட்டுமே.

மக்கள் சிந்திக்காத வரை
மக்கள் மாறாத வரை
மக்கள் தகுதியானவர்களை
தேர்ந்தெடுக்காத வரை
தொடர்ந்தும்
அவஸ்தைப் படப் போவது
மக்கள் மட்டுமே .



Post a Comment

0 Comments