
குறள் 455
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
ஏல மாப்ளை.. நாம மத்த எல்லார்கிட்டயும் வச்சுருக்க தொடர்பு இருக்குல்லாடே.. அது தூய்மையா இருந்திட்டுன்னா, நம்முடைய மனசும் செயலும் எப்பமும் தூய்மையாத்தான்டே இருக்கும்.
குறள் 459
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
மாப்ள...நல்ல, உறுதியான மனசோட இருக்கவொளுக்கு, எப்பமும் நல்ல எதிர்காலம் அமையும்.
அதோட அவொளுக்கு சமூக ஆதரவும் இருந்துச்சுன்னு வச்சுக்கயேன்.. அவொளோட எதிர்காலம் இன்னுஞ் சிறப்பா இருக்கும் மாப்ள.
குறள் 465
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு
மாப்ளை .. பகைவர்களை சந்திக்கப் போவதுக்கு முன்னால, நாம முறையா திட்டமிடணும். முன்னேற்பாடுகளைச் சிறப்பா செய்யணும். இதையெல்லாம் பண்ணாம அவங்களை எதுத்து நின்னோம்னு வச்சுக்க மாப்ளை, நாமே நிலையான களத்தை அவங்க கையில தூக்கிக் குடுத்த மாதிரி ஆயிரும்.
குறள் 469
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
பேரப்புள்ள.. ஒருத்தருக்கு நல்லது செய்ததா இருந்தாக்கூட, அவரு எப்படிப்பட்டவருன்னு தெரிஞ்ச பொறவு செய்யணும். இல்லண்ணு வச்சுக்க.. நன்மை கூட கெடுதலா பொயிரும் பேரப் புள்ள.
குறள் 470
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
மாப்ள.. ஒனக்குன்னு ஒரு தகுதி இருக்கு. ஒரு பேரு இருக்கு. இதைக் கெடுத்துக்க மாதிரி எதாவது பண்ணுனன்னா, இந்த ஊரு அதை ஒரு நாளும் ஒத்துக்காது. அதுனால ஒனக்கு ஏச்சு வராத அளவுல எதையும் செய்யணும். புரிஞ்சுதா மாப்ள..
(தொடரும்)




0 Comments