
முதன் முதலாக செரோக்கியும் ரெங்க்மாவும் தனது பட்டமளிப்பு விழாவுக்கு பல்கலைக்கழகம் வந்திருந்தபோது, இர்வின் அவர்களை அழைத்துக்கொண்டு, அங்கிருந்த "டொராபிகா கொபீஷொப்" சென்று அங்கு அவர்களுக்கு 'கப்பச்சோனா'வோடு 'ப்றவ்னி கேக்'கும், 'லோட்டஸ் சீசு'ம் வங்கிக் கொடுத்தபோது, 'கப்பச்சோனா'வை அவர்கள் ரசித்து, ருசித்துக் குடித்ததை மறந்துவிடாத இர்வின், இப்போதும் அவர்களுக்கு விருப்பமான 'கப்பச்சோனா' வாங்கிக் கொடுத்து உபசரித்து அவர்களைத் திருப்திப் படுத்தினான்!
'கபினு'க்குள்ளிருந்த 'இண்டர்கொம்' அலறியதும் இர்வின் 'ரிசீவரை'த்தூக்கியபோது,
"சார், கவர் போடோஸ் ரெடியாயிருக்கு. நீங்கதான் சிலெக்ட் பண்ணனும்" என்று அலுவலக ஃபோட்டோகிரபர் மறுமுனையிலிருந்து குறிப்பிட்டான்.
உடனே அவனுக்குப் பதில் தராமல் சற்று நேரம் யோசித்த இர்வின்,
"அவற்றை அப்படியே வைத்துவிட்டு, என் கபினுக்கு வா..." என்றான்.
முதல் சந்திப்பு என்பது ஒரு சுவாரஷ்யமான விஷயம். முதன் முதலாக சந்தித்துக் கொள்ளும்போது எடுத்த எடுப்பிலேயே ஏதோ ஒருவிதமான அபிப்பிராயம் அவரவர் மனதில் பதிந்து விடுகின்றது.
அந்த ஊமைத்தனமான அபிப்பிராயத்திற்கு எந்தவோர் அடிப்படையும் இருப்பதில்லை. காரணகாரியத் தொடர்பையும் அது தேடிக்கொள்வதில்லை. ஆனாலும் மனதில் ஆழம்வரை சென்று பதிந்துகொள்ளும் வல்லமை அதற்குண்டு!
இம்மாதிரியான விசித்திரங்களுக்கெல்லாம் காரணமாக அமைவது, முதல் சந்திப்பின்போது மனமானது தனக்குத்தானே ஊமைத்தனமான ஒரு முடிவைத் திடுதிப்பெனத் தேர்ந்தெடுத்து அதனைத் தனக்குள்ளே பதிந்துகொள்வதுதான்!
அந்தவகையில், செரோக்கி - இர்வின் சந்திப்பு விசித்திரமானது மட்டுமல்லாது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுவும் கூட!
அந்த முதல் சந்திப்பின் நினைவாக இம்மாத 'அமேசான்' சஞ்சிகையில் அவர்கள் இருவரும் முத்தன் முதல் சந்தித்த மரவேரடியை அட்டைப்படத்தில் பதிப்பிடவும், "கானகத்துக் கல்விப்பயணத்தின் ஆரம்பம்" என்று அதற்குத் தலைப்பிடவும் நினைத்தான்!
(தொடரும்)

0 Comments