எனது மகனின் வயது 13 ஆகிறது. அவர் பாலர் வகுப்பில் படிக்கும் போது இடக்கை பழக்கம் உடையவர். சில நாட்கள் கடந்ததும் அவரின் வகுப்பாசிரியர் எழுதுவதற்கு வலக்கையை மாற்றி உள்ளார். அதிலிருந்து அவர் படிப்பில் சோர்வுற்று பின்வாங்கியே செல்கின்றார். இப்போது அவர் தரம் 9 க்கு உயர்ந்துள்ளார். இப்போதும் அவர் படிப்பில் பின் வாங்கியே செல்கிறார்.
இவரின் கை இடமாற்றம் தான் காரணமா டாக்டர்? எனது குடும்பத்தில் இன்னுமொருவரும் இடக்கை வாக்கு. நீங்கள் அளிக்கும் பதிலில் தான் இருக்கிறது, அவரின் நிலையை மாற்றுவதா? இல்லையா? என்பது பற்றி விரிவாக கூறு வீரா?
மாத்தளை ரிஸ்கா

பதில்: மூளையென்பது எமது உடம்பின் ஒரு முக்கியமான உறுப்பாகும். இது எமது உடம்பின் சகல உறுப்புக்களின் தொழில்களையும் கட்டுப்படுத்துவதோடு மூளைக்கே உரித்தான பல தொழில்கள்ளையும் செய்கின்றது.
மூளை வலது இடது பக்கங்கள் என இரு பிரதான பிரிவுகளை கொண்டது. ஆனால் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் எமது வலது பக்க உடம்பின் தொழிற்பாடுகளை இடது பக்க மூளையும், இடது பக்க உடம்பின் தொழிற்பாடுகளை வலது பக்க மூளையும் கட்டுப்படுத்துகின்றன என்பதாகும்.
அதிலும் ஒரு விசேடம் என்ன வென்றால் எமது உடம்பில் உள்ள ஒவ் வொரு உறுப்புக்களையும் கட்டுப்படுத்துவ தற்கு மூளையில் பிரத்தியேகமான இடம் உள்ளது என்பதாகும். உதாரணமாக எமது வலது கையை இயக்குவதற்கு இடது பக்க மூளையில் ஒரு குறிப்பிட்ட இடம் உள்ளது. அதேபோன்று இடது கையை அசைப்பதற்கு வலது பக்க மூளையில் ஒரு குறிப்பிட்ட இடம் உள்ளது.
மேற்குறிப்பிட்டபடி இடது பக்க - உடம்பை மூளையின் வலது பக்கமும் வலது பக்க உடம்பை மூளையின் இடது பக்கமும் கட்டுப்படுத்துகின்றன என்ப தற்கு மேலாக மற்றுமொரு முக்கியமான விடயமும் உள்ளது.
அதாவது காலை கட்டுப்படுத்துவதற் கான இடம் மூளையின் மிக உயர்ந்த இடத்திலும் அதற்கு கீழே முறையே முகம், நாக்கு, கை போன்ற உடல் உறுப் புக்களை கட்டுப்படுத்த கூடிய பகுதியும் மூளையில் அமைந்துள்ளன. இந்த அமைப்பு மூலம் அல்லாஹுத் தஆலா மானிட சமுதாயத்திற்கு ஒரு முக்கியமான செய்தியை தந்துள்ளான் என நினைக் கின்றேன். அதாவது கல்வி, பணம், சொத்து, அந்தஸ்து போன்றவைகள் காரணமாக வைத்து பெருமை, கர்வம் கொள்பவர் களை தான் தன்னுடைய காலைக்கட்டுப் படுத்தக் கூடிய இடத்தை மூளையின் உச்சத்திலும் அதற்கு கீழே தான் முகத்தை கட்டுப்படுத்த கூடிய இடமும் இருக்கின்றது. எனவே தான் உனக்கு தந்தவைகளைக் காரணமாக வைத்து கர்வம் கொள்ளாதே என்று அல்லாஹ் கூறுகிறான்.
அத்துடன் மற்றுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால் வலது கையால் எழுதும் ஒருவரது மூளையின் இடது பக்கமே கூடிய வினைத்திறன் உடையதா கவும் இடது கையினால் எழுதும் ஒரு வரது வலப்பக்க மூளை வினைத்திறன் கூடியதாக வளர்ச்சி பெறுகின்றன.
ஒரு பிள்ளை எழுதுவதற்கும் வினைத் திறன் கூடிய வேலைகளை செய்வதற்கும் எந்தக் கையை தேர்ந்தெடுப்பது என்ப தற்கு பல காரணிகள் உள்ளன. அதில் குடும்ப ஆதிக்கமும் ஒன்றாகும். ஆனால் எழுதுவதற்கும் ஏனைய வேலைகளை செய்வதற்கும் எந்தக் கையை தேர்ந்தெடுத்தாலும் அது அவர்களின் கற்றல் திறனையோ அல்லது மூளையின் வேறு எந்தத் தொழிலையோ பாதிக்காது.
ஆனால் இடது கையால் ஒரு பிள்ளை எழுதுவதற்கு ஆரம்பித்தால் சில பெற்றோர்களும் ஆசிரியர்களும் அப் பிள்ளையை வலது கையினால் எழுது வதற்கு வற்புறுத்துகின்றனர். இதற்கு காரணம் வலது கையை முந்திக்கொள் ளும்படி இஸ்லாம் கூறியிருப்பதால் ஆகும். ஆனால் இஸ்லாம் இயற்கைக்கு மாறாக எச்செயலையும் செய்யும் படி வற்புறுத்துவில்லை எனவும் இதன் அடிப்படையில் இடது கையால் எழுதும் சிறார்களை பலவந்தமாக வலது கைக்கு, மாற்ற வேண்டாம் என்பதே உலமாக்களினதும் கருத்தாகும். ஆனால் உணவு உட்கொள்ளும் விடயத்தில் மாத்திரம் வலது கையை உபயோகிக்க வேண்டும்.
உலகில் 10 வீதமானவர்கள் இடது கையால் எழுதுபவர்கள். அத்துடன் இடது கையால் எழுதுபவர்கள் நல்ல சிந்தனையாளர்களாகவும் புத்தி கூடியவர்களெனவும் நல்ல ஞாபக சக்தியுடையவர்கள் எனவும் எந்தவொரு பிரச்சினையையும் கூடிய சீக்கிரம் தீர்க்கக் கூடியவர்கள் எனவும் கருதப்படுகிறது.
இடது கையால் எழுதுபவர்கள் பலர் தனது வாழ்க்கையில் உச்ச நிலையை அடைந்துள்ளனர். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ரொனால்ட் ரேகன் ஜோர்ஜ் டபிள்யூ புஷ், பில் கிளின்டன் உட்பட தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா கூட இடது கையால் எழுதுபவர் களே. அத்துடன் இடது கையால் எழுதும் பல விஞ்ஞானிகள் தத்துவஞானிகள் மற்றும் போர் வீரர்கள் கூட இருந்தனர்.
இடது கையால் எழுதும் பிள்ளைகளை வலது கையால் எழுதுவதற்கு வற்புறுத்தும் போது முதலில் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள். அதன் பின்பு அவர்களுடைய வலது பக்க மூளையின் விருத்தியடைந்திருக்கும் சில வினைத்திறன்களிலும் பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே இஸ்லாமிய அடிப்படை யிலும் மருத்துவ அடிப்படையிலும் இடது கையால் எழுதும் பிள்ளைகளை பலவந்தமாக வலக்கைக்கு மாற்றுவது ஒரு விவேகமான செயல் அல்ல. இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் நானும் இடது கையால் எழுதுபவனே. அத்துடன் நானும் சிறு வயதில் இது விடயமாக வற்புறுத் தப்பட்டேன். ஆயினும் என்னால் மாற்ற முடியவில்லை.
இங்கு கேள்வி கேட்டிருப்பவர் தனது மகன் இடக்கை பழக்கம் உடையவராக இருந்தார் என்றும் அதை அவருடைய வகுப்பாசிரியர் வலக்கையால் எழுதுவ தற்கு மாற்றியதன் பின்பு அவர் கல்வியில் பின்னடைந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பிள்ளையின் கல்வியின் பின்னடை விற்கு வீட்டுச் சூழ்நிலை பெற்றோர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பும் வழிகாட் டலும் ஆசிரியர்களின் சரியான பங்க ளிப்பும் நண்பர்களாக தேர்ந்தெடுப்பவர் களின் செயற்பாடுகள் போன்றவற்றிலும் தங்கியுள்ளன. அத்துடன் இக்கேள்வியில் கேட்கப்பட்டுள்ள விடயமும் ஒரு கார் ணியாக இருக்கலாம். ஆனாலும் இப்பிள் ளைக்கு ஆசிரியர்கள் பிரத்தியேகமாக விசேட கவனம் செலுத்துவார்களானால் இன்ஷா அல்லாஹ் இப்பிள்ளையை நல்ல தொரு நிலைக்கு கொண்டு வரலாம்.
இறுதியில் வாசகர்களுக்கு விஷேடமாக சிறு பிள்ளைகளையுடைய பெற்றோருக்கும் மற்றும் ஆசிரியர்க ளுக்கும் ஒரு செய்தியாக தயவு செய்து உங்கள் பிள்ளைகளும் இடக்கை பழக்கமுடையவர்களாக இருந்தால் அவர்கள் பலவந்தமாக பல அழுத்தங்களை கொடுத்து வலது கையால் எழுதுவதற்கு முயற்சிக்க வேண்டாம் எனக்கேட்டுக் கொள்கின்றேன்.
DR.NASEEM



0 Comments