Ticker

6/recent/ticker-posts

இலங்கையை விட்டுப்போகாத இனவாதம்...

ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களை இனரீதியாக பிரித்தாளும்  திட்டம் பல நூற்றாண்டுகாலமாக இலங்கையிலும் பல நாடுகளிலும் நடந்துகொண்டுதானிருக்கின்றன.

அநேகமான நாடுகள் இனவாதத்தால் அழிந்துகொண்டிருப்பதைக் காணலாம் .அதிலும் முக்கியமாக ,இலங்கையும் ,இந்தியாவும் இனவாதம் என்ற பெயரில் மிகவும் கொடூரமான திட்டங்களால் சிறுபான்மை மக்களை அடக்கியாள முனைவது,சிந்திக்கவேண்டிய ஒரு விடயம்.

அரசியல் பொறுப்புக்களில் இருக்கின்றவர்கள் தங்களுடைய வெற்றிக்காக மக்களிடம் ,இனவாத விஷத்தை விதைப்பது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் சர்வசாதாரமாக நடக்கின்றது.

இலங்கையைப்பொருத்தவரையில் ,பாராளுமன்றத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகளில் அனேகம்பேர்  இனவாதத்தால் சூழப்பட்டவர்கல்தான் .அதிலும் மஹிந்த அணியினருக்கு இன்று இருக்கின்ற ஒரே ஒரு ஆயுதம் 'இனவாதம்'மட்டுமே.

மீண்டும் ஒரு கலவரத்தை தூண்டிவிட்டு பெரும்பான்மை மக்களின் ஆதரவைத் திரட்டும் வேலைகளைத்தான் தற்போது மஹிந்த அணியிலிருக்கும் சில தகுதியற்ற அரசியல்வாதிகள் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

அதிலும் முக்கியமாக சரத் வீரசேகர இனவாதக் கருத்துக்களை விதைப்பதற்கே படைக்கப்பட்ட ஒரு உயிரினமாகத்தான் நினைக்கத் தோன்றுகின்றது.

பாராளுமன்றத்தில் சரத்வீரசேகரவின் பேச்சை கொஞ்சம் கேட்டுப் பாருங்கள் .

'விடுதலைப்புலி பயங்கரவாதிகளை நினைவு கூருவது பாவம், அவர்கள் கொலைகாரர்கள் என நாடாளுமன்றத்தில்  சரத் வீரசேகர மீண்டும் சர்ச்சை கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழ் மக்கள் தமது வீடுகளுக்குள் இருந்தவாறு நினைவு கூர்ந்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“உங்கள் பெற்றோர்களை கேளுங்கள் இராணுவமா, புலிகளாக மக்களை கொன்றது என்று. இவ்வாறு பயங்கரவாதிகளை நினைவேந்துவது தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியல்வாதிகள் செய்யும் பாவம்.

முன்னர், வெளியே சென்ற இளைஞர்களை மீண்டும் காண முடியாது. புலி பயங்கரவாதிகள் அழைத்துச் சென்றுவிடுவார்கள்.

இதனை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அன்று நீங்கள் நிம்மதி அற்று இருந்தீர்கள். இன்று தான் உங்களுக்கு விடுதலை” எனவும் மீண்டும் மீண்டும் சர்ச்சையான கருத்துக்களையே நாடாளுமன்றில் தெரிவித்து வருகின்றார்.

அதேவேளை, இலங்கையில் சிங்கள இனம் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே புத்த சாசனம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தார். நாட்டில் பௌத்த மத உரிமைகள் மற்றும் பௌத்த மரபுரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் உள்ளன.

இலங்கையில் 72 சதவீதம் பௌத்தர்களும், 12 சதவீதம் இந்துக்களும், 9.7 சதவீதம் இஸ்லாமியர்களும், 6.3 சதவீதம் கத்தோலிக்கர்களும் வாழ்கிறார்கள்.

இலங்கை தேரவாத பௌத்த நாடு அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரையின் பிரகாரம் பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டு, போசிக்கப்படவேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள இனத்தவர்கள் தான் பௌத்த சாசனத்தை தோற்றுவித்தார்கள், ஆகவே புத்தசாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் சிங்கள இனம் பாதுகாக்கப்பட வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் இருந்து சிங்களவர்களும், முஸ்லிம்களையும் பிரபாகரன் மாத்திரம் வெளியேற்றவில்லை. பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகளும் அவ்வாறே செயற்பட்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஷ்வரன் கொழும்பில் சிங்களவர்களுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு வடக்கு மாகாணத்திற்கு சென்று குறிப்பிடுகிறார். வடக்கில் சிங்களவர்களுக்கு இடமில்லை என்று, இது வெறுக்கத்தக்கதாகும்.

வடக்கில் புத்த சிலையை நிர்மாணிக்கும் போது அதற்கு எதிராக இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள், இவ்வாறானவர்களிடம் நல்லிணக்கத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது.

வடக்கு மாகாணத்தில் புத்தசாசனத்திற்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள். குருந்தூர் மலையில் பௌத்த விகாரைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து தடையேற்படுத்துவதையிட்டு ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை அவர்களின் உறவுகள் வீடுகளுக்குள் வைத்து நினைவு கூர்ந்து கொள்ளலாம்.

விடுதலைப்புலிகள் 3 இலட்சம் தமிழர்களை பகடைகாயாக வைத்து போர் செய்தார்கள். விடுதலைப்புலிகள் அமைப்பினர் மனித உரிமைகளுக்கு எதிராகவே செயற்பட்டார்கள்.

இவ்வாறானவர்களையா தாம் நினைவு கூறுகிறோம் என்பதை தமிழர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் 'எனவும் தொடர்ந்தும் சர்ச்சைக் கருத்தை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுக்கும் யோசனைகளை தவிர்த்து ,மீண்டும் ஒரு கலவரத்தை உண்டுபண்ணும் நோக்கத்தோடு  இலங்கை அரசியல்வாதிகள் நடந்துகொள்வது மிகவும் பாரதூரமான விளைவுகளை சந்திக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
  மாஸ்டர்  



 


Post a Comment

0 Comments