காதி நீதிமன்ற முறைமை வரமா சாபமா?

காதி நீதிமன்ற முறைமை வரமா சாபமா?


காதி நீதிமன்ற முறைமையானது 1930 களில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தால் ஆளப்படுகின்ற முஸ்லிம்களது விவாகம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு நீதிமன்ற முறைமையாகும். “The King Vs. Miskin Umma என்ற வழக்கில் ஒரு பெண் விவாகரத்துப் பெறுவதற்கு நீதிமன்றத்தை அணுகுவதில் உள்ள சிரமத்தினைக் கருத்திற்கொண்டு அந்த வழக்கில் வழக்குரைஞராக இருந்த நீதியரசர் அக்பர் CJ அவர்களதும் இன்னும் பலரதும் கடின முயற்சியின் பலனாக எமக்குக் கிடைத்த வரப்பிரசாதமே காதி நீதிமன்ற முறைமையாகும். சுதந்திரத்திற்கு முன்னரான இலங்கையில் சாத்தியப்படுத்த்தப்பட்ட இந்தக் கட்டமைப்பு சுத்தந்திர இலங்கையில் முயற்சி செய்யப்பட்டிருப்பின் சாத்தியமில்லாத ஒன்றாகவே போயிருக்கும்.

காதி நீதிமன்ற முறைமையானது பின்வரும் காரணங்களால் பொதுமக்களுக்கு இலகுவாக அணுகச் சாத்தியமான ஒரு முறைமையாகக் கருதப்படுகின்றது. 
  • அணுகுதல் இலகு -சட்டத்தரணி ஒருவரின் துணை இல்லாமல் தனது வழக்கினைப் பதிவுசெய்ய முடியும்.
  • அதிகம் செலவில்லை - குறைந்த அளவான முத்திரைக் கட்டணம் மட்டுமே செலவாகும்.
  • கால தாமதமாகாது.
  • வழக்குகள் ரகசியமாக விசாரிக்கப்படும் 
  • மூன்று மேல்முறையீட்டு வாய்ப்புகள் காணப்படுகின்றன 
  • காதிகள் சபை 
  • மேல் முறையீட்டு நீதிமன்றம் 
  • உயர் நீதிமன்றம்

இருந்த போதும் இந்த காதி முறைமையில் பல குறைபாடுகளும் காணப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. 
  • காதிகள் நியமிக்கப்படுகின்ற போது அவர்களுக்கு உரிய கல்வித் தகைமைகள் எதுவும் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. தற்போதைய முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் (1951) நன்நடத்தை உள்ள முஸ்லிமான ஒரு ஆண் காதியாக நியமிக்கப்பட முடியும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • காதிகள் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
  • அவர்கள் பாரபட்சமாக நடக்கின்றார்கள். 
  • தங்களுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.
  • அவர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள்.
  • சட்டத்தைச் சரியாகக் கையாளும் ஆற்றல் அற்றவர்களாக இருக்கின்றார்கள். 
என்பன போன்ற பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. 
  • காதி நீதிமன்றங்களுக்கு எனத் தனியான ஒரு கட்டிடத் தொகுதி காணப்படவில்லை. 
  • வழக்குகளின் ஆவணங்களை முறையாகப் பேணக்கூடிய ஒரு பொறிமுறை பின்பற்றப்படுவதில்லை. 
  • தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் காதி நீதிமன்றங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே அத்தீர்மானங்கள் பின்பற்றப்படாத விடத்து நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்று அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைமை காணப்படுகிறது. 
மேலே சொன்ன காரணங்களினால் காதி நீதிமன்றங்களினுடைய செயற்பாடுகள் போதிய அளவு திருப்திகரமாக இல்லை. இதனால் தற்போது இந்த நீதிமன்ற முறைமையைக் கைவிடும் படி பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த நீதிமன்றத்தின் நியாயாதிக்கங்கள் மாவட்ட நீதிமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும் எனவும், 'காதி' என்ற பெயர் தொடர்ந்து பயன்படுத்தப்படக் கூடாது எனவும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. 

மேலே சொல்லப்பட்ட சிக்கலான நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, முஸ்லீம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்குத் திருத்தங்களைப் பரிந்துரை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது காதி நீதிமன்ற முறைமையை “Muslim Marriage conciliator” என்ற ஒரு தலைப்பின் கீழ் மாற்றுவதற்கான பரிந்துரை ஒன்றை முன் வைத்துள்ளது. இங்கு நாம் அவதானிக்க வேண்டியது யாதெனில் 'காதி' என்ற பெயர் “Muslim Marriage conciliator” என்ற பெயரினால் மீள் நிரப்பப்படத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

 ✌‘.....காதி’ என்ற சொல்லைச் சட்டத்திலிருந்து நீக்க விளைவதானது இந்த அடையாளத்தை அழிப்பதற்கான ஒரு முயற்சியாகும்......✌ 

இந்த முன்மொழிவைச் செய்கின்றவர்கள் முன்வைக்கின்ற வாதமாவது, 'காதி' என்பது நீதிபதியைக் குறிக்கின்ற ஒரு அரபுச் சொல். எனவே அந்த வார்த்தையில் நாம் அதிகம் தொங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்பதாகும். உண்மையில் இலங்கையைப் பொறுத்தவரையில் 'காதி' என்பது வெறுமினே நீதிபதியினைக் குறிக்கின்ற அரபுசச்சொல் மாத்திரம் அல்ல. அது முஸ்லிம் சமூகத்தினுடைய அடையாளங்களில் ஒன்று. அல்லாது போனால் இந்தசச்சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என இனவாதிகள் அழுத்தம் கொடுக்கவேண்டிய அவசியம் என்ன? முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் நீண்டகாலமாகத் தனித்துவமான பண்புகளுடன் வாழ்கின்றது என்பதற்குரிய அடையாளங்களில் ஒன்றாக இச்சொற்பிரயோகம் காணப்படுகிறது. இந்தச் சொல்லானது ஏறத்தாழ 100 வருடங்களாக முஸ்லிம்களுடைய அடையாளமாக திகழ்கின்றது. எனவே ‘காதி’ என்ற சொல்லைச் சட்டத்திலிருந்து நீக்க விளைவதானது இந்த அடையாளத்தை அழிப்பதற்கான ஒரு முயற்சியாகும். இந்த நாட்டில் முஸ்லீம் சமூகத்தின் நீண்டகால இருப்பைச் சுட்டி நிற்கின்ற அடையாளங்களைத் திட்டமிட்டு அழிக்கின்ற பல நடவடிக்கைகள் நமது கண்முன்னே நடந்தேறுவதை அறிந்திருந்தும் இந்த விடயத்தில் நமது படித்த சமூகம் அலட்ச்சியம் காட்டுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

மேலும் இத்திருத்தத்தின் மூலம் காதி நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பெருமளவு குறைக்கப்படுகின்றது. இதன் மூலம் அதிகளவான விவாகம் தொடர்பான வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மாவட்ட நீதிமன்றங்களைப் பொறுத்தவரையில் 
  • அதன் நடைமுறைகள் நீண்ட காலத்தை எடுத்துக் கொள்வதாகவும் 
  • செலவு மிக்கதாகவும் 
  • வழக்குகள் பகிரங்கமாக விசாரிக்கப்படக்கூடியதாகவும் காணப்படுகிறது 

இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயம், எமது சமூகத்தில் காணப்படுகின்ற பெண்களுடைய மனநிலை. அவர்களுடைய கலாச்சாரம் நடைமுறைகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்றபோது அவர்கள் ஒரு நீதிமன்றச் சூழலுக்குச் சென்று தங்களது விவாகம் சம்பந்தமான பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வதை விரும்பக் கூடியவர்களாக இல்லை. எனவே காதி நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றப்படுமாயின் சட்டத்தின் அடிப்படையில் நீதியைத் தேடிப் பெற்றுக் கொள்கின்ற முயற்சியை எமது பெண்கள் கைவிடுவார்கள். இதனால் அவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதோடு அவர்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கை பாதிக்கப்படும். இந்த விடயம் இலகுவாக எடுக்கக் கூடியதல்ல. மிகக் கூர்மையாகக் கவனிக்கப்பட வேண்டியது. 

மேலும் எமது நாட்டிலே பல நீதிமன்றத் தொகுதிகளில் மாவட்ட நீதிமன்றங்களும் நீதவான் நீதிமன்றங்களும் ஒரே கட்டடத் தொகுதிக்குள் அமைந்திருக்கின்றன. நீதவான் நீதிமன்றங்களுக்கு வருகின்ற வழக்குகள் எப்படியானவை அந்த வழக்குகளோடு சம்பந்தப்பட்டு அங்கு வருகை தருபவர்கள் எப்படியானவர்கள் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அவ்வாறான ஒரு சூழலில் எமது பெண்களை அவர்களுடைய திருமணம் சம்பந்தமான வழக்குகளைத் தீர்த்துக் கொள்ள ஏற்பாடு செய்வது ஆரோக்கியமானதா? 
பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோஷத்தோடு நாம் முன்வைக்கின்ற முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கான திருத்தங்கள் அதே பெண்களைப் பாரபட்ச படுத்துவதாயும், நோவினை செய்வதாகவும், சங்கடங்களுக்கு ஆட்படுத்துவதாயும், அவர்களைப் புதிய புதிய பிரச்சினைக்குள் தள்ளி விடுவதாயும் அமைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் திருத்தங்களாவன எங்களுடைய பெண் சமுதாயத்தைப் பாதிக்கக்கூடிய புதிய பிரச்சினைகளுக்குள் அவர்களைத் தள்ளிவிடாமற் பாதுகாப்பது எமது கடமையாகும். 

பொதுச்சட்டத்தால் ஆளப்படுகின்ற சமூகத்தில் திருமணம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளுகின்ற சமூக செயற்பாட்டாளர்களோடு இது தொடர்பில் உரையாடுகின்ற பொழுது தமது சமூகத்தில் திருமணம் சார் பிணக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தினை நாடுவது எளியவர்களுக்கு மிக்க கடினமான ஒன்று என்கின்றனர். சமூகத்தில் காணப்படுகின்ற நலன்புரி அமைப்புகளின் உதவியுடன் பல பிணக்குகள் கையாளப்படுவதாயும் (இதற்கு சட்ட அங்கீகாரம் இல்லை) அவர்களின் இறுதித்தேர்வாகவே நீதிமன்றம் செல்வது அமைகின்றது என்றும் சொல்கின்றனர். முஸ்லிம்களுக்கு இருக்கின்ற காதி நீதிமன்ற முறைமையானது மிகப்பெரும் வசதி என்றும் அதில் குறைபாடுகள் காணப்படுமாயின் அவற்றைச் சீர்படுத்தும் வகையான திருத்தங்களைச் செய்து அந்தக்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டுமேயன்றிக் கையுதிர்க்க இடமளிக்காதீர்கள் என எங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தற்போது காணப்படுகின்ற காதி நீதிமன்றங்கள் மிகுந்த குறைபாடுகளுடன் காணப்படுகின்றன என்பதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அக்குறைபாடுகள் காதி நீதிமன்றங்கள் இல்லாமல் ஆக்கப்படுவதற்கு அல்லது அதனுடைய அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு மாவட்ட நீதிமன்றங்களுக்கு அவை வழங்கப்படுவதற்கு அடிப்படையாக அமையக்கூடாது. மாறாக காதி நீதிமன்றங்கள் திறம்பட செயல்படுவதற்கு அவசியமான திருத்தங்கள் செய்யப்பட்டு காதி நீதிமன்ற முறைமையானது மேம்படுத்தப்பட வேண்டும்.


இந்த விடயத்தில் எமது சமூகம் காட்டுகின்ற அசிரத்தையானது எதிர்காலத்ததில் பல அசௌகரியங்களை எமது சமூகத்திற்கு ஏற்படுத்தும். தற்போது நாடு இருக்கும் நிலையில் மீண்டும் இவ்வாறான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவது என்பது குதிரைக்கொம்பு. அது 'கையில் இருக்கும் பூனையை விட்டுவிட்டு பேஸ் பேஸ்' என்றழைத்த கதையாகிவிடும். எமது முன்னோர்களின் கடின உழைப்பில் சுதந்திரத்திற்கு முன்னரான இலங்கையில் எமக்குக்கிடைத்த இந்தக்கடடமைப்பைத் தக்கவைக்க முயற்சிக்காமல் இருப்பது, அல்லது நீயா நானா என்று போட்டிபோட்டுக்கொண்டு முரண்பட்டுக்கொள்வதானது, கூத்தாடிக் கூத்தாடித் தோண்டியைப் போட்டுடைத்த நந்தவனத்து ஆண்டியின் நிலைக்கு ஒப்பானது.
சட்டத்தரணி
ஷிபானா ஷரீபுத்தீன்


 


Post a Comment

Previous Post Next Post