Ticker

6/recent/ticker-posts

Ad Code

துயரத்தின் நினைவுகள் :ஆழிப் பேரலை....18 வருட நினைவு!


சுனாமி பற்றி நாம் அறிந்து கொண்டதும், அனர்த்தம் பற்றி நாம் புரிந்து கொண்டதும் கடந்த 2004ம் ஆண்டு டிஸம்பர் மாதம் 26ம் திகதிதான். 9.00 ரிச்டர் அளவிலான பாரிய பூமியதிர்ச்சி இலங்கை நேரப்படி அதிகாலை 6.58க்கு சுமாத்ராதீவை அண்டியுள்ள கடற்பகுதியில் சுமார் 10 கிலோ மீற்றர் கடலாழத்தில் ஏற்பட்டு - சுனாமி அலையை ஏற்படுத்தி, சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னரே அது இலங்கையின் கடலோரங்களைத் தாக்கியது.

இந்து சமுத்திரத்திலுள்ள சுமார் பதினொன்றிற்கும் மேற்பட்ட தென்கிழக்காசிய நாடுகளைச் சார்ந்த கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்த மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களைப் பழிகொண்டு, இலட்சக்கணக்கானவர்களின் உடைமைகளை அழித்தொழித்து, பல்லாயிரக் கணக்கான மக்களை அகதிகளாக்கிவிட்ட இவ்வாழிப்பேரலையின் நினைவை வழமைபோல் 18 வருடங்கள் கழித்து இன்றைய தினம் நினைவு கூர்கின்றோம்.
குழந்தைகளை இழந்த பெற்றோர், பெற்றோர்களை இழந்த குழந்தைகள், ஆசிரியர்களை இழந்த மாணவர்கள், மாணவர்களை இழந்த ஆசிரியர்கள், உற்றார், உறவினர், நண்பர்களை இழந்தவர்கள், அன்பான அயலவர்களையும், ஒன்றாக வேலை செய்தவர்களையும், சகபிரயாணிகளையும் இழந்து நின்ற பல்லாயிரக்கணக்கான மக்களைத் தவிக்கச் செய்துவிட்டது இவ்வாழிப் பேரலை. இவ்வாழிப்பேரலையின் தாக்கத்தை இன்று நினைத்தாலும் இனிமேலும் இவ்வாறானதொன்று வரக்கூடாது என்றே மக்கள் பிரார்த்திப்பார்கள் என்பது நிச்சயம்.


40 அடிகள் வரை உயர்ந்து சென்ற இப்பேரலையானது சில இடங்களில் 90 அடிகள் வரை உயர்ந்ததாகவும் அந்நாளில்  சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.

1899க்கு பின்னர் உலகில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சிகளில் ஒன்றாகவே  இது கருதப்பட்டது. 1964க்குப் பின்னர் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த பூமியதிர்ச்சியும் இதுவேயாகும். இதனால் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலைத்தீவு, பங்களாதேஷ், மியன்மார், சோமாலியா, தன்சானியா, கென்யா போன்ற பதினொரு நாடுகளின் கடற்கரைவாசிகளும், கடற்கரைகளில் உல்லாசப் பயணத்தைக் கழித்துக் கொண்டிருந்தோரும் தமது உயிர்களையும், உடைமைகளையும் இழந்தமை மனவேதனையைத் தருகின்றது.

சுனாமி ஏற்பட்டு சுமார் மூன்று மாதங்களின் பின்னர் ஊர்ஜிதமான தகவல்களின்படி இந்தோனேசியாவிலேயே அதிகமானோர் இறந்தனர்.  அது சுமார் 2,36,012 என்றும், அடுத்தபடியாக 31,150 இலங்கையர்களும், இந்தியாவில் 16,749 பேரும், அந்தமான் - நிகோபார் தீவுகளில் 1925 பேரும், தாய்லாந்தில் 5395 பேரும், சோமாலியாவில் 298 பேரும், மாலைத்தீவில் 82 பேரும், மலேசியாவில் 68 பேரும், மியன்மாரில் 69 பேரும், பங்களாதேசில் 2 பேரும், கென்யாவில் ஒருவருமாக இறந்துள்ளதோடு, பாதிப்புக்குள்ளான நாடுகளில் சுமார் 14,374 பேர்கள் காணாமற்போயினர். இவ்வனர்த்தம் காரணமாக இலங்கையில் மாத்திரம் இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்விடங்களை இழக்க நேர்ந்தமை வருந்துதற்குரியது.

இலங்கைக் கடற்கரையைச் சுற்றியுள்ள 12 துறைமுகங்களில் 10 அனர்த்தம் காரணமாகச் சேதமடைந்தன. அனர்த்தம் காரணமாக நேரடிப் பாதிப்புக்குள்ளான கடற்கரைவாசிகள் 1,77,785 என்றாலும், கடலை அண்டித்தொழில் புரிந்த சுமார் எட்டு இலட்சம் பேர் பாதிப்புக்கப்பட்டனர். இவ்வனர்த்தம் காரணமாக இலங்கையில் தாய், தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகள் 1060 பேர்கள் என்றும், தாயை அல்லது தந்தையை மட்டும் இழந்தோர் சுமார் 3414 பேர்கள் என்றும் அந்நாட்களில் கணக்கிடப்பட்டுள்ளது.


சுனாமி அனர்த்தம் காரணமாக வடக்கு- கிழக்குப் பகுதிகளில் பெரும்பாலான வைத்தியசாலைகள் சேதமடைந்தன. வைத்திய சேவைக்கு சுமார் ஏழாயிரம் மில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டதாக அறிய முடிகின்றது. அனர்த்தம் காரணமாக வடக்கு-கிழக்குப் பகுதிகளில் சுமார் 430 கிலோ மீற்றர் நெடுஞ்சாலைகளும், அதனோடிணைந்த பாலங்கள் 26 பழுதடைந்தன. அத்தோடு 163 கீலோ மீற்றர் புகையிரத வீதிகளும், அதனோடிணைந்த 6 பாலங்களும் பாதிப்புற்றமை குறிப்பிடத்தக்கது.

சூறாவளி, பெருவெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துப் பழக்கப்பட்டிருந்த இலங்கை மக்களுக்கு 2004ம் ஆண்டைய சுனாமியானது அதிர்ச்சி கலந்ததொரு நிகழ்வின் தரிசனம் என்றே கூற வேண்டும். இனியும் இவ்வாறானதோர் அனர்த்தம் வராதிருக்கவும், 2004ம் ஆண்டைய அனர்த்தத்தின்போது உயிரிழந்தோருக்காகவும் பிரார்திப்போமாக!

-   ஐ. ஏ. ஸத்தார்


 


Post a Comment

0 Comments