Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 5


அடக்கம் உடைமை-- 13
அடக்கத்தின் மறுபக்கமே புகழாகும்

அடக்கம் இருந்தால் ஒளிமயந்தான்!
அடங்காப் பண்போ இருள்மயந்தான்!
அடக்கம் என்பது செல்வந்தான்!
காப்பது நமது கடமைதான்!

இந்தப் பண்பைப் பெரியோர்கள்
உணர்ந்தே இங்குப் புகழ்வார்கள்!
இந்தப் பண்பின் முன்னாலே
மலையின் உயரம் மடுவாகும்!

பணிந்து நடத்தல் சிறப்பாகும்!
செல்வம் உள்ளோர் கடைப்பிடித்தால்
மேலும் மதிப்பார் உலகத்தார்!

ஐம்புலன் தன்னை ஒருபிறப்பில்
அடக்கி வாழ்ந்தால் எழுபிறவி
தன்னைக் காக்கும் கவசந்தான்!

கட்டுப் பாடே இல்லாமல்
நாவைப் பேச அனுமதித்தால்
துன்பந் தன்னில் சிக்கவைக்கும்!

தீமை விளையும் ஒருசொல்லால்
முன்னர் செய்த அறங்களெல்லாம்
விழலுக் கிறைத்த நீராகும்!
நெருப்புக் காயம் ஆறிவிடும்!
தீச்சொல் சுட்ட புண்மட்டும்
உள்ளந் தன்னில் வடுவாகும்!
சினத்தைக் காத்துக் கற்றறிந்தே
அடக்கம் கொண்டு வாழ்பவனை
அறங்கள் நாளும் காத்திருக்கும்.

ஒழுக்கம் உடைமை-- 14
தனிமனித ஒழுக்கம் தலை நிமிர வைக்கும்

ஒழுக்கம் உயர்வின் வழியாகும்!
உயிருக்கும் மேலாய்க் காப்போமே!
தடைகள் எத்தனை வந்தாலும்
தலைநிமிர்ந் தேதான் காப்போமே!

ஒழுக்கம் உடையவன் உயர்ந்தவனாம்!
இல்லா தவனே தாழ்ந்தவனாம்!

வேதம் சொல்வோன் கற்றதையே
மறந்து போனால் படித்திடலாம்!
ஒழுக்கந் தவறிப் போனாலோ
இழிந்த குலத்தான் எனச்சொல்வார்!

பொறாமை கொண்ட மனிதனிடம்
செல்வம் என்றும் நிலைக்காது!
ஒழுக்கம் இல்லா மாந்தரிடம்
உயர்வு என்றும் நிலைக்காது!

ஒழுக்கம் என்னும் விளக்கணைந்தால்
வாழ்வில் இருள்தான் சூழுமென்றே
ஒழுக்கந் தன்னைப் போற்றிடுவார்!

ஒழுக்கப் பண்போ இன்பந்தான்!
தவறிய ஒழுக்கம் துன்பந்தான்!
ஒழுக்கம் பேணும் சான்றோர்கள்
தீய சொற்கள் பேசமாட்டார்!

மக்களுடன் ஒத்து வாழாதோர்
கற்றுத் தெளிந்தவர் என்றாலும்
அறிவிலி என்றே பரிகசிப்பார்!

பிறன் இல் விழையாமை--15
மற்றவர் பொருளைக் கவர்தல் அவமானமாகும்

பிறருக் குரியதை விரும்பாதே!
அறத்தை விட்டே விலகாதே!

பொருளை நாடி அவர்வீட்டு
வாசலில் நிற்பது மடமைதான்!

நம்மை நம்பும் மனிதருக்குத்
துரோகம் செய்பவன் நடைப்பிணந்தான்!

துரோகம் செய்து துய்ப்பவர்கள்
பெரியவர் எனினும் சிறியோர்தான்!

பிறரது பொருளைக் கவர்பவரோ
அழியாப் பழியை ஏந்திடுவார்!

பஞ்சமா பாதகம் செய்பவரைப்
பகையும் பழியும் சூழ்ந்திருக்கும்!

தனக்கு மட்டும் உரியதையே
விரும்பி வாழ்பவர் சான்றோராம்!

பொறாமை வெறியை ஒதுக்கிவிட்டு
வாழ்வோர் ஒழுக்கச் சுடராவார்!

அடுத்தவர் பொருளை விரும்பாதோர்
அகிலம் போற்றும் உத்தமர்தான்!

கரடு முரடாக வாழ்ந்தாலும்
மாற்றார் பொருளை விரும்பாமல்
வாழ்வதே உலகில் சிறப்பாகும்!
(தொடரும்)


 


Post a Comment

0 Comments