காற்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜெண்டினா வெற்றிக் கிண்ணம் தூக்கியது!

காற்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜெண்டினா வெற்றிக் கிண்ணம் தூக்கியது!


உலகில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த உலகக்கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டம் பிரான்ஸ் - ஆர்ஜெண்டினா ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்று ஆர்ஜெண்டினா அணி கிண்ணத்தை வென்றது!



மெஸ்ஸியின் இறுதி உலகக்கிண்ணப் போட்டி இது என்பதால், அவர் வெற்றிக் கிண்ணத்தையேந்தி, ஆர்ஜெண்டினா ரசிகர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுப்பாரா, அல்லது தரவரிசையில் நாலாவது இடம் வகித்து, லீக் சுற்றில் இரண்டு வெற்றிகள்,  ஒரு தோல்வியுடன் முதலிடம் பிடித்து, இரண்டாவது சுற்றில் 3:1 என்ற கோல் கணக்கில் போலந்தையும், காலிறுதியில் 2:1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் வென்று அரையிறுதிக்குத் தகுதிபெற்ற பிரான்ஸ்  அணிதான் இம்முறையும் வெற்றிக் கிண்ணம் தூக்குமா என்று உலக காற்பந்தாட்டப் பிரியர்கள்  எதிர்பார்ப்புடன்   காத்திருந்த நிலையில், ஆர்ஜெண்டினா  வெற்றிக் கிண்ணத்தை வென்றிருப்பது மெஸ்ஸியின் எதிர்பார்ப்பிற்குக் கிடைத்துள்ள பலனாகும் என்றால் அது மிகையாகாது!

வாழ்த்துக்கள்  ஆர்ஜென்டினா!
வாழ்த்துக்கள் மெஸ்ஸி!

உலகக்கிண்ண அரையிறுதிக்கு முன்னேறி நான்காவது இடத்தைப்பிடித்துள்ள, ஆபிரிக்க மற்றும் அரபு நாடான மொரோக்கோ, இறுதிப் போட்டியின்போது  சிறப்பாக ஆடி, அதிக நேரம் பந்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்!

இதில் ஹெர்னான்டஸ் மீது தவறிழைத்ததாக மொரோக்கோ வீரர் சொபியான் பவுபால் மீது நடுவர் சீசர் ரெமோசின் மஞ்சளட்டை காட்டியது சர்ச்சைக்குரிய முடிவாகியுள்ளதாகவும்,  மொரோக்கோவுக்குச் சாதகமாக இருந்திருக்க வேண்டிய முடிவு  விமர்சனத்துக்குள்ளாயிருப்பதாகவும், அதன்போது மொரோக்கோவுக்கே பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றவாறாக, அந்நாட்டுக் காற்பந்துச் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளதாக, சில இணையவழி ஊடகங்கள்  பதிவிட்டு வருகின்ற நிலையில், FIFA இவ்விடயத்தில்  எவ்வித கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

உலகக் கிண்ணப்போட்டிகளில் பங்குபற்றும் அணிகளுக்காக  இம்முறை மொத்தமாக 440 மில்லியன் அமெரிக்க டொலர்கள்  ஒதுக்கப்பட்டுள்ளது.  இது கடந்த உலகக் கிண்ணத் தொடரில் வழங்கப்பட்டதைவிட 40 மில்லியன் டொலர்கள்  அதிகமானதாகும்.

போட்டிகளுக்கு முன்பாகவே, தகுதி பெற்ற ஒவ்வொரு அணிக்கும் தயார் படுத்தல்களுக்காக, தலா 1.5 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டன. சுற்றுப்போட்டியில் கடைசி இடம் பெற்று வெளியேறிய அணிகளுக்கு சுமார் 9 மில்லியன் டொலர்களும், 16 அணிகள் கொண்ட முன் காலிறுதிச் சுற்றுடன் வெளியேறிய அணிகளுக்குத் தலா 13 மில்லியன் டொலர்களும், காலிறுதியுடன் வெளியேறும் அணிகளுக்குத் தலா 17 மில்லியன் டொலர்களும் கிடைக்கும்.

நாலாம் இடத்தைப் பெற்றுள்ள  மொரோக்கோ அணிக்கு 25 மில்லியன் டொலர்களும், மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கின்ற குரோஷியா அணிக்கு 27 மில்லியன் டொலர்களும், இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள பிரான்ஸ் அணிக்கு 30 மில்லியன் டொலர்களும்  வழங்கப்படும் அதே நேரத்தில், "2022-கத்தார் உலகக்கிண்ணம்" வென்ற  ஆர்ஜெண்டினா அணிக்கு 42 மில்லியன் டொலர்களும் கிடைக்கவுள்ளது.

மத்திய கிழக்கில்  துணிச்சல் மிக்க  ஒரு குட்டி நாடாகக் கருதப்படும் கத்தார்,  வருடாந்தம் டிசம்பர் 18ம் திகதியைத்  தனது தேசிய தினமாகக் கொண்டாடுகின்றது!

சிற்றரசர் ஷெய்க் தமீம் பின் ஹமத் அல் தானி (His Highness the Amir Sheikh Tamim bin Hamad Al-Thani), தனது தந்தைக்குப் பின்னர் கத்தார் தீபகற்பத்தின் ஆட்சியாளராகப் பதவியேற்று, கத்தாரை செல்வம் கொழிக்கும்,  செழிப்புமிக்க நாடாக ஆக்கி, முழு உலகுமே திரும்பிப் பார்க்கும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளமையை, சிறப்புடன் நிறைவுபெறும் இந்த உலகக் கிண்ணப் போட்டி நிகழ்வைக் கொண்டு  உலகம் அறிந்து கொண்டது!

உலகக்கிண்ண இறுதி நிகழ்வுகளைத்  தொடர்ந்து, லுசைல் பவுல்வர்டில், தேசிய தினக் கொண்டாட்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது!

போட்டித் தொடரில் கலந்துகொண்ட அனைத்து அணிகளுக்கும், நிகழ்வுகளைச் சிறப்பாக நடாத்திவைத்த கத்தார் நாட்டு ஆட்சியாளர்களுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

அடுத்த உலகக் கிண்ணப் போட்டி 2026ம் ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்ஷிகோ ஆகிய மூன்று நாடுகளிலும்  இடம்பெறவுள்ள நிலையில், அதில் சில மாற்றங்கள் செய்வது  குறித்து, பரிசீலனைகள்  செய்து வருவதாக அமைப்பின் தலைவர் ஜியன்னி இன்ஃபன்ட்டினோ தெரிவித்துள்ளார். 

போட்டிக்குத் தகுதிபெறும் குழுக்களின் எண்ணிக்கை 32லிருந்து 48 ஆக அதிகரிக்கும். நான்கு அணிகள் கொண்ட எட்டுக் குழுக்களுக்குப் பதிலாக மூன்று அணிகள் கொண்ட பதினாறு குழுக்கள் போட்டியிடுவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக, மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்!
செம்மைத்துளியான்.



 


Post a Comment

Previous Post Next Post