Ticker

6/recent/ticker-posts

Ad Code


 

“பயத்தின் வெளிப்பாடுதான் அமைச்சர் உதயநிதி மீதான விமர்சனங்களே”: விஷமிகளுக்கு முரசொலி பதிலடி !


உதயநிதியே வருக!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்! அவரது தகுதியும், ஆற்றலும், தனித்திறமையும், மக்கள் செல்வாக்கும், பொதுமக்களை ஈர்க்கும் தன்மையும், சுயசிந்தனையும், மனதில் பட்டதைச் சொல்லும் துணிச்சலும், செயல் வேகமும் - அவரது புதிய பொறுப்புக்கு வழிவகுத்தது.

இப்படி எல்லாம் ஆற்றல் பெற்றவராக அவர் இருப்பதால்தான் சில விஷம சக்திகளால் அவர் அதிகமாக விமர்சிக்கப்படவும் படுகிறார். இத்தகைய ஆற்றல் கொண்டவராக அவர் இருப்பதால்தான் விமர்சிக்கப்படுகிறார். ஆற்றலும், தனித்திறமையும், மக்கள் செல்வாக்கும், ஈர்க்கும் தன்மையும் இல்லாவிட்டால் இந்த விஷம சக்திகள் அமைதியாகத்தான் இருந்திருப்பார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றலாளர்களை அடையாளம் கண்டு, தொடர்ச்சியாக அங்கீகரித்துக் கொண்டே இருக்கிறதே என்ற ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் அமைச்சர் உதயநிதி மீதான விமர்சனங்களே தவிர வேறல்ல. இத்தகைய விமர்சனங்களின் மூலமாக அமைச்சர் உதயநிதி அவர்களின் தகுதியும் திறமையும் வெளிப்படுகிறதே தவிர வேறல்ல. அவரைத் தாக்குவதன் மூலமாக, அவரைப் பார்த்து விஷமிகள் எவ்வளவு பயந்து போயிருக்கிறார்கள் என்பதையே அறிய முடிகிறது.

‘நாங்கள் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருமுறை குறிப்பிட்டார்கள். இத்தகைய திராவிடக் காளைகள் உருவாகிவிட்டார்களே என்பதுதான் இவர்களது எரிச்சல் ஆகும். பா.ஜ.க. தனது பசப்பு வார்த்தைகளால் மனக்கோட்டை கட்டி வைத்திருந்தது. அதில் ஒற்றைச் செங்கல்லை உருவி உடைத்தவர் உதயநிதி என்பதால்தான் ஆத்திரப்படுகிறார்கள்.


குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடி கைதானார். பா.ஜ.க.வின் பாசிச அரசியலுக்குப் பலியான அனிதாவின் தியாகத்தை தூக்கிப் பிடித்தது மட்டுமல்ல; நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் மன்றத்தில் அதிகப்படுத்தியதால் தான் அவர் மீது அதிக கோபம் கொள்கிறார்கள்.

ஆதிக்க இந்திக்கு எதிராக அனைத்து விதமான போராட்டங்களையும் முன்னின்று எடுக்கிறார் என்பது மட்டுமல்ல; அது தொடர்பான விழிப்பு உணர்ச்சியை இளைஞர்கள் மத்தியில், மாணவர்கள் மத்தியில் விதைக்கிறாரே என்பதும் அவர் மீதான கோபத்துக்குக் காரணம்.

‘தாய் தந்தையை’ மட்டும் சுற்றி வராமல் உலகத்தைச் சுற்றி வந்து உழைக்கிறாரே என்பதும் அவர் மீதான கோபதாபங்கள் ஆகும். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே ஊராட்சி சபைக் கூட்டங்களில் கிராமப்புறங்களை வலம் வந்தார். நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக் கோட்டையை செங்கல் செங்கல்லாகக் கட்டினார். தூர் வாரும் பணிகளில் இளைஞரணியினர் ஈடுபடுத்தப் பட்டார்கள். கொரோனா காலத்தில் இளைஞர்களை முழுமையாக உதவிப்பணிகளில் ஈடுபடுத்தினார்.

அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்று சொல்லி போராடினார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய முறைகேட்டைக் கண்டித்து போராட்டம் நடத்தினார். இவை அனைத்துக்கும் மேலாக சட்டமன்றத் தொகுதிக்குச் சராசரியாக 10 ஆயிரம் பேர் என மொத்தம் 25 லட்சம் புதிய உறுப்பினர்களைக் கழக இளைஞர் அணியில் சேர்க்கும் பணியை ஒருங்கிணைத்தார். சட்டமன்ற உறுப்பினராக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்களால் அங்கீகரிக்கப்பட்டார். தொகுதி மக்களின் செல்லப்பிள்ளையாகக் கொண்டாடப்பட்டார். அந்தத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக்க முனைந்து வருகிறார்.

மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரையில் கடலுக்கு அருகில் சென்று கடலைக் கண்டு ரசிக்கும் வகையிலான சிறப்பு நடைபாதை என்பது, மக்கள் மனங்களில் அவரை மாண்புமிகுவாக உருவாக்கி விட்டது. பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கும் பணியைத் தொடங்கி இருக்கிறார். அது முடிவுற்றால் சென்னைக்கு முழுமையான பெரும்பயன் கிடைக்கும். 500 ஆண்டு காலச் சென்னை சிங்காரச் சென்னையாகும். இவை எல்லாம் சேர்ந்துதான் அவருக்கு புதிய பொறுப்பை உருவாக்கித் தந்துள்ளது.

மாண்புமிகு அமைச்சர் உதயநிதியின் அரசியல் அடையாளம் என்பது ‘திராவிட மாடல்’ பயிற்சிப் பாசறைகள் ஆகும். இந்த இயக்கம் வளர்ந்ததே இதுபோன்ற பயிற்சிப் பாசறைக் கூட்டங்களின் மூலமாகத்தான். 234 தொகுதிகளிலும் ‘திராவிட மாடல்’ பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தி முடித்திருக்கிறார் உதயநிதி அவர்கள். அடுத்து ஒன்றியங்கள் வாரியாக நடக்க இருக்கிறது. தமிழினத்தின் மேன்மைக்கும், தமிழ்நாட்டின் உயர்வுக்கும் அடிப்படைக் காரணமாக திராவிடக் கொள்கைகளை ஒருவர் விதைக்கிறார், அதுவும் இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறார் என்றால் ஆத்திரம் வராதா விஷமிகளுக்கு?

முத்தமிழறிஞர் கலைஞரோடு, தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் திராவிடமும் தமிழும் காலாவதியாகி விடும் என்று நினைத்தவர்கள் நினைப்பில் மண்ணைப் போட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆட்சியையே ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று சொல்லி அவர்கள் எண்ணத்தில் எரிநெருப்பு மூட்டினார். இத்தகைய தத்துவத்தை எதிர்காலத் தலைமுறையும் உணர்வதற்கு உதயநிதி முயற்சிக்கிறாரே என்பதுதான் இன்றைய விமர்சனங்களுக்குக் காரணம்.

கொள்கையை எதிர்க்க முடியாதவர்கள் தனிப்பட்ட உதயநிதியைக் குறிவைக்கிறார்கள். ஏனென்றால் அவர் திராவிடக் கொள்கையின் அடையாளமாக இருக்கிறார். அதனால் குறி வைக்கப்படுகிறார். எதிரிகளால் வளர்க்கப்பட்டதே இந்த இயக்கம். எதிர்ப்பில் வளர்ந்ததே இந்தக் கொள்கை. வலிமையானவர்கள் எதிர்க்கப்படுவார்கள் என்பது உண்மை. வலிமையானது நிச்சயம் வெல்லும் என்பதை மாண்புமிகு உதயநிதி மெய்ப்பிப்பார். வருக!
kalaignarseithigal


 


Post a Comment

0 Comments