Ticker

6/recent/ticker-posts

சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த பிரபல வர்த்தகர்

கொழும்பு - பொரள்ளை மயான பகுதியில் இருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் சாப்டர் குறித்து பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். 

அடையாளம்  தெரியாத கும்பல் ஒன்றினால் குறித்த வர்த்தகர் கடத்தப்பட்டு  பொரள்ளை மயானத்தில் கார் ஒன்றிற்குள் இருந்து கைகள் கட்டப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டிருந்தார். 

அதன் பின்னர் தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த போதிலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

இந்த நிலையில் குறித்த வர்த்தகர் காணாமல் போனமை மற்றும் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில்  விசாரணையில் வெளிவந்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.  

பல கோடி ரூபா கடன் தொகை ஒன்றை வழங்கப் போவதாக தனது மனைவியிடம்  அவர் கூறிவிட்டு கறுவாத்தோட்டம் ப்ளவர் வீதியில் உள்ள  அவரது வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.  

அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது மனைவி அவரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போது, வர்த்தகரின் தொலைபேசி இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொலைபேசி ஊடாக கிடைத்த சிக்னல்களுக்கு அமைய விசாரணை நடத்திய போது அவரது தொலைபேசி பொரள்ளை மயானத்திற்கு அருகில் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதில் சந்தேகமடைந்த அவரது மனைவி, விரைந்து செயற்பட்டு நிறுவனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரிடம் கூறி பொரள்ளை மயானத்திற்கு அருகில் பார்க்குமாறு அனுப்பி வைத்துள்ளார். 

இதன்போது, அங்கிருந்த காரொன்றில், தினேஷ் சாப்டர் கைகள் கட்டப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அங்கு சாரதியும் கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் தினேஷ் சாப்டர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி இன்று இரவு அவர் உயிரிழந்துள்ளார்.


 


Post a Comment

0 Comments