எதிர்காலத்தில் பெற்றோலிய வளம் முற்றாகத் தீர்ந்துபோகலாமென்று விஞ்ஞானிகள் ஹேஸ்யம் கூறியிருப்பதால், மாற்று எரிபொருள் அல்லது சக்தி மூலங்களைக் கண்டுபிடிப்பதில் நாடுகள் பல ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
அண்மைக்காலத்தில் தாவர எண்ணெய் வகைகளை எரிபொருளாகப் பயன்படுத்தும் முயற்சியில் ஓரளவு வெற்றி காணப்பட்டமையால், ஜெர்மனியில் தாவர எண்ணெய் கொண்ட எரிபொருள் கொண்டு விமானமொன்று கூட இயக்கப்பட்டதாகவும், மோட்டார் வாகனங்கள் இயங்குவதாகவும் கூறப்படுகின்றது. இதன் உண்மைத் தன்மை இதுவரை வெளியாகவில்லை.
கோதுமை, நெல், சோளத்திலிருந்து எரிபொருள் உண்டாக்கும் முயற்சிகளும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா மூலிகைப் பெற்றோல் உண்டாக்குவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அறிய முடிகின்றது.
இலங்கையில் இலங்கை கிழக்கு கடற்படுகையில் பெற்றோலிய வளம் காணப்படுவதாக நீண்ட காலமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டு வந்துள்ளபோதிலும், வளத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான ஆக்கபூர்வமான ஆரம்பமொன்று தொடங்கப்படுத்தப்பட்டு, சில காலங்களுக்கு முன் Total (France) மற்றும் Equinor (Norway) ஆகிய நிறுவனங்களுடன் கூட்டிணைந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அது இடையில் கைவிடப்பட்டதாகவும் அறிய முடிந்தது.
பெற்றோல் என்று நாம் அழைக்கின்ற திரவ எரிபொருளை அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் Gasoline என்றே அழைக்கின்றன. சுருக்கமாக இதனை Gas என்று அவர்கள் அழைப்பார். ஆனால் நம் நாட்டில் Gas என்றால் சமையல் செய்வதற்கு அடுப்பு மூட்டப் பயன்படும் எரிபொருளாகும்.
பெற்றோலியம் என்பது நிலத்துக்குக் கீழ் இயற்கையாகக் காணப்படுகின்ற எண்ணெய்த் தன்மையான திரவமாகும். இதனை சுத்திகரிக்கப்படாத எண்ணெய் (Crude Oil) என அழைப்பர்.
பெற்றோலியம் என்றால் பாறை எண்ணெய் என்பது பொருளாகும். அதாவது Petre என்றால் “பாறை” என்றும் Oleum என்றால் “எண்ணெய்” என்றும் அதனைப் பிரித்துக்கூறலாம்.
பெற்றோலியம் பெரும்பாலும் காபனையும், ஐதரசனையும் கொண்ட ஐதரசக்காபன்களாகும். சுத்திகரிக்கப்படாத பெற்றோலியம் பராபின், நப்தீன், இரண்டின் கலப்பும் என்ற மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பெற்றோல் பெறப்படும் நோக்கில், முதலாவது எண்ணெய்க் கிணறு 1857 - 1859 ஜெர்மனி நாட்டில் தோண்டப்பட்டாலும், 1859ல் அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மாநிலத்தில் ஒயில்கிரிக் என்ற இடத்துக்கருகில் எட்வின் ட்ரேக் என்பவர் தோண்டிய எண்ணெய்க் கிணறே முதலாவது எண்ணெக் கிணறாகக் கொள்ளப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட பெற்றோலிய வளத்தைக் கண்டுபிடிக்கும் துரித வேலைத்திட்டங்களால் சோவியத் ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, சவூதிஅரேபியா, ஈரான், ஈராக், வெனிசூலா, கனடா, நைஜீரியா, அங்கோலா, குவைத் போன்ற நாடுளிலெல்லாம் எண்ணெய்க் கிணறுகள் அகழ்வு செய்யப்பட்டு, அந்நாடுகள் பெற்றோலிய வளமிக்க நாடுகளாக மாறின.
கடல்வாழ் உயிரினங்களும், கடலைச் சென்றடையும் தாவரப்பகுதிகள் மற்றும் கழிவுகளும் கடல்தரைக்கடியில் சென்று சிதைவடைந்து பல்லாயிரம் வருடங்கள் தேங்கிக் கிடப்பதாலேயே பெற்றோலியம் உருவாகியதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய இச்செயல் முறையானது இப்போதும் தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கின்றது.
சிதைவுகள், படிவுகள் அவற்றின் பாரம் காரணமாக கடற்றரையினுள் அமிழ்ந்துகொண்டே போகும். புதிய படிவுகள் அதன்மேல் படியும்போது கீழ்ப்படையின் அமுக்கம் பல்லாயிரம் மடங்கு அதிகரிக்கும். அத்தோடு அவற்றின் வெப்பநிலையும் பலநூறு பாகைகளாக உயரும். இந்நிலையில் சேறும் மணலும் கற்பாறைகளாக இறுகும்போது, விலங்குகளின் ஓடுகள் சுண்ணாம்புப் பாறைகளாக மாற, இறந்த உயிரினங்களின் பாகங்கள் எண்ணெயாகவும், இயற்கை வாயுவாகவும் மாற்றமடையும். எண்ணெயாக மாற்றமடைந்த சிதைவுகள் திரவ நிலையில் மேலெழும்பத் தொடங்கும்போது, பாறைகளால் தடுத்து நிறுத்தப்படுவதானால் ஓரிடத்தில் சேர்கின்றது.
இவ்வாறு சேர்க்கப்படுகின்ற எண்ணெயானது, மிதமான அமுக்கத்தையும் மீறி பாறைகளுக்கூடே கடலுக்குள் அல்லது தரைமீது கசியத் தொடங்கும்.
ஆரம்பத்தில் அவ்வாறான எண்ணெய்ப் படிவுகள் கசிந்த தரைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அங்கு கிடைத்த எண்ணெயை தீப்பந்தங்களை எரிக்கவும், மரத்தோணிகளை நீரிக்காப்புச் செய்யவும், உடலில் ஏற்படும் நோவுகளுக்குப் பூசவும் பயன்படுத்தினர்.
தொடர்ந்து வந்த கைத்தொழில் புரட்சியும், மோட்டார் வாகனக்கண்டுபிடிப்பும் எரிபொருள் தேடலுக்கு வழிவகுத்தது. பெற்றோலிய வளம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் திமிங்கில எண்ணெய், மிருகக் கொழுப்பு, எண்ணெய்த் தன்மை கொண்ட மரவிதைகள் (உ+ம்: கெகுன விதை)என்பவற்றைப் பயன்படுத்தியே மக்கள் தமது வசிப்பிடங்களில் இரவு காலத்தில் வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.
இவை எரிகின்றபோது ஏற்படும் துர்நாற்றமும், இவற்றைத் தேடிக்கொள்வதிலுள்ள சிரமமுமே பெற்றோலிய எண்ணெய்க்கான தேடலைத் தூண்டிவிட்டதெனலாம்.
தரையில் கசிந்த எண்ணெயை மண்ணெண்ணெயாகப் பிரித்தெடுக்கும் முறையை 1852ம் ஆண்டில் கனடா நாட்டைச் சேரந்த வைத்தியரும், புவியியலாளருமான அப்ரஹாம் கெஸ்னர் (Abraham Gessner) கண்டறிந்தார்.
1855ல் அமெரிக்கா இரசாயனவியலாளர் பெற்றோலியத்தைப் பிரித்தெடுப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய பெற்றோலியப் பொருட்கள் எவை என்பது பற்றிய அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பித்ததன் பின்னரே எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிய முடிகின்றது.எண்ணெய்க் கிணறுகள் பெரும்பாலும் கடலுக்கடியிலுள்ள தரையிலும், கடலோரத்திலும் தோண்டப்படுகின்றன.
எண்ணெய்க்கிணறுகளிலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் (Crude Oil) சுத்திகரிப்பு ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு வெப்பப் பிளப்பு (Thermal Cracking) செயல்முறை மூலம் பெற்றோலியக் கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
எண்ணெய் சுத்திகரிப்பின் மூலம், எரிபொருள் வாயு, பெற்றோல், டீசல், ஜெட் எண்ணெய், மண்ணெண்ணெய், மசகு எண்ணெய், வெஸ்லின், கிறீஸ், மெழுகு, தார் முதலியன பெறப்படுகின்றன. அல்கஹோல், மருந்துகள், செயற்கை றப்பர், பசளை, நைலோன், பிளாஸ்டிக், வண்ணப்பூச்சு, பொலியேஸ்டர், வெடிமருந்து, சாயங்கள் போன்ற தயாரிப்புக்களுக்கு மூலப்பொருளாகப் பெற்றோலியம் கொள்ளப்படுகின்றது.
இலங்கையில் தற்போது சுத்திகரிக்கப்படாத எண்ணெய் (Crude Oil) இறக்குமதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மேற்படி நுகர்பொருட்களின் உற்பத்தியில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றது!
0 Comments